ஒரு போஸ்டர் கூட இல்லாத 'ஒத்தவீடு' கிராமம்.. மதுரையில் 100 ஆண்டுகளுக்கு மேலாக புரட்சி செய்யும் சிறிய ஊர்

ஒரு போஸ்டர் கூட இல்லாத 'ஒத்தவீடு' கிராமம்.. மதுரையில் 100 ஆண்டுகளுக்கு மேலாக புரட்சி செய்யும் சிறிய ஊர்

ஒத்தவீடு கிராமம்

ஊரில் தென்பட்டவர்களிடம் கேட்ட முதல் கேள்வியே "அதென்ன ஒத்தவீடு?" என்பது தான்.

  • Share this:
மதுரையில் இது வரைக்கும் அரசியல், சினிமா, திருமணம் சார்ந்த எந்தவிதமான விளம்பரங்களும் இல்லாத ஒரு ஊர் உண்டு. அதன் பெயர் ஒத்தவீடு. பல இடங்களில் சில நாட்களுக்கு கூட கடைப்பிடிக்க முடியாத ஒரு பழக்கத்தை, ஒரு சிறிய கிராமம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றி புரட்சி செய்தது வருகின்றனர்.

மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருப்பாயூரணி பகுதியில் ஒத்தவீடு எனும் சிறிய ஊர் உள்ளது. ஊருக்குள் நுழையும் முன், "இக்கிராமத்தில் எங்கும் நோட்டீஸ் ஒட்டவோ, அச்சு பதிக்கவோ கூடாது" என்ற வாசகத்துடன் ஒத்தவீடு ஊரின் பெயர் பலகை வரவேற்கிறது.



வண்டியூர் பஞ்சாயத்து பகுதிக்குள் இருந்த இவ்வூர், இப்போது மதுரை மாநகராட்சி பகுதிக்குள் இணைக்கப்பட்டாலும், கோவில் பஞ்சாயத்து திண்ணை, பழைய பேருந்து நிறுத்தம், காமராஜர் திறந்து வைத்த மனமகிழ் மன்றம் என காண்பவை எல்லாம் கிராமத்தின் சாயலை அப்படியே பிரதிபலிக்கின்றன.

ஊரில் தென்பட்டவர்களிடம் கேட்ட முதல் கேள்வியே "அதென்ன ஒத்தவீடு?" என்பது தான்.

"100 ஆண்டுகளுக்கு முன்பு காடாக கிடந்த இப்பகுதிக்குள், திருமங்கலத்தில் இருந்து 3 குடும்பத்தினர் வந்துள்ளனர். அவர்கள் ஒரு வீட்டில் தங்கியுள்ளனர். அவர்கள் இருந்த அந்த ஒரு வீட்டை குறிப்பிடும் பொருட்டு உருவான வார்த்தையே ஊரின் பெயராக மாறி விட்டது. புகழ்பெற்ற காந்தியவாதி என்.எம்.ஆர். சுப்புராமனின் வீடு தான் அந்த ஒத்த வீடு" என பெருமையுடன் பதிலளித்தனர்.

ஒரு வீடு இப்போது சுமார் 300 வீடுகளாகவும், 650 வாக்காளர்கள் கொண்ட ஊராகவும் மாறியுள்ளது. ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் மட்டும் அப்படியே உள்ளன.

அரசியல் சார்ந்த போஸ்டர், பேனர், கொடி, சிலைகள் என எந்த விளம்பரங்களும் ஊருக்குள் வராமல் பார்த்துக் கொள்கிறார்கள் மக்கள். அதுமட்டுமல்ல, திருமணத்திற்கு கூட போஸ்டர், பேனர் வைப்பதில்லை. முன்னோர்களின் கட்டுப்பாடுகளை பின்பற்றும் விதமாக சினிமா பிரபலங்களுக்கு கூட இந்த ஊர் இளசுகள் எந்த விளம்பரமும் செய்வதில்லை.



இந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்த 69 வயது இளங்கோவன் கூறுகையில், "அரசியல் சார்புகள் இருந்தால் போட்டி ஏற்படும். ஊரினுடைய ஒற்றுமைக்கும், அழகிற்கும் பங்கம் ஏற்படும் என்ற காரணத்திற்காக இந்த கட்டுப்பாட்டை பின்பற்றி வருகிறோம்.

ஆனால், கட்சி சார்பின்றி அனைத்து வேட்பாளர்களும் வாக்கு சேகரிக்க வருவார்கள். வருபவர்களை வரவேற்போம், உரிய மரியாதை செய்து தேவையான கோரிக்கைகளை தெரிவித்து அனுப்புவோம்" என்றவர், "மக்களின் பணியை நாங்கள் சரியாய் செய்கிறோம். அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் அவர்களுடைய பணியை சரியாய் செய்வதில்லை. சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவைகள் இன்னும் சரியாக கிடைக்கவில்லை" என வருத்தத்துடன் தெரிவித்தார்.

”யாரும் இறந்தாலும் கூட பாரம்பரிய முறைப்படி தப்பு மட்டுமே வைத்து அடக்கம் செய்வோம். பேனர் மற்றும் கொட்டு மேளம் கூட வைத்துக்கொள்ள மாட்டோம். அனைத்து ஜாதியினரும் வசித்தாலும், யாரிடமும் எந்தவித பாகுபாடும் இருக்காது” என்றார் முத்து.

எங்கள் ஊர் அழகான, பெருமை பெற்ற ஊர் தான். ஆனால் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு கருப்பாயூரணி வரை செல்ல வேண்டியுள்ளது. எனவே இங்கு ரேஷன் கடை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, நல்ல குடி தண்ணீருக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்  பழனியம்மா என்ற மூதாட்டி.

வெளியூரிலிருந்து வரும் நண்பர்கள் எங்கள் ஊரை பார்த்து பார்த்து பிரம்மிப்பார்கள். நகரத்தை போன்ற மாறுதல்களுக்கு ஊர் பழகி இருந்தாலும், கிராமத்தை போல மாறாத கட்டுப்பாடுகளையும் கொண்டிருக்கிறது” என பெருமையுடன் கூறினார் இளம்பெண் கிருத்திகா.

ஒற்றை வீட்டை கொண்டிருந்த ஒரு சிறு ஊர் தனது ஒற்றை இலக்கில் மாறாமல் பல தலைமுறைகளாக பயணிப்பது ஒருபுறம் பெருமையளித்தாலும், அடுத்த தலைமுறை நிம்மதியாக வாழ தேவையான அடிப்படை வசதிகள் கூட இங்கு இன்னும் பூர்த்தியடையாமல் இருப்பது வருத்தத்தையே அளிக்கிறது.
Published by:Vijay R
First published: