Home /News /tamil-nadu /

விசிக மீது அவதூறு : பாமக நிறுவனர் ராமதாஸ் மீது வழக்கு தொடர்வோம் - திருமாவளவன் பேட்டி

விசிக மீது அவதூறு : பாமக நிறுவனர் ராமதாஸ் மீது வழக்கு தொடர்வோம் - திருமாவளவன் பேட்டி

திருமாவளவன் | ராமதாஸ்

திருமாவளவன் | ராமதாஸ்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது அவதூறு பரப்பி வரும் பாமக நிறுவனர் ராமதாஸ் மீது வழக்கு தொடுக்கப்படும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  மதுரை தனியார் உணவு விடுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

  செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “அரக்கோணம் இரட்டைக் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் புகார் பெறாமல் சௌந்தரராஜன் கொடுத்த வாக்குமூலத்தை மட்டுமே ஒரு புகாராக எடுத்துக் கொண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

  காவல்துறை ஒரு சார்பாக உள்நோக்கத்தோடு செயல்பட்டிருக்கிறது. எனவே அவர்கள் முழுமையாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிப்பதற்கு முகாந்திரம் இல்லை. புலனாய்வு விசாரணை தொடங்காமலேயே குடித்துவிட்டு இருதரப்பினர் இடையே வாக்குவாதம் செய்ததால் ஏற்பட்ட மோதல், அதனால் இந்த இரண்டு பேர் உயிரிழக்க நேர்ந்தது என்று காவல்துறை முன்கூட்டியே கருத்துச் சொன்னது விசாரணைக்கு எதிராக அமைந்துவிட்டது. எனவே இந்த இரட்டைக் கொலை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

  இந்த தேர்தலை ஒட்டி ஏற்பட்ட முரண்பாடு பதற்றம் அதனடிப்படையில் சாதிவெறியர்கள் பழிவாங்கும் நடவடிக்கையாக இதை செய்திருக்கிறார்கள் என்பது தான் நேர்மையான உண்மை அறியும் குழுவினர் முன்வைத்திருக்கும் தகவல். குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த நடவடிக்கை ஒரு காரணமாக அமைந்துள்ளது. இதை மூடி மறைக்கும் வகையில் சிலர் திசை திருப்பப் பார்க்கிறார்கள்.

  வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி இம்மாதிரியான இழப்புகள் ஏற்படுகிற போது அவர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வழங்குவதோடு அவர்கள் எதிர்காலத்தில் பொருளாதார ரீதியான பாதிப்பிற்கு உள்ளாக கூடாது என்ற அடிப்படையில் தலா இரண்டு ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என சட்டம் கூறுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இதுவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலம் வழங்கியதில்லை. சட்டப்படி வழங்கும் நிதியை கூட உடனே தருவதில்லை. அதற்கு போராட வேண்டியிருக்கிறது.

  தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சாதியின் பெயரால் வன்கொடுமை, ஆணவக்கொலைகள் அதிகம் நடக்கிறது. இந்தியாவிலேயே சாதிய வன்கொடுமைகள் நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. ஆகவே ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டை சாதிய வன்கொடுமை பிரதேசம் என்று அறிவிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

  தயானந்த கிராமத்தைச் சேர்ந்த தேவனந்தன் - சரஸ்வதி என்ற இளம்பெண் காதலின் பெயரால் கொடூரமாக கொல்லப்பட்டு இருக்கிறார். ஆனால் அந்த கொலையையும் சொந்த சமூகத்தைச் சார்ந்த பெண்ணின் இழப்பையும் தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்துகிறார் ராமதாஸ். அருவருப்பான அநாகரிகமான அரசியலை ராமதாஸ் கையில் எடுக்கிறார்.

  சரஸ்வதியின் கொலைக்கு காரணமாக காதல் இருக்கலாம். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை குறிவைத்து மறைமுகமாக தொடர்ந்து தாக்குவதும் அவதூறு பரப்பும் சமூக வலைதளங்களில் அதற்கான பிரசார களமாக பயன்படுத்துவது நீடிக்கிறது தமிழகத்தில் நடக்கும் காதல் திருமணங்களுக்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது குறிப்பிட்ட நபர் எப்படி பொறுப்பாக முடியும். அவர் வேண்டுமென்றே தலித் மற்றும் தலித் அல்லாதவர்களின் அரசியலை சாதி அடிப்படையில் இரண்டாகப் பிரிக்க வேண்டும் அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட வேண்டுமென தற்குறித்தனத்தோடு அவதூறுகளை பரப்பி வருகிறார்.

  விடுதலை சிறுத்தைகள் மீது தொடர்ந்து அவதூறு பரப்புவதை பொருத்து கொண்டிருக்க முடியாது சட்டப்படி எதிர்கொள்வோம் அவர் மீது விரைவில் அவதூறு வழக்கு தொடுக்க உரிய ஏற்பாடுகளை செய்வோம்.” இவ்வாறு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Dr Ramadoss, PMK, Thol. Thirumavalavan, VCK

  அடுத்த செய்தி