சொத்து வரி உயர்வு : திமுகவை கண்டித்து நாளை போராட்டம் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்
சொத்து வரி உயர்வு : திமுகவை கண்டித்து நாளை போராட்டம் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்
அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் உதயகுமார், சொத்துவரிகளை அதிமுக அரசு 200% மேல் உயர்த்த திட்டமிட்டிருந்தாலும் 50% தான் உயர்த்த முடிவு செய்தோம் ஆனால் அதையும் செயல்படுத்தவில்லை, மக்களின் நலன் கருதி மக்கள் நலன் காத்த அரசு அதிமுக அரசு என தெரிவித்துள்ளார்.
சொத்துவரி விவகாரத்தில் மக்கள் நலம் காத்த அரசு அதிமுக அரசு தான். 150 சதவீதம் வரை வரி உயர்த்திய திமுகவை கண்டித்து வரும் 5-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பிஉதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயரின் குற்றப்பரம்பரை என்ற கைரேகை சட்டத்தை எதிர்த்து போராடியபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 1920-ம் ஆண்டு ஏப்ரல் 3 ம் தேதி உயிர்நீத்த மாயக்காள் என்ற பெண் உட்பட 16 தியாகிகளின் 102 வது நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்சியினரும் கிராம பொது மக்களும் பல்வேறு அமைப்பினரும் மலர் மாலை மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதன் ஒரு பகுதியாக அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயக்குமார், செல்லூர் ராஜூ, உசிலம்பட்டி அதிமுக எம்.எல்.ஏ அய்யப்பன் தலைமையில் அதிமுகவினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மேலும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், தென்னகத்தின் ஜாலியன் வாலாபாக் படுகொலை என அழைக்கப்படும் இந்த பெருங்காமநல்லூர் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும் தியாகிகளின் வரலாறை உலகறிய செய்ய வேண்டும் என்ற நோக்கில் அவர்களின் நினைவாக மணிமண்டபம் அமைக்க 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து 1 கோடியே 47 லட்சம் ஒதுக்கீடு செய்த அரசு அதிமுக அரசு, அதிமுக ஒருங்கிணைப்பாளர்ஓ.பி.எஸ்-ன் அறிவுறுத்தலின் படி மரியாதை செலுத்தியுள்ளோம் என பேசினார்.
மேலும் சொத்துவரி 150% மேல் உயர்த்தப்பட்டு மக்கள் பழிவாங்கப்பட்டிருப்பதை கண்டித்து அதிமுக தலைமை கழகத்தின் அறிவுரைப்படி வரும் 5ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் 200% வரை வரிஏற்பட்டதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் உதயகுமார் சொத்துவரிகளை அதிமுக அரசு 200% மேல் உயர்த்த திட்டமிட்டிருந்தாலும் 50% தான் உயர்த்த முடிவு செய்தோம் ஆனால் அதையும் செயல்படுத்தவில்லை, மக்களின் நலன் கருதி மக்கள் நலன் காத்த அரசு அதிமுக அரசுதான்” என்றார்.
செய்தியாளர் : சிவகுமார் (திருமங்கலம்)
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.