Home /News /tamil-nadu /

மதுரை மேம்பால விபத்து - ஆய்வறிக்கை தாக்கல் செய்தது நிபுணர் குழு!

மதுரை மேம்பால விபத்து - ஆய்வறிக்கை தாக்கல் செய்தது நிபுணர் குழு!

மேம்பால விபத்து

மேம்பால விபத்து

ஆய்வு முடிந்து 10 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்த நிலையில், மூன்று மாதங்களுக்கு பின்னர் அதற்கான விரிவான ஆய்வறிக்கையை தேசிய நெடுஞ்சாலை துறை வசம் நிபுணர் குழுவினர் தாக்கல் செய்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
மதுரையில் மேம்பாலம் இடிந்து ஏற்பட்ட விபத்திற்கான உண்மை காரணங்கள் குறித்த ஆய்வறிக்கையை தேசிய நெடுஞ்சாலை துறையிடம் தாக்கல் செய்துள்ள நிபுணர் குழு, கட்டுமானம் தொடர்பான முக்கிய பரிந்துரைகளையும் அனுப்பியுள்ளது.

மதுரை புதுநத்தம் சாலையில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.545 கோடி மதிப்பில் மதுரை தல்லாகுளம் முதல் செட்டி குளம் வரை 7.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கப்பட்டது.
2022 ஏப்ரல் மாதம் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், மேம்பாலத்தின் அருகேயுள்ள இணைப்பு பாலத்தின் ஒரு பகுதி கடந்த 2021 ஆகஸ்ட் 28ஆம் தேதி மாலை இடிந்து விபத்திற்கு உள்ளானதில், உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம் தொழிலாளர் உயிரிழந்தார்.

பாலத்தின் இரண்டு புறமும் நகருக்குள் செல்பவர்களுக்காக கட்டப்படும் 335 மீட்டர் நீளமுள்ள ஒரு சர்வீஸ் பாலத்தில் நாராயணபுரம் அருகே விபத்து ஏற்பட்டது.இந்த சர்வீஸ் பாலம் கட்டுவதற்கு 35 மீட்டர் இடைவெளியுடன் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு தூணுக்கும் மற்றொரு தூணுக்கும் இடையே 35 மீட்டர் நீளமுள்ள கர்டரின் ஒரு பகுதியை, பேரிங் வைத்து இணைப்பதற்கு, ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் தூக்கியுள்ளனர். அப்போது ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக இதுவரை மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேம்பாலப் பணிகளை மேற்கொள்ளும் மும்பையை தலைமையிடமாகக் கொண்ட JMC projects இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் திட்ட பொறுப்பாளர் பிரதீப் குமார் ஜெயின், கட்டுமானப்பணிகள்  பொறியாளர் சத்தியேந்தர் வர்மா, ஹைட்ராலிக்  மெஷின்கள் ஒப்பந்த நிறுவனத்தின் பொறுப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் தரப்பு விளக்கம் கேட்கப்பட்டு சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விபத்திற்கான காரணம் குறித்து திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக பேராசிரியர் பாஸ்கர் தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருந்தார்.

அதன்படி, திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக பேராசிரியர் பாஸ்கர் தலைமையில் 3 வல்லுனர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. குழுவில், கேரளாவை சேர்ந்த NATPAC என்ற கட்டுமான நிறுவனத்தின் போக்குவரத்து நுட்ப பொறியாளர் சாம்சன் மாத்தீவ் மற்றும் டெல்லியை சேர்ந்த மேம்பால கட்டுமான ஆலோசகர் அலோக் போமிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த ஆக.30 அன்று திருச்சி என்.ஐ.டி பேராசிரியர் பாஸ்கர் மட்டும் நாரயரணபுரம் அருகே விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்தார். தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், கட்டுமான ஒப்பந்த நிறுவனத்தார், மேற்பார்வை பொறியாளர் உள்ளிட்ட நபர்களிடம் விபத்திற்கான காரணங்கள் குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தினார்.அதன் தொடர்ச்சியாக, கடந்த செப்.4 ஆம் தேதி நிபுணர் குழுவினர் இணைந்து சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து, ஒப்பந்த நிறுவனத்தார், திட்ட பொறியாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.ஹைட்ராலிக் இயந்திரத்தின் பராமரிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.விபத்து ஏற்பட்ட போது பணியில் இருந்தவர்கள் யார் என்று விசாரித்து அவர்களின் விளக்கங்களும் கேட்கப்பட்டு உள்ளன. மேம்பால பணிகளுக்காக போடப்பட்ட ஒப்பந்த அறிக்கைகளையும் ஆய்வு செய்துள்ளனர்.

ஆய்வு முடிந்து 10 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்த நிலையில், மூன்று மாதங்களுக்கு பின்னர் அதற்கான விரிவான ஆய்வறிக்கையை தேசிய நெடுஞ்சாலை துறை வசம் நிபுணர் குழுவினர் தாக்கல் செய்துள்ளனர்.

அந்த அறிக்கையில், "ஹைட்ராலிக் பளு தூக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு,பாலத்தில் கர்டர் பொருத்தும் பணிகளில் கூடுதல் அனுபவம் இல்லாத தொழிலாளர்களை பயன்படுத்தியது,கர்டர் பொருத்தும் பணியின் போது தேசிய நெடுஞ்சாலை துறையால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு பொறியாளர்கள் இல்லாதது" ஆகியவையே விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானம் தொடர்பாக சில முக்கிய பரிந்துரைகளையும் நிபுணர் குழு அளித்துள்ளது."கர்டர் பொருத்தும் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், கட்டுமான முறையில் மாற்றம் செய்ய வேண்டும்" எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

கட்டுமானத்தின் போது, "முதலில் கர்டர் பொறுத்தி விட்டு, பின்னர் கர்டரின் இரு புறமும் தூண்களின் மேல் இணைப்பு சுவர் கட்டப்படும்.இனி, முதலில் இணைப்பு சுவரை கட்டிவிட்டு பின்பு கர்டர் பொறுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இந்த நடைமுறையை செயல்படுத்துவது குறித்து சோதனை செய்து தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் நிபுணர் குழு ஒப்புதல் பெற்று பணிகளை துவக்க வேண்டும்.

இந்த நடைமுறை இறுதி செய்யப்பட்டு, நிபுணர் குழு ஒப்புதல் அளித்த பின்னர் இந்த நடைமுறையே தேசிய நெடுஞ்சாலை துறையால் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் மேம்பால கட்டுமான பணிகளில் பின்பற்ற பட வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Also read... மதுரையில் தடுப்பூசி செலுத்தாவிட்டால் பொது இடங்களில் அனுமதி இல்லை

விபத்து தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலை துறையால் நியமிக்கப்பட்ட 6 கண்காணிப்பு பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அறிக்கையின் அடிப்படையில் ஒப்பந்ததாரர்களிடம் அபராதம் வசூலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

மேலும், "ஒரு மாதத்திற்குள் கட்டுமான நடைமுறை மாற்றம் குறித்த பரிசோதனை ஒப்புதல் பெற்று விபத்து நடைபெற்ற பாலத்தின் பணிகள் துவங்கப்படும்; 80 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 2022 ஏப்ரல் மாதம் முடிவடைய இருந்த பாலத்தின் முழுமையான கட்டுமான பணிகள் 2022 ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும்; ஜனவரி மாதத்திற்குள் பாலத்தில் சாலை சீரமைக்கப்பட்டு பாலத்தின் கீழ் போக்குவரத்து முழுமையாக இயங்க வேண்டிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madurai

அடுத்த செய்தி