மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிக்குப் படுக்கை கிடைக்க வேண்டுமென்றால் ஏற்கனவே படுக்கையில் இருக்கும் நோயாளி படுக்கையைவிட்டு அகன்றால் மட்டுமே புதிய நோயாளிக்குப் படுக்கை கிடைக்கும். இதுதான் இன்று தனியார், அரசு மருத்துவமனைகளின் நிலைமை. இதுதான் அபாய கட்டத்தின் ஆரம்பம்.
“ஆக்சிஜன் சிலிண்டர்கள் கையிருப்பு நாளை (7-மே-2021 வெள்ளி) வரை மட்டுமே இருக்கும் என்றும் அதற்கு அடுத்த நாள் (8-மே-2021 சனிக்கிழமை) மிகவும் மோசமான சூழ்நிலையை எட்டிவிடுவோம்” என்றும் சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு மருந்துக்கழக நிர்வாக இயக்குனர் உமாநாத் தெரிவித்துள்ளார். இதுதான் தமிழகம் முழுவதும் உள்ள நிலை.
கேரளாவில் உள்ள கஞ்சிக்கோட்டில் இருந்து தென்தமிழகத்துக்கு வழங்கப்பட்டுக்கொண்டிருந்த 40 டன் ஆக்சிஜன் ஒன்றிய அரசின் புதிய உத்தரவால் நிறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக அதனை வழங்க ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
நேற்று ஒன்றிய அரசு பிறப்பித்த உத்தரவில் தமிழகத்தின் ஆக்சிஜன் தேவையை முற்றிலும் கணக்கில் எடுத்துக்கொள்ளாத அணுகு முறையையே கடைபிடித்துள்ளது. நமது ஆக்சிஜன் தேவை இரண்டு மடங்காக அதிகரித்த நிலையிலும் மத்திய ஒதுக்கீட்டில் இருந்து நமக்கு அதிகப்படுத்தித்தர மறுக்கிறார்கள்.
நிலைமை அனைத்து வகையிலும் கைமீறிக்கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசிடமிருந்து நமக்கான உரிமையைக் கேட்டுப் பெறுகின்ற போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம். இப்பொழுது உடனடித்தேவை போர்கால அடிப்படையிலான மேலாண்மைத்திறன். ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்குப் படுக்கைகளை உறுதிப்படுத்துவது. ஆக்சிஜன் தேவைப்படாத நோயாளிகளை ஆக்சிஜன் படுக்கையில் இருந்து மாற்றுவது, கூர்மையான மருத்துவக் கண்காணிப்பின் அடிப்படையில் இப்பணியை செய்தால் நம்மால் பலரின் உயிரை இந்த அபாய கட்டத்திலும் காப்பாற்ற முடியும்.
மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் ஒவ்வொரு மணிநேரத்துக்கு ஒரு முறை நிலைமையை உன்னிப்பாகக் கவனித்துப் பணியாற்ற வேண்டும். நாளை பொறுப்பேற்கப்போகும் நம் முதல்வர் மருத்துவ அவசரநிலை போன்று நிலைமை உள்ளதால் கட்டளை அறை அமைக்க உத்தரவிட்டுள்ளார். மாவட்ட அளவிலான கட்டளை அறைகளின் செயல்பாடும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
பேரிடரக் காலத்தில் அதிகாரத்தில் இருப்பவர்களின் சிறு அசைவும் செயல்களும் மனித உயிர்களைக் காக்கும் பெறுவாய்ப்பினைப் பெற்றிருக்கிறன என்பதை அனைவரும் உணர்ந்து செயல்படுவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona Vaccine, CoronaVirus, Su venkatesan