மதுரை புது நத்தம் மேம்பாலத்தில் மீண்டும் விபத்து ஏற்பட்டு திருப்பாலை அருகே இரும்புக்கம்பி விழுந்ததில் தொழிலாளர் ஒருவர் மற்றும் வாகன ஓட்டி ஒருவர் என இரண்டு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
மதுரை புதுநத்தம் சாலையில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.545 கோடி மதிப்பில் மதுரை தல்லாகுளம் முதல் செட்டிகுளம் வரை 7.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கப்பட்டது.
2021 ஆகஸ்ட் 28 ஆம் தேதி மேம்பாலத்தின் இணைப்பு (சர்வீஸ்) பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்திற்கு உள்ளானதில், உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலாளர் உயிரிழந்திருந்தார்.
இந்த விபத்து தொடர்பாக JMC projects இந்தியா லிமிடெட் என்ற ஒப்பந்த நிறுவன திட்ட பொறுப்பாளர் பிரதீப் குமார் ஜெயின், கட்டுமானப்பணிகள் பொறியாளர் சத்தியேந்தர் வர்மா, ஹைட்ராலிக் மெஷின்கள் ஒப்பந்த நிறுவன பொறுப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் தரப்பு விளக்கம் கேட்கப்பட்டு சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
அந்த விபத்தில் தொடர்புடைய, தேசிய நெடுஞ்சாலை துறையால் நியமிக்கப்பட்ட 2 கண்காணிப்பு பொறியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு, ஒப்பந்த நிறுவனத்திற்கு 3 கோடி ரூபாய் அபராதமும், கட்டுமான ஆலோசனை நிறுவனத்திற்கு 40 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 30) இரவு 9:30 மணி அளவில் பாலத்தில் இரும்புக் கம்பி (Launching cable) பொருத்தும் பணியின் போது அந்தக் கம்பி உடைந்து விழுந்ததில் தஞ்சையை சேர்ந்த ஒப்பந்த பணியாளர் பாஸ்கர் (40) என்பவருக்கும், அப்பகுதியை சேர்ந்த விஷ்வா (40) என்பவருக்கும் தலையிலும், வயிற்றிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
Also read... பதிவேடுகள் சரிபார்க்கும் போது ஏற்பட்ட பிரச்சனை - பஞ்சாயத்து தலைவியை தாக்கிய ஊராட்சி செயலாளர்
கவனக்குறைவு காரணமாகவும், இரவில் போதிய வெளிச்சம் இன்றி பணி செய்ததன் காரணமாகவும் விபத்து ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், விபத்து குறித்து தல்லாகுளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே கடந்தாண்டு நடைபெற்ற விபத்தின் காரணமாக கால தாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து, 2022 அக்டோபர் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அந்த பாலத்தில் விபத்து ஏற்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.