மறைந்த மனைவிக்கு தத்ரூபமாக சிலை நிறுவிய தொழிலதிபர் - மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்!

மறைந்த மனைவிக்கு தத்ரூபமாக சிலை நிறுவிய தொழிலதிபர் - மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்!

தமிழக தொழிலதிபர் ஒருவர் தனது மறைந்த மனைவியின் சிலையை வீட்டில் நிறுவிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

 • Share this:
  தமிழ்நாட்டில் மதுரை சேர்ந்த 74 வயது தொழிலதிபர் சேதுராமனின் மனைவி கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் உயிரிழந்துள்ளார். சேதுராமனின் மனைவி பிச்சைமணி அம்மாள் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.

  அப்போதிருந்து சேதுராமன் தனது மனைவியின் வெற்றிடத்தை நிரப்ப சிரமப்பட்டார். இதனையடுத்து தனது மனைவி இறந்த 30 நாளில் அவருக்காக 6 அடி உயரத்தில் வீட்டிலேயே  தத்ரூபமாக சிலை ஒன்றை வடிவமைத்துள்ளார்.

  பச்சை நிற சேலை அணிந்து பிச்சைமணி அம்மாள் உயிரோடு இருக்கும் வகையில் சிலையானது தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டள்ளது. இதுகுறித்து பேசிய சேதுராமன்,  முதலில் நான் அரசு சுகாதார ஆய்வாளராக பணியாற்றினேன். பின்னர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுவதற்காக எனது அரசு வேலையை விட்டுவிட்டேன். அப்போது நான் பல முறை நிதி இழப்புகளை சந்தித்தேன்.

  ஆனால் அவள் எப்போதும் சிறந்த நண்பரை போலவே என்னுடன் இருந்தாள், மிகக் கஷ்டமான அந்த வாழ்க்கை சூழலில் எனது மனைவி கொடுத்த ஊக்கத்தாலேயே நான் உயர்ந்த நிலையை அடைந்தேன். தற்போது சொந்தமாக மதுரையில் ரத்த வங்கி, மூன்று பெரிய திருமண மண்டபங்களை வைத்திருக்கிறேன். எனது 48 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் என் மனைவியை ஒரு நாள் கூட பிரிந்து இருந்ததில்லை என உணர்வுபூர்வமாக தெரிவித்துள்ளார்.

  மேலும் நான் சமீபத்தில் என் மனைவியை இழந்து தவித்தேன். அவளுடைய நிலையான இருப்பை உணரும் வகையில் சிலை அமைக்க முடிவு செய்தேன். தற்போது இந்த சிலையை பார்க்கும் போது என் மனைவி என்னுடன் இருப்பது போல உணர்கிறேன் என்று நெகிழ்ச்சியாக தெரிவிக்கிறார். ஃபைபர், ரப்பர் மற்றும் சில வண்ணங்களை பயன்படுத்தி 25 நாட்களில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

  இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்டனர். மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த பிரசன்னா என்ற சிற்பி இந்த சிலையை வடிவமைத்துள்ளார். மேலும் மருது என்ற ஓவியவர் சிலைக்கு வண்ணங்கள் அளித்து உயிரூட்டியுள்ளார். நவீன தொழில்நுட்பத்தில் 6 x 3 அடி உயரம் உடைய பிச்சைமணி அம்மாள் சிலையை வடிவமைத்துள்ளனர்.  இது நிரந்தரமாக இருக்கும் வகையில் சேதுராமன் வீட்டுக்குள்ளேயே நிறுவப்பட்டுள்ளது. உறவினர்கள் பலரும் இந்த சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

  சமீபத்தில் கர்நாடகா மாநிலம் கொப்பால் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஸ்ரீநிவாஸ் குப்தா என்பவர், மனைவிக்காக வடிவமைத்த சிலிக்கான் சிலை சமூக வலைதளங்கில் வைரலானது. இந்த நிலையில் மதுரையில் இதேபோல ஒரு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
  Published by:Vijay R
  First published: