பேஷன் டெக்னாலஜி படிக்க ஆசைப்பட்ட மாணவி: வங்கிக் கடனுக்காக காத்திருந்த நிலையில் தற்கொலை - காரணம் என்ன?

Youtube Video

மதுரையில், பேஷன் டிசைன் படிப்பதற்காக கல்விக் கடன் வாங்க முயன்ற மாணவி, கடன் கிடைக்காத நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 • Share this:
  மதுரை தெப்பக்குளம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் 19 வயதான தாரிணி. 2019ம் ஆண்டு பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற தாரிணி, சட்டப்படிப்பு படிக்க விண்ணப்பித்து இடம் கிடைக்காததால், சென்னை மயிலாப்பூரில் உள்ள ஐகேட் என்ற பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் படிப்பதற்காக விண்ணப்பித்தார்.

  கல்விக் கட்டணம் 6 லட்சம் ரூபாய் வரையிலும் வருவதால் வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்த கல்லூரி நிர்வாகம், அதற்கான சான்றிதழையும் தாரிணிக்கு அனுப்பியுள்ளது. அதன் அடிப்படையில் அந்தக் கல்வி நிறுவனத்தில் சேர்வதற்காக தாரிணி, 30 ஆயிரம் ரூபாய் சேர்க்கைக் கட்டணம் செலுத்தியுள்ளார்.

  மேலும் வங்கிகளில் கல்விக் கடன் பெற வேண்டும் என்று கூறி அவ்வப்போது தாரிணி வீட்டிலிருந்து பணம் வாங்கியுள்ளார். இதுவரை மொத்தமாக 1,04,000 ரூபாய் வரை வாங்கியதாக கூறப்படுகிறது.

  வெள்ளிக்கிழமை அன்று தாயிடம் இருந்து மேலும் 23 ஆயிரம் பெற்று அனுப்பியுள்ளார் தாரிணி. வெள்ளிக்கிழமை பணம் அனுப்பிய பின் தாரிணியின் தாய் செல்வராணி வீட்டிற்குப் பொருள் வாங்க வெளியில் சென்றுள்ளார்.

  சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது, தாரிணி வீட்டில் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். வழக்குப் பதிவு செய்த தெப்பக்குளம் போலீசார், தாரிணியின் செல்போனைக் கைப்பற்றி அதில் வந்த அழைப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

  தாரிணியின் செல்போனுக்கு கடைசியாக வந்த குறுஞ்செய்தியில், மீனாட்சி பைனான்ஸ் என்ற பெயரில், 26 ஆயிரம் ரூபாய் செலுத்தும்படி குறிப்பிடப்பட்டிருந்தது.

  அந்த மீனாட்சி பைனான்ஸ் என்ற நிறுவனம் எங்குள்ளது? அந்த நிறுவனத்திடம் தான் தாரிணி ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபாயை இழந்தாரா? எதனால் திடீரென துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தெப்பக்குளம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: