முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் 445 கிராமங்களில் தொடரும் தீண்டாமை.. முதலிடத்தில் மதுரை - ஆர்.டி.ஐ. தகவல்

தமிழகத்தில் 445 கிராமங்களில் தொடரும் தீண்டாமை.. முதலிடத்தில் மதுரை - ஆர்.டி.ஐ. தகவல்

தீண்டாமை

தீண்டாமை

இருபதாம் நூற்றாண்டிலும், சாதி ஒழிப்பை நூற்றாண்டுகளுக்கும் மேலாக முன்னிறுத்தி இயங்கி வரும் தமிழகத்தில் இன்னமும் 445 கிராமங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • 2-MIN READ
  • Last Updated :

தமிழகத்தில் 445 கிராமங்களில் இன்றும் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருவதும், அந்த கிராமங்கள் அதிகமுள்ள மாவட்டங்கள் பட்டியலில் முதலிடத்தில் மதுரையும், கடைசி இடத்தில் சென்னையும் உள்ளது தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) மூலம் தெரியவந்துள்ளது.

மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் செ.கார்த்திக் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவிடம் கேட்டிருந்த கேள்விக்கு பெறப்பட்ட பதில்கள் மூலம், தமிழகத்தில் 445 கிராமங்களில் இன்றும் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருவதும், 341 கிராமங்களில் தீண்டாமை கடைபிடிப்பது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது.

2021-ம் ஆண்டு நிலவரப்படி தீண்டாமை கடைபிடிக்கும் கிராமங்களின் எண்ணிக்கை அதிகமுள்ள மாவட்டங்கள் பட்டியல்: மதுரை - 43, விழுப்புரம் - 25, திருநெல்வேலி - 24, வேலூர் - 19, திருவண்ணாமலை - 18, திருச்சி - 16, சேலம் - 16, திண்டுக்கல் - 16,

தஞ்சாவூர் - 16, கோயம்புத்தூர் - 15, கடலூர் - 15, தென்காசி - 14, தூத்துக்குடி - 14, சிவகங்கை - 14, ஈரோடு - 13, திருப்பூர் - 12, தேனி - 12, விருதுநகர் - 12, பெரம்பலூர் - 11, ராமநாதபுரம் - 10

இந்த பட்டியலில் ஒரே ஒரு கிராமத்துடன் சென்னை கடைசி இடத்தில் உள்ளது. இவ்வளவு கிராமங்கள் இன்னமும் தீண்டாமையை கடைபிடித்து வரும் நிலையில், அதை ஒழிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என கேட்கப்பட்ட கேள்விக்கு, கடந்த 2021-ம் ஆண்டில் தான் அதிகபட்சமாக 597 விழிப்புணர்வு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக பதில் கிடைத்துள்ளது.

மேலும், நடப்பு 2022 மார்ச் மாதம் வரை 212 விழிப்புணர்வு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அமைச்சர்கள் சாலையில் நடமாட முடியாது... மன்னார்குடி ஜீயர் பேச்சு தவறானது: ஆதினங்கள்

அதன்படி 2021ல், திருச்சி மாவட்டத்தில் 50 நடவடிக்கையும், கோவையில் 29, சேலத்தில் 26, திருநெல்வேலியில் 23, மதுரையில் 21 நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நடப்பாண்டில் திருச்சி மாவட்டத்தில் 28 நடவடிக்கையும், சேலத்தில் 12, ஈரோட்டில் 11, திருநெல்வேலியில் 8 , விழுப்புரம், வேலூர், கோவையில் தலா 6 நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இதில் முக்கியமாக, தீண்டாமை கடைபிடிக்கும் கிராமங்கள் அதிகமுள்ள மதுரை மாவட்டத்தில் நடப்பாண்டில் வெறும் 3 நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது அதிகாரிகளின் மெத்தனப் போக்கையே காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.  மேலும், செங்கல்பட்டு மாவட்டம், கோவை புறநகர், திருப்பூர் நகர், தூத்துக்குடி மாவட்டம் ஆகியவற்றில் ஒரு கூட்டம் கூட இந்தாண்டில் நடத்தப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் படிங்க: ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி திடீர் ரெய்டு - ஊழியர்கள் பெரும் ஷாக்!

சாதிய தீண்டாமை பாகுபாட்டை ஒழிப்பதற்காக காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவுக்கு என தனியாக நிதி எதுவும் ஒதுக்கப்படுவது இல்லை எனவும், பாதிக்கப்பட்ட நபர்களிடம் மனு பெற்று அரசுக்கு அனுப்பி நிவாரணம் வாங்கி கொடுப்பது என்ற அளவில் இத்துறை இயங்கி வருவதாகவும் பதிலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இருபதாம் நூற்றாண்டிலும், சாதி ஒழிப்பை நூற்றாண்டுகளுக்கும் மேலாக முன்னிறுத்தி இயங்கி வரும் தமிழகத்தில் இன்னமும் 445 கிராமங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவது ஒரு புறம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதை ஒழிப்பதற்கு காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு எடுத்த நடவடிக்கைகள் மிக மிக குறைவு என்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கார்த்திக்

இந்த விவகாரம் குறித்து பேசிய ஆர்.டி.ஐ. ஆர்வலர் கார்த்தி,

"தேசிய குற்ற ஆவண காப்பகம் அளிக்கும் தகவல்படி கடந்த 2009 முதல் 2018 வரையிலான 10 ஆண்டுகளில் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகள் 27.3 சதவீதம் அதிகரித்து உள்ளதாக சொல்கிறது. அதே சமயம் தீண்டாமை கடைபிடிக்கும் கிராமங்களின் எண்ணிக்கையும் இந்தளவில் நீடிக்கிறது. இரண்டையும் நாம் ஒப்பிட்டு பார்க்கையில் இது எந்தளவுக்கு ஆபத்து என்பது புரியும்.

காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு செயல்படுவதில் உள்ள சுணக்கம் உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும். தீண்டாமையை கடைபிடிக்கும் 455 கிராமங்களிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தீண்டாமையை கடைபிடிக்காத கிராமங்களுக்கு அந்த கிராமத்தின் வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் கொடுக்கிறது அரசு. அது மிகவும் வரவேற்கத்தக்க செயல்.

அதே சமயம், தீண்டாமையை கடைபிடிக்கும் கிராமத்தில் அதை கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதே இங்கு கவனிக்க வேண்டியது.

இதை படிக்க: பிளாஸ்டிக் பைகளை அகற்றி மஞ்சப்பை விநியோகித்த வனத்துறையினர்!

தீண்டாமை ஒழிப்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பொறுப்பு இருந்தாலும், அரசுக்கு அதில் தனி கவனம் இருக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட கிராமங்களில் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை வழக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டும். தீண்டாமையை கடைபிடித்தால் அரசின் திட்டங்கள் கிடைக்காது என எச்சரிப்பதன் வழியாக தான் அதை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்" என்றார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு மற்றும் சமூகநலத்துறை ஆகிய மூன்று துறைகளும் இணைந்து தமிழகத்தில் தீண்டாமை வன்கொடுமைகள் அதிகமுள்ள மாவட்டங்களில் முதற்கட்டமாக விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். அத்தோடு சமூக நல்லிணக்க கிராமங்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு இதற்காக சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நீண்டு கொண்டிருக்கிறது.

First published:

Tags: Caste, Madurai, RTI