3 ஆண்டுகளாக போட்ட திட்டம் தோல்வி... காவல்துறையில் சிக்கிய கள்ள நோட்டு கும்பல்

பிரேசில் நாட்டு கள்ள நோட்டுகளை எப்படியாவது மாற்றிவிடலாம் என ஒன்று திரண்ட கும்பல் இறுதியில் சிக்கியுள்ளது.

3 ஆண்டுகளாக போட்ட திட்டம் தோல்வி... காவல்துறையில் சிக்கிய கள்ள நோட்டு கும்பல்
கருணாமூர்த்தி, மகாலட்சுமி, தர்மராஜா
  • News18 Tamil
  • Last Updated: September 11, 2020, 8:51 PM IST
  • Share this:
பிரேசில் நாட்டு கரன்சியை கள்ளத்தனமாக அச்சடித்து அதை மாற்ற 3 ஆண்டுகளுக்கு முன்னர் வேதாரண்யத்தில் தொடங்கிய பயணம், தமிழகம் முழுவதும் சுற்றி மதுரையில் நிறைவடைந்துள்ளது. கடைசிவரை பணத்தை மாற்ற முடியாத கும்பல், இறுதியில் போலீசிடம் சிக்கியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கருணாமூர்த்தி. 3 ஆண்டுகளுக்கு முன்பு வேதாரண்யத்தை சேர்ந்த சலாவுதீன் என்பவரின் தொடர்பு ஏற்பட்டுள்ளது. சலாவுதீன் வெளிநாட்டு கரன்சிகளை கள்ள நோட்டாக அச்சடித்து சம்பாதித்து வருவது கருணாமூர்த்திக்கு தெரிந்துள்ளது.

கருணாமூர்த்தி, தான் மிகவும் வறுமையில் இருப்பதாக கூறியதை கேட்ட சலாவுதீன், பிரேசில் நாட்டைச் சேர்ந்த 1000 ரூபாய் நோட்டுக்கள் 385-ஐ கருணாமூர்த்தியிடம் கொடுத்துள்ளார். முடிந்தால் இதை யாரிடமாவது கொடுத்து ஏமாற்றி இந்திய பணமாக மாற்றி பயன் பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.


அந்த வெளிநாட்டு கரன்சிகளை யாரிடம் மாற்றுவது என்ற குழப்பத்தில் புதுக்கோட்டை மாவட்டம் துவாரகாம்பாள்புரத்தைச் சேர்ந்த தனது நண்பர் ராஜேந்திரன் என்பவரை தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறியுள்ளார் கருணாமூர்த்தி. ராஜேந்திரன் தனக்கு பழக்கமான சிவகங்கையை சேர்ந்த திருமாவளவன், குமார், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த ராமர், உதயகுமார் ஆகியோரை அழைத்துக்கொண்டு கருணாமூர்த்தியை சந்தித்துள்ளனர். அவர்களிடம் தான் வைத்திருந்த பிரேசில் நாட்டு கள்ள நோட்டுகளை கருணாமூர்த்தி காண்பித்துள்ளார்.

அவற்றைப் பார்த்த ராமர், தன்னால் இந்த பணத்தை இந்திய ரூபாயாக தன்னால் மாற்ற முடியும் எனக் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து கடந்த ஏழாம் தேதி பிரேசில் நாட்டு கள்ள நோட்டுகளுடன் சிவகங்கை சென்ற கருணாமூர்த்தி மற்றும் ராஜேந்திரன், திருமாவளவன் வீட்டில் வைத்து கள்ள நோட்டை இந்திய ரூபாயாக மாற்ற குழு ஒன்றை அவர்களுக்குள் நியமித்துக் கொண்டுள்ளனர்.

அதன்படி ராஜேந்திரன், திருமாவளவன், ராமர், உதயகுமார் கொண்ட குழு கள்ள கரன்சி நோட்டுடன் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கூடலூருக்கு சென்றுள்ளனர்.அங்கு பலரிடம் பணத்தை மாற்ற முயற்சித்து அது பலனளிக்காமல் தோல்வியில் முடிந்தது. அப்போது திருமாவளவன் தனக்கு மதுரையில் நண்பர் ஒருவர் இருப்பதாகவும் அவர் எளிதில் பணத்தை மாற்றித் தருவார் என கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து செப்டம்பர் 10-ம் தேதி அந்த குழுவினர் ரயில்வே நிலையம் முன்பு கூடியுள்ளனர்.

மதுரை மாவட்டம் எஸ்.பாப்பிநாயக்கன்பட்டி திமுக வட்டச்செயலாளர் தர்மராஜா என்பவரை தனது நண்பர் என திருமாவளவன் தன் குழுவினருடன் அறிமுகப்படுத்தியுள்ளார். பின்னர் தர்மராஜா மூலமாக மதுரை சொக்கலிங்கநகரைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவரை வரவழைத்து அனைவரும் ஒன்றாக ஆலோசித்துள்ளனர்.

அதன் பின்னர் மீனாட்சி பஜாரில் வெளிநாட்டு கரன்சிகள் மற்றுவோரிடத்தில் கள்ள நோட்டுகளை மாற்ற புறப்பட்டுள்ளனர். கொரோனா காலகட்டத்தில் 7 பேர் கூட்டமாக நடந்து சென்றதை கண்டு அப்பகுதியில் ரோந்தில் ஈடுபட்ட திலகர் திடல் போலீசார் விசாரித்ததில் அனைவரும் முன்னுக்கு பின் முரணான பேசியுள்ளனர்.இதனால் அனைவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில் கள்ள கரன்சி விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
தொடர்ந்து ஏழு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து பிரேசில் நாட்டின் கள்ள கரன்சிகளை கைப்பற்றினர்.
வெளிநாட்டு கள்ள கரன்சிகளை அச்சடித்த வேதாரண்யத்தை சேர்ந்த சலாவுதீன் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
First published: September 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading