மதுரையில் இளைஞர் ஓட ஓட விரட்டிக் கொலை! சகோதரர்கள் மூவர் கைது

மதுரையில் இளைஞர் ஓட ஓட விரட்டிக் கொலை! சகோதரர்கள் மூவர் கைது
கொலை
  • Share this:
மதுரையில் பட்டப்பகலில் ஓட ஓட ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சகோதரர்கள் மூவரை போலீசார் கைது செய்ததுள்ளனர்.

மதுரை எஸ்.ஆலங்குளம் எஸ்விபி நகரை சேர்ந்த சுப்பையாவின் மகன் 23 வயதான உதயகுமார்.  சனிக்கிழமை மாலை டிசைன் நகர் 1-வது தெருவில் உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் உதயகுமாரை சரமாரியாக வெட்டினர்.

அவர்களிடமிருந்து தப்பித்து உதயகுமார் ஓடினார். ஆனால் அவரை விடாமல் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிவிட்டு இருவரும் தப்பியோடினர். இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்த உதயகுமார் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.


அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில், விரைந்து சென்ற கூடல்புதூர் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்தபோது, உதயகுமாருக்கு, கடந்த ஆண்டு ஆஸ்டின்பட்டி பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றில் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.

இதை அடுத்து அந்த கொலைக்கு பழிக்கு பழியாக உதயகுமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். அதில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. கொலை நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், கொலையாளிகளின் உருவம் போலீசாருக்கு கிடைத்தது.

அதை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், கொலையாளிகள் கூடல்புதூரைச் சேர்ந்த 23 வயதான தியாகு என்ற தியாகராஜன், 25 வயதான துரைப்பாண்டி என்பது தெரிய வந்தது. இதை அடுத்து அவர்களை பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது.கொலையில் ஈடுபட்ட தியாகு, துரைப்பாண்டி இருவரும் சகோதரர்கள். இவர்களின் அண்ணன் சரண்ராஜ் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். வேலைக்கு போகும்போதும், வரும்போதும் அந்த வழியில் நின்றுகொண்டு ரவுடி உதயகுமார் கிண்டல் செய்து வந்துள்ளார்.

இதை தனது சகோதரர்கள் தியாகு மற்றும் துரைப்பாண்டியிடம் சரண்ராஜ் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சகோதரர்கள் இருவரும் ரவுடி உதயகுமாரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொன்றது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சகோதரர்கள் சரண்ராஜ், தியாகு, துரைப் பாண்டி ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அண்ணனை கிண்டல் செய்ததற்காக மட்டும் தம்பிகள் இருவரும் சேர்ந்து ரவுடியை கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் முன் விரோதம் உள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குடித்த டீக்கு காசு கேட்டதற்காக டீக்கடைக்காரர் கொலை, வாகனத்தில் வழிவிட மறுத்ததால் வாகன ஓட்டி கொலை, மகளை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்டதால் தந்தை கொலை என அற்ப காரணங்ககெளுக்கு எல்லாம் கொலை நடக்கும் மதுரையில், அண்ணனை கிண்டல் செய்ததற்காக தம்பிகள் சேர்ந்து ரவுடியை கொலை செய்த சம்பவமும் சேர்ந்துள்ளது.

Also see:

First published: January 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்