சித்தர் மகளுக்கு சித்ரவதை.. கவனித்துக்கொள்வதாக நாடகமாடி பணமோசடி..

சித்தர் மகளுக்கு சித்ரவதை.. கவனித்துக்கொள்வதாக நாடகமாடி பணமோசடி..

மதுரையில் ஆதரவு தேடி சென்ற பிரபல சித்தர் மகளை ஏமாற்றி பணத்தை பறித்ததுடன், அவரை கொலை செய்ய பெண்கள் இருவர் திட்டமிட்டுள்ளனர்.

  • Share this:
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிரசித்தி பெற்ற சித்தராக பலரால் வணங்கப்பட்டு வந்தவர் மௌனகிரி சுவாமிகள். 15 வருடங்களுக்கு முன்பு அவர் மறைந்த பிறகு, திருமணமாகாத அவரது மகன் ராஜா மற்றும் மகள் தங்கம் ஆகியோர் அருள்வாக்கு கூறும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

ராஜா கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் இறந்த நிலையில் 76 வயதான மகள் தங்கம், ஆதரவின்றி சிரமப்பட்டுள்ளார். மதுரையில் உறவினர்கள் இருக்கும் தகவல் அறிந்து கையிலிருந்த 1,50,000 ரூபாய் பணத்துடன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மதுரை சென்றுள்ளார். சென்ற இடத்தில் உறவினர்களை தேட முடியாமல் தவித்தவருக்கு மதுரை கோச்சடையில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் பணியாற்றிய கனகவள்ளி என்பவரின் அறிமுகம் கிடைத்தது.

வயது முதிர்வில் தனது நிலை குறித்து கனவகவள்ளியிடம் தங்கம் பகிர்ந்துள்ளார். தன்னிடம் இருக்கும் பணத்தை பற்றியும் கூறியுள்ளார். மூதாட்டியிடம் ஒன்றரை லட்ச ரூபாய் பணம் இருப்பது தெரிந்ததும் அதை எப்படியாவது அபகரிக்க திட்டமிட்டுள்ளார் கனகவள்ளி. இதற்காக தன்னுடன் பணியாற்றும் உறவினரான அங்கம்மாளிடம் விவரத்தைக் கூறியுள்ளார்.

மூதாட்டியை ஏமாற்றி பணத்தை சுருட்ட திட்டமிட்ட அவர்கள், தாங்களும் ஆதரவற்று இருப்பதாகவும் விரும்பினால் வந்து தங்களுடன் சேர்ந்து தங்கிக்கொள்ளுமாறு மூதாட்டி தங்கத்திடம் கூறியுள்ளனர். வேறு வழியின்றி மூதாட்டி ஒப்புக் கொண்டதும், மதுரை பொன்னகரம் காந்திஜி தெருவில் உள்ள மாடி வீடு ஒன்றில் மூதாட்டி தங்கத்தை குடியமர்த்தி உள்ளனர்.

உணவு உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் தாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி அவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாயை கேட்டுள்ளனர். சுதாரித்துக்கொண்ட மூதாட்டி பத்திரத்தில் எழுதி கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

அவர்களே ஒரு ஆவணத்தைத் தயார் செய்து அதில் பணம் பெற்றதற்கான கையெழுத்தை போட்டுள்ளனர். ஆனால் அந்த நகலை மூதாட்டியிடம் வழங்கவில்லை. இருப்பினும் பணம் கொடுக்கும் பொழுது அதை போட்டோ எடுக்க வேண்டும் என கறாராக கூறியதால் அப்பகுதியில் உள்ள ஸ்டூடியோ ஒன்றுக்குச் சென்று கனகவள்ளி மற்றும் அங்கம்மாளிடம் ஒரு லட்ச ரூபாயை கொடுக்கும் போட்டோவை எடுத்துக் கொண்டார்.

தொடக்கத்தில் மூதாட்டிக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்த அந்த இருவரும் சில நாட்களிலேயே தேனீர், உணவு என ஒவ்வொன்றாக குறைக்கத் தொடங்கியுள்ளதுடன், தங்கத்தை கொலை செய்யவும் முடிவெடுத்துள்ளனர். இதையடுத்து அவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.  மூதாட்டியிடம் இருந்து பணத்தை பெற்றதை ஒப்புக் கொண்ட கனகவள்ளியும், அங்கம்மாளும் பணத்தை திருப்பித் தருவதாக போலீசார் முன்னிலையில் தெரிவித்துள்ளனர்.
Published by:Vijay R
First published: