மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் நள்ளிரவில் துப்பாக்கியை காட்டி டோல்கேட் ஊழியர்களை மது அருந்திவிட்டு மிரட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயக்குமார் (வயது 38 ), முத்துக்குமார் (வயது 34 ), பொன்ராஜ் (வயது 28 ), ஆகிய 3 நபர்களும் பால் வியாபாரிகள். இதில் ஜெயக்குமார் என்பவர் துப்பாக்கி வைத்துள்ளார். இதனிடையே ஜெயக்குமார் தான் வைத்திருக்கும் துப்பாக்கிக்கு தோட்டாக்கள் வாங்க நண்பர்களை அழைத்துக்கொண்டு சுரண்டையில் இருந்து மதுரை நோக்கி சென்றுள்ளார்.
வாகனம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் கடக்க முயன்றபோது சுங்கக்கட்டணம் கேட்டு ஊழியர்கள் காரை நிறுத்தி உள்ளனர். நான்காவது பாதை பாஸ் டேக் பாதை என்பதால் அங்கிருந்த தடுப்பின் அருகே காரை நிறுத்தி உள்ளனர். இதற்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் காரின் எண் பதிவாக வேண்டும். இதனால் காரை சற்று பின்னோக்கி எடுங்கள் என கூறியுள்ளனர். இதற்கு காரை எடுக்க முடியாது என டோல்கேட் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜெயக்குமார் திடீரென தனது கையில் வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியை எடுத்து சுங்கச்சாவடி ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டு விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன சுங்கச்சாவடி ஊழியர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனையடுத்து காரை எடுத்துக்கொண்டு ஜெயக்குமார் மதுரைக்குச் சென்று கொண்டிருந்தவர்கள் கப்பலூர் தொழிற்பேட்டையில் அருகே உள்ள டீக்கடை ஒன்றில் நிறுத்தி துப்பாக்கி எடுத்தது, மிரட்டியது தவறான செயல் என உடன் வந்த பொன்ராஜ் தெரிவித்துள்ளார். அதனையடுத்து, காரை அங்கேயே நிறுத்தி மூவரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் டோல்கேட் ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். வாகன எண்ணையும் பதிவு செய்து மதுரை நோக்கி இரு சக்கர வாகனத்தில் போலீசார் சென்ற போது குறிப்பிட்ட அந்த எண்ணுடைய கார் கப்பலூர் தொழிற்பேட்டை டீக்கடை அருகே இருப்பதைக்கண்டு மூன்று பேரையும் கைதுசெய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மூவரும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்ததாகவும் தனது அண்ணன் மகளுக்காக துப்பாக்கிப் பயிற்சி கொடுப்பதற்காக வாங்கி வைத்த பொம்மை துப்பாக்கிக்கு தோட்டா வாங்க மதுரை சென்றதாகவும் அதை காண்பித்து டோல்கேட் ஊழியர்களை விளையாட்டாக மிரட்டியதாகவும் ஜெயக்குமார் தெரிவித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் வந்த பொலிரோ காரையும் பறிமுதல் செய்து அவர்களிடமிருந்தது உண்மையான துப்பாக்கியா? அல்லது விளையாட்டுத் துப்பாக்கியா? என அவர்கள் கொண்டுவந்த கைத்துப்பாக்கி மற்றும் ஏர்கன் துப்பாக்கிகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ALSO READ | 3 பல்பு கொண்ட ஓட்டு வீட்டுக்கு ரூ.25,000 மின்கட்டணம்.. மின் கணக்கீட்டாளர் மீது அதிரடி நடவடிக்கை..!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Madurai