Home /News /tamil-nadu /

மதுரை ரயில் நிலையம் இனி இப்படி மாறப்போகுது..! - ரூ.440 கோடியில் மறுசீரமைப்பு - முழு விவரம்

மதுரை ரயில் நிலையம் இனி இப்படி மாறப்போகுது..! - ரூ.440 கோடியில் மறுசீரமைப்பு - முழு விவரம்

புதுப்பிக்கப்படவுள்ள மதுரை ரயில் நிலையம்

புதுப்பிக்கப்படவுள்ள மதுரை ரயில் நிலையம்

மதுரை ரயில் நிலையம் மட்டும் ரூ.440 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளது. அந்தப் பணிகளை பிரதமர் மோடி நாளை தொடங்கிவைக்கவுள்ளார்.

மதுரை ரயில் நிலையத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிகளை நாளை பிரதமர் மோடி துவக்கி வைக்கவுள்ள நிலையில், ரயில் நிலைய வளாகத்தில் செய்யப்படவுள்ள மாற்றங்கள் குறித்து மதுரை ரயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய ரயில் நிலையங்களை மொத்தமாக ரூ.1,800 கோடி மதிப்பில் மறு சீரமைப்பு செய்வதற்கான பணிகளை துவக்கி வைக்கவுள்ளார்.

மதுரை ரயில்நிலையம்


இதில் மதுரை ரயில் நிலையம் மட்டும் ரூ.440 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளது. அதன்படி, ரயில் நிலைய வளாகத்தினுள் போக்குவரத்து வசதிகளை எளிமைப்படுத்துதல், பயணிகள் மற்றும் பார்சல் சேவைகளுக்கு தனித்தனி வழி அமைத்தல், வாகன நெரிசலை குறைக்க தேவையான கட்டமைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மதுரை ரயில்நிலையம்


முதல் தளத்தில் பயணிகள் வருகை மற்றும் புறப்பாட்டுக்கு தேவையான பிரத்யேக அரங்கு ஏற்படுத்தப்பட்டு, அங்கு அனைத்து நடைமேடைகளுக்கும் செல்வதற்கு ஏதுவாக லிப்ட், எஸ்கலேட்டர் வசதி மற்றும் ஓய்வு அறைகள், கழிப்பறைகள், உணவகங்கள் உள்ளிட்ட வசதிகள் உருவாக்கப்பட உள்ளன.

250 நான்கு சக்கரம் வாகனங்கள் மற்றும் 2,000 இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கென தனித்தனியாக பல்லடுக்கு வாகன காப்பகங்கள், பெரியார் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் சுரங்கப்பாதை; இரு சக்கர வாகனம், ஆட்டோ, நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கென தனித்தனி வழிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.

இவை தவிர்த்து, 6 நடைமேடைகளையும் புதிப்பித்தல், பார்சல் பகுதிகளை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட பல பணிகளும் 26 மாதங்களில் நிறைவு பெறும் என மதுரை ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதே போல, ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலும் ரூ.120 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள பல்வேறு விரிவாக்கம் மற்றும் சீரமைப்பு பணிகள் 18 மாதங்களில் நிறைவுறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Karthick S
First published:

Tags: Madurai

அடுத்த செய்தி