மதுரையைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவர் கௌதம் தமிழ்செல்வன் எழுதிய "இதய நினைவுகள்" எனும் கவிதை நூல் பல்வேறு தரப்பினரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
மதுரை முடக்கத்தான் பகுதியை சேர்ந்த கௌதம் தமிழ்ச்செல்வன் என்ற 19 வயது ஏழை மாணவர், தனியார் கல்லூரியில் ஊடக காட்சி தொடர்பியல் துறையில் இளநிலை 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். சிறு வயது முதலே இவருக்கு கவிதைகள் எழுதுவதில் மிகுந்த ஆர்வம் இருந்ததாகவும், பாரதியாரின் கவிதைகள் தன்னை சீண்டி பார்த்ததாலும் கவிஞனாக தன்னை பரிணமித்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கிறார்.
கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி மதுரை அரசு அருங்காட்சியகம் மற்றும் தீந்தமிழ் பேரவை சார்பில் காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், கௌதம் தமிழ்செல்வன் எழுதிய அவரது முதல் நூலான "இதய நினைவுகள்" வெளியிடப்பட்டது.
இந்நூலை, மதுரை அரசு அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் மருதுபாண்டியன், பேராசிரியர் மணிகண்டன் வெளியிட , முதல் பிரதியை எழுத்தாளர் மாறன், நெல்லை. அருள்.சோ. மணிகண்டன் மற்றும் இரா.மகாகிருஷ்ணன் பெற்றுக் கொண்டனர்.
கவிதையின் வடிவங்களையும், கவிதை எழுதுவதற்கான சாத்தியங்களையும், கவிதை எழுதுவதில் புதியவர்கள் கடந்து வர வேண்டிய தடைகளையும், இயற்கையின் அழகியல்களையும்"இதய நினைவுகள்" நூலின் வாயிலாக வெளிக்கொண்டு வந்துள்ளார் கௌதம் தமிழ்ச்செல்வன்.
Also read... மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்த பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடு - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
இவர் எழுதிய கவிதைகளுக்காக பள்ளிக்காலம் முதலே கவிபாரதி விருது, கவிவேந்தர் விருது, வள்ளுவர் விருது, தமிழ்த்தாய் விருது என 4 விருதுகளையும், மற்றொரு கவிதை நூலின் இணை ஆசிரியராகவும் பணிபுரிந்து அசத்தி உள்ளார்.
இதுகுறித்து, கல்லூரி மாணவன் கௌதன் தமிழ்ச்செல்வன் கூறுகையில், "சிறுவயதிலேயே எனது பெற்றோரை இழந்தேன். ஒரு சிறந்த எழுத்தாளனாக வேண்டும் என்பதே என் கனவு. அதற்கான சிறு விதையாக இந்த கவிதை நூலை எழுதியுள்ளேன். எனது பள்ளி ஆசிரியர்கள் தொடங்கி கல்லூரி பேராசிரியர் திரு.மணிகண்டன் வரை ஒவ்வொருவரும் என் வாழ்வில் ஒளியேற்றி வைப்பவர்களாக இருக்கிறார்கள்.ஆசிரியர்களின் அன்பும், அக்கறையும் ஒரு மாணவனுக்கு அமைந்து விட்டால் அவனுடைய வாழ்க்கை எப்படியாக மாறும் என்பதற்கு நானே சாட்சி. வருங்காலத்தில் எனது எழுத்துக்கள் வழியாக வாழ்வனுபவங்களை காட்சியாக மாற்றி வாசகர்களுக்கு விருந்தாக்குவேன்" என்றார்.
மேலும், கல்லூரி பேராசிரியர் மணிகண்டன் கூறுகையில், "என்னுடைய மாணவன் கௌதம் தமிழ்ச்செல்வன் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன். வருங்காலத்தில் மிகப்பெரிய எழுத்தாளனாக வருவான். ஒரு கவிஞனுக்கு அதிகபட்சமாக கிடைக்கக்கூடியது புகழ், பாராட்டு தான். அதை தீந்தமிழ் இலக்கிய பேரவை அவனுக்கு இப்போதே தந்துள்ளது. அவன் அதிக புத்தகங்கங்களை எழுத வேண்டும். அதற்கு தன்னால் முடிந்த அளவிற்கு எல்லா உதவிகளையும் செய்வேன்" என்றார்.
தமிழ் மீது கொண்ட காதலும், ஆசிரியர்களின் ஊக்கமும் கௌதம் தமிழ்செல்வனை ஒரு கவிஞனாக மாற்றியுள்ளது. அந்த இளங்கவிஞனை கவியுலகம் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்க தயாராக இருக்கிறது என்பதை நூல் வெளியீட்டு அரங்கில் அவருக்கு எழுந்த கரவொலி உறுதி செய்தது.
-செய்தியாளர்: ஹரிகிருஷ்ணன். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.