1,176 ஆக்ஸிஜன் படுக்கைகளும் நிரம்பிவிட்டன... அமைச்சர் மா.சுப்ரமணியத்திடம் அதிகரிக்கக்கோரிய மதுரை ராஜாஜி மருத்துவமனை டீன்

ஆக்சிஜன் சிலிண்டர். மாதிரிப்படம்.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து ஆக்சிஜன், ஐசியு படுக்கைகளும் நிரம்பி விட்டதாகவும், உடனடியாக கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் டீன் சங்குமணி முறையிட்டு உள்ளார்.

 • Share this:
  தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. நாள் ஒன்றுக்கு 30,000-த்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். அதனால், மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பிவழிகிறது. வட மாநிலங்களைப் போல தமிழகத்திலும் ஆக்ஸிஜன் படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுவருகிறது. பல மாவட்டங்களிலும் ஆக்ஸிஜன் படுக்கைக்காக நோயாளிகள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கும் சம்பவங்களும் ஏற்படுகின்றன.

  இந்தநிலையில், மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் & மக்கள் நல் வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையிலான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

  இந்த கூட்டத்தில் பங்கேற்ற மதுரை அரசு மருத்துவமனை டீன் பேசுகையில், "மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மொத்தம் 1,651 படுக்கைகள் உள்ளன. இதில் 1,176 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதிகள் உள்ளன. ஐசியு படுக்கைகள் 334 உள்ளன.

  இதில் ஆக்சிஜன் படுக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டன. ஐசியு படுக்கைகள் மூன்று வாரமாக நிரம்பி உள்ளன. எனவே கடும் நெருக்கடியாக உள்ளது. எனவே, கூடுதலான படுக்கைகளும், ஆக்சிஜன் படுக்கைகளும் அதிகரிக்க வேண்டும். தமிழகத்தில் அதிக ஆக்சிஜன் படுக்கைகள் உள்ள மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனைத்து படுக்கைகளும் நிரம்பி விட்டதால் அதை அதிகரித்து தரவேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: