• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • “மதுரை மக்களின் அன்பும், உணவும் மாறா மணமுடையவை!” : மனம் திறந்த பிரபல தேசாந்திரிகள்

“மதுரை மக்களின் அன்பும், உணவும் மாறா மணமுடையவை!” : மனம் திறந்த பிரபல தேசாந்திரிகள்

ராக்கி - மயூர்

ராக்கி - மயூர்

மதுரை மக்களும், அவர்களின் அன்பும், உணவு பழக்கங்களும் மாறாமல் அப்படியே உள்ளன.

  • Share this:
இந்தியாவின் பிரபல பயணிகளும், உணவு பிரியர்களுமான ராக்கி மற்றும் மயூர் மதுரையின் வரலாற்று சிறப்புகளையும், உணவுகளையும் குதூகலத்துடன் அனுபவித்து மகிழ்ந்தனர்.

இந்தியாவின் மிக பிரபலமான ராக்கி சிங் மற்றும் மையூர் ஷர்மா ஆகிய இருவரும் 46 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள். அவர்கள் வெறும் நண்பர்கள் மட்டுமல்ல 15 ஆண்டு கால இணை பிரியாத தேசாந்திரிகள். இந்தியா முழுவதும் இதுவரை 5 லட்சம் கிலோ மீட்டருக்கு மேல் சாலையில் பயணம் செய்து இருக்கிறார்கள். 65 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்து உள்ளார்கள்.

பயணத்தின் போது பல்வேறு விதமான மக்களின் உணவு, உடை, கலை, பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்டவற்றை அனுபவித்து அவைகளை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சமூக வலைத்தளங்களின் வழியாக ஆவணப்படுத்தி உள்ளார்கள்.

இதுவரையில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகையான உணவுகளை சுவைத்து, அதை தங்களின் பார்வையாளர்களுக்கு பகிர்ந்துள்ளார்கள்.

தற்போது "History 18" டிவிக்காக அவர்களுடைய ஐந்தாவது சீசன் பயணத்தை மதுரை முதல் கோவா வரை திட்டமிட்டுள்ளார்கள். ஆகஸ்ட் 23 ஆம் தேதி மதுரையில் துவங்கும் இவர்களது பயணம், திண்டுக்கல், சேலம், திருச்சி, கோவை, மைசூர், கர்நாடகா வழியாக கடைசியாக செப்டம்பர் 7 ஆம் தேதி கோவாவில் நிறைவடைய உள்ளது.

ராக்கி - மயூர்


இதற்காக மதுரை வந்திருந்த அவர்கள், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து, இட்லி, தோசை, பருத்திப்பால் உள்ளிட்ட பல உணவு வகைகளையும் சுவைத்து மகிழ்ந்தனர்.

அவர்களுடைய பயணம் மற்றும் உணவு அனுபவங்களை நியூஸ் 18 தமிழ்நாடு நேயர்களுக்காக பகிர்ந்து கொண்டனர். அப்போது, “இந்தியாவின் உணவுகளை சுவைக்கவும், அதனை பிரபலப்படுத்தும் நோக்கிலும் இப்படியான பயணங்களை துவங்கினோம். இந்தியாவில் வேறுபாடுகள் நிறைந்த மக்களை போலவே அவர்களது உணவுகளிலும் அவ்வளவு வேறுபாடுகள் உள்ளன.

ஒரே நாடு என்றாலும் பல மக்கள், பல உடை, பல கலாச்சாரம், பல உணவு என பரந்து விரிந்துள்ள வேறுபாடுகளை கொண்டாடுகிறோம். அதிலும், குறிப்பாக தென்னிந்திய உணவு வகைகளை மிக விரும்பி உண்போம்.

ராக்கி - மயூர்


இந்தியாவை எந்த நாடுடனும் ஒப்பிட முடியாது. எந்த நாட்டிலும் இந்தியாவை போல வேற்றுமையில் ஒற்றுமை என்கிற பழக்கம் கிடையாது. மாநிலம் தோறும், மாவட்டம் தோறும் அவ்வளவு வகையான உணவுகள் கிடைக்கும். வேறெந்த நாட்டிலும் இவ்வளவு வகையான உணவுகளை உண்ண முடியாது. இதுவரை இரண்டு யானைகள் சாப்பிடும் அளவிற்கு ஒவ்வொருவரும் தலா 10 டன் அளவு உணவு சாப்பிட்டு உள்ளோம்.

2008 ஆம் ஆண்டு முதன் முறையாக மதுரைக்கு வந்தோம். இப்போது 13 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மதுரைக்கு வந்துள்ளோம். மதுரை நகரம் நிறையவே மாறி இருக்கிறது. ஆனால், மதுரை மக்களும், அவர்களின் அன்பும், உணவு பழக்கங்களும் மாறாமல் அப்படியே உள்ளன.

மதுரையில் ஒரு மாதம் கூட தங்கி இருந்து இங்குள்ள உணவு வகைகளை உண்டு மகிழலாம். அவ்வளவு வகைகள் மதுரையில் மட்டும் கிடைக்கின்றன. மாலை வேளைகளில் மதுரைக்குள் எங்கு சென்றாலும், பெண்கள் தலையில் வைத்துள்ள மல்லிகை மணமும், சாலைகள் எங்கும் நிறைந்து வழியும் பல்வேறு வகையான உணவு மணமும் ஆளை இழுக்கும். அந்த மணத்தை மறக்கவே முடியாது.

ராக்கி - மயூர்


மதுரையில் கிடைக்கும் தோசை, கோலா உருண்டை, பருத்திப்பால், ஜிகர்தண்டா, பரோட்டா உள்ளிட்டவை மிகவும் பிடித்தமானவை. அதிலும், தமிழகத்தில் முருங்கையை பல்வேறு வகையான உணவுகளாக பயன்படுத்துகின்றனர். அதுவும் மிகவும் பிடிக்கும்.

பயணம் செய்ய விரும்பும் நபர்களுக்கு நாங்கள் ஒரே ஒரு அறிவுரை மட்டுமே சொல்லுவோம். இங்கு சென்றாலும் எதிர்பார்ப்புடன் செல்லுங்கள்; முன் முடிவுகளுடன் செல்லாதீர்கள். மக்களை மதியுங்கள், அவர்களின் உணவை மதியுங்கள். செல்லும் இடத்திற்கு ஏற்ப உடை அணியுங்கள், அவர்களைப் போல மாறி விடுங்கள். அது, அந்த மக்களுடன் இன்னும் நெருக்கமாக உதவும்" என்றனர்.

Must Read : தமிழகத்தில் குத்தகைக்கு விட மத்திய அரசு முடிவுசெய்துள்ள அரசு சொத்துக்கள்

15 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் அவர்களின் பயணத்தில் இதுவரை சலிப்பு என்பது ஏற்பட்டதே இல்லை என்றும், மிக பிடித்த நண்பருடன், மிக பிடித்த இடத்திற்கு சென்று, மிக பிடித்த உணவை உண்பதையே வாழ்க்கையாக கொண்ட எங்களுக்கு எப்படி இது சலிக்கும்? என நெகிழ்ச்சியுடன் தேவிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா காலத்தில் பயணம் செய்வது மிகவும் சிரமாக இருந்ததாகவும், இந்தியாவில் உணவையும், பயணத்தையும் நம்பி பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் உள்ளதாகவும், விரைவில் கொரோனா பாதிப்பில் இருந்து இந்தியா விடுபட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: