10 ரூபாய்க்கு சாப்பாடு.. ஏழைகளின் அட்சயபாத்திரம் மதுரை ராமு தாத்தா காலமானார்..

மதுரையில் 1967-ஆம் ஆண்டு ஒரு ரூபாய்க்கு சாப்பாடு வழங்குவதில் தொடங்கி 10 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கி வந்த ஏழைகளின் அட்சயபாத்திரம் ராமு தாத்தா உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

10 ரூபாய்க்கு சாப்பாடு.. ஏழைகளின் அட்சயபாத்திரம் மதுரை ராமு தாத்தா காலமானார்..
ராமு தாத்தா
  • Share this:
மதுரையில் ராமு தாத்தாவின் வள்ளி உணவகத்தை தெரியாத ஏழைகள் இருக்க முடியாது. திருமங்கலம் அருகே உள்ள வில்லூர் கிராமத்தை சேர்ந்த ராமு தாத்தா, மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அருகே உள்ள பஜார் வீதியில் ஒரு ஓட்டுக்கடையில் 1967-ஆம் ஆண்டு உணவகம் ஒன்றை தொடங்கினார்.

கூட்டு பொரியலுடன் ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கிய அவர் தனது உணவகத்திற்கு வருவோரை இன்முகத்துடன் வரவேற்பது மட்டுமின்றி, வாடிக்கையாளர்கள் திரும்ப செல்லும் போது உணவு எப்படி இருந்தது என அக்கறையுடன் கேட்கும் வழக்கத்தையும் கொண்டவர்.

உணவகம் சிறிதாயினும் விலை குறைவு, உபசரிப்பு அதிகம் என்பதால் தினந்தோறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவர்களை பார்க்க வரும் பார்வையாளர்கள், பேருந்து நிலையத்தில் வேலை பார்க்கும் கூலி தொழிலாலர்கள் என தினந்தோறும் நூற்றுக்கணக்கானோரின் பசியை குறைந்த செலவில் ஆற்றினார்.


காலையில் 3 இட்லி, தோசை, பொங்கல் தலா 10 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்த ராமு தாத்தா காசு இல்லை எனக் கூறிய ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கி அகம் மகிழ்ந்தவர்.

வள்ளி உணவகத்தில் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறையே விலை உயர்த்தப்பட்டு வந்தது. 1967-இல் ஒரு ரூபாயாக இருந்த சாப்பாடு 1980-இல் இரண்டு ரூபாயாகவும், 1999-இல் 5 ரூபாயாகவும் உயர்ந்து, 2010-இல் இரு விதமான பொரியல், ரசம், சாம்பார், அப்பளம், மோருடன் வெறும் பத்து ரூபாய்க்கு உணவு வழங்கியவர் ராமு தாத்தா.
ஜிஎஸ்டி வரி அமலானபோது பிற உணவகங்களில் விலை கணிசமாக உயர்ந்த போதும் ராமு தாத்தாவின் வள்ளி உணவகத்தில் விலை உயரவில்லை. 4 ஆண் பிள்ளைகள், 3 பெண் பிள்ளைகள் இருந்தும் சொந்தக் காலில் நின்ற ராமு தாத்தாவின் தன்னம்பிகை மற்றும் சேவையை பாராட்டி பல்வேறு தனியார் அமைப்புகள் விருது வழங்கி கவுரவித்தன.

ராமு தாத்தாவின் சேவை தொடர சில நண்பர்கள், தனியார் அமைப்புகள் பண உதவி செய்த போது அந்த பணத்தை வைத்து உணவகத்தை பெரிதுபடுத்தாமல், உணவின் தரத்தை மேலும் உயர்த்திய உன்னத மனிதர் ராமு தாத்தா. 91 வயதான ராமு தாத்தா கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று மரணமடைந்தது மதுரை மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

அவரது உயிர் பிரிந்தாலும் பசியாறிய ஆயிரக்கணக்கான ஏழைகளின் நெஞ்சங்களில் ராமு தாத்தா வாழ்வது நிச்சயம்.

 
First published: July 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading