தமிழகத்தில் முதன்முறையாக ரவுடிகளின் தரவுகளை கையாள்வதற்கு பிரத்யேக மொபைல் அப்ளிக்கேஷனை பயன்படுத்தி சாதித்துள்ள மதுரை மாநகர காவல்துறைக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிக குற்ற சம்பவங்கள் நடக்கும் மாவட்டங்களில் மதுரையும் ஒன்று. மாநகர் பகுதிகளில் மட்டும் சுமார் 1600-க்கும் மேற்பட்ட நபர்கள் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், சுமார் 600-க்கும் மேற்பட்ட ரவுடிகள் 25 தனித்தனி கும்பல்களாக இயங்கி கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2020 ஜூலை மாதம் மதுரை காவல் ஆணையராக பிரேம் ஆனந்த் சின்ஹா பொறுப்பேற்ற உடனேயே, குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் அனைவரையும் அடக்கி, ஒடுக்கும் நடவடிக்கைகளை கையில் எடுத்தார். அதன் முக்கிய பணியாக, காவல் உயர் அதிகாரிகள் மட்டும் பயன்படுத்தும் வகையில் ஒரு பிரத்யேக மொபைல் செயலி ஒன்றை வடிவமைக்க உத்தரவிட்டார்.
அதில், ரவுடிகள் தொடர்பான முழு விபரங்களையும் தனிக்குழு அமைத்து பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டார். அதன் பலனாக மதுரையில் உள்ள எந்த ஒரு ரவுடியை பற்றிய எந்த விபரத்தையும் காவல் இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், தனிப்படை போலீசார் ஆகியோர் நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள முடியும்.
இதையும் படிங்க: விமானப்படை பெண் அதிகாரி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதில் குழப்பம்!
அந்த செயலியில், ரவுடிகள் குறித்த பல்வேறு தகவல்களை பல்வேறு விதமாக வகைப்படுத்தி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ரவுடிகளின் பெயர் வாரியாக, காவல் நிலையம் வாரியாக, கும்பல் வாரியாக அவர்களின் வழக்கு விபரங்கள், அவர்கள் சிறையில் உள்ளார்களா, வெளியில் உள்ளார்களா, தலைமறைவாக உள்ளார்களா, சம்பந்தப்பட்ட ரவுடி கும்பல் யாருக்கு எதிராக செயல்படுகிறது என்பவை உள்ளிட்ட அத்தனை தகவல்களையும் ஒரு நொடியில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், ரவுடிகளின் அண்மை தகவல்களும் தனி குழுவினரால் உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஏற்படுத்தி வைத்திருந்த இந்த டிஜிட்டல் கட்டமைப்பின் மூலமாக, தற்போது தமிழகம் முழுவதும் காவல்துறை நடத்திய ‘டிஸ் ஆர்ம்’ ஆபரேஷனில் மதுரை மாநகர காவல்துறையினரின் செயல்பாடு டிஜிபியின் தனிக்கவனத்தையும், பாராட்டையும் பெற்றுள்ளது.
மேலும் படிக்க: நியூட்ரினோ திட்டத்தை கைவிட தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தல்
இந்த மொபைல் அப்ளிக்கேஷன் மூலமாக ரவுடிகளின் தரவுகளை சேகரிப்பதில் நேரத்தையும், உழைப்பையும் வீணடிக்காமல் நொடி பொழுதில் நேரடியாக ஆபரேஷனில் இறங்க முடிந்ததாக மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.மேலும், மதுரை மாநகரில் இதுவரை 600-க்கும் மேற்பட்ட ரவுடிகளை விசாரணை செய்தும், 40-க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்தும், பல்வேறு ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாகவும் பிரேம் ஆனந்த் சின்ஹா குறிப்பிட்டுள்ளார்.
இந்த மொபைல் அப்ளிக்கேஷன் நடைமுறை மிக எளிதான ஒன்று எனவும், சில வாரங்களிலேயே இந்த வசதியை ஒரு மாநகரத்தில் ஏற்படுத்தி விட முடியும் என்றும், இது ரவுடிகள் மீதான கண்காணிப்பை வலுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
டிஸ்ஆர்ம் ஆபரேஷன் தொடர்பாக மதுரையில் தென் மாவட்ட காவல் உயர் அதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திர பாபு சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் இந்த மொபைல் அப்ளிகேஷனின் பயன்பாடுகளை வியந்து பாராட்டிய அவர், இதே நடைமுறையை தமிழகம் முழுவதும் விரிவு படுத்த உத்தரவிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.