• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பாப்பாபட்டி கிராம சபைக் கூட்டத்தில் பெண் வைத்த கோரிக்கையை உடனே நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

பாப்பாபட்டி கிராம சபைக் கூட்டத்தில் பெண் வைத்த கோரிக்கையை உடனே நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மதுரை மாவட்டம் பாப்பாபட்டி கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

  • Share this:
    தமிழக வரலாற்றில் முதன்முறையாக கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாப்பாபட்டி கிராமசபை கூட்டம் தன்னால் மறக்க முடியாத நிகழ்வு எனவும், இது சாமானிய மக்களுக்கான ஆட்சி என்றும் பேசினார். அங்கு மக்களின் குறைகளை கேட்டறிந்தவர், பல்வேறு கிராம வளர்ச்சி திட்டங்களையும் அறிவித்தார்.

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பாப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மதுரை வந்தார்.

    பாப்பாபட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் நாட்டாபட்டியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாய பெண்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    பின்னர், பாப்பாபட்டி கிராமத்தில் இருந்த மூக்கையா தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாப்பாபட்டி கிராமத்தில் ஒச்சாண்டம்மன் பெரிய கோவில் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, கிராம வளர்ச்சிக்கு தேவையான புதிய திட்டங்களை அறிவித்தார்.

    கூட்டத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, முதலமைச்சரின் தனிபிரிவு செயலாளர் உதயசந்திரன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், பாப்பாப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் முருகானந்தம், துணைத் தலைவர் லெட்சுமி ஆகியோர் பங்கேற்றனர். மக்களிடம் கலந்துரையாடிய முதலமைச்சர், அரசு அளித்த கொரோனா நிவாரண நிதி வந்து சேர்ந்ததா? எனவும் பெண்களுக்கான இலவச பேருந்து சேவையை பயன்படுத்துகிறீர்களா? என்றும் கேட்டார்.

    அதற்கு பதிலளித்த பெண், நிவாரண நிதி கிடைத்தது என்றும், பாப்பாபட்டி முதல் மதுரை வரை இயக்கப்படும் பேருந்தில் பெண்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் அதையும் இலவசமாக அளிக்க வேண்டும் என கேட்டார். அவரது கோரிக்கையை ஏற்று பாப்பாபட்டி முதல் மதுரை வரை இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் என அறிவித்தார்.

    தொடர்ந்து பேசிய மற்றொரு பெண், 58 கால்வாய் திட்டத்தினை விரைவாக செயல்படுத்தி தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அவருக்கு பதிலளித்த முதலமைச்சர், இந்த ஆண்டுக்குள் அந்த பணிகள் நிறைவுபெறும் என உறுதியளித்தார்.

    பின்னர் மக்களிடம் முதலமைச்சர் உரை நிகழ்த்தினார். அப்போது, ‘பாப்பபட்டிக்கு நான் வந்ததில் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். உண்மையில், இங்கு வந்ததில் நான் தான் மிக மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன். உண்மையான இந்தியா கிராமத்தில் இருந்தே உருவாகிறது என்றார் மகாத்மா காந்தியடிகள். அவருக்கு மதுரை மறக்க முடியாத மண். அவருடைய அரை ஆடை புரட்சிக்கு வித்திட்டு அவரையே மாற்றிய ஊர் மதுரை.

    பாப்பாப்பட்டி கிராமம் நம்முடைய கிராமம். இந்த ஆட்சி என்னுடைய ஆட்சி அல்ல உங்களுடைய ஆட்சி. நான் முதலமைச்சராக எவ்வளவோ நிகழ்வுகளுக்கு சென்றுள்ளேன். அதில், என்னால் மறக்க முடியாத ஒரு நிகழ்வு இது தான். 2006 இல் இந்த கிராமங்களில் ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் தேர்தல் நடத்தியதற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மிகவும் சந்தோஷப்பட்டார். இங்கு தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழாவில், கருணாநிதியை சமத்துவப் பெரியார் என திருமாவளவன் பாராட்டினார். அதன் பின்னர் இந்த கிராமத்திற்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. ஜனநாயகம் என்பது கடைக்கோடி மக்களின் குரல் தான். அதனடிப்படையில் இந்த கிராமத்தின் கடைக்கோடி மனிதரின் குரலை கேட்க நான் வந்துள்ளேன்.

    சமத்துவம் இல்லாத இடத்தில் வளர்ச்சி இருக்காது, சமத்துவம் தான் வளர்ச்சிக்கு அடிப்படை என கருணாநிதி சொன்னார். அது தான் காந்தி காண விரும்பிய கிராம ராஜ்ஜியம். 202 தேர்தல் வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்பட்டு உள்ளன. மீதமுள்ள வாக்குறுதிகளையும் நிறைவேற்றியே தீருவோம். இது சாமானிய மக்களுக்கான ஆட்சி. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏழை, பணக்காரர், கிராமம், நகரம் என எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒளிமயமான தமிழகத்தை அமைப்போம்" என பேசினார்.

    தொடர்ந்து பாப்பாப்பட்டி கிராமத்திற்கு புதிய திட்டங்களை அறிவித்தார். "23 லட்ச ரூபாய் செலவில் ஊராட்சி மன்றக் கட்டிடம், 10 லட்ச ரூபாய் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம், 14 லட்ச ரூபாய் மதிப்பில் நியாயவிலை கடை, மயானங்களில் 48 லட்ச ரூபாய் மதிப்பில் அடிப்படை வசதிகள், 6 லட்ச ரூபாய் மதிப்பில் கதிர் அடிக்கும் இயந்திரம், 30,000 லி கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி, 25 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய ஆழ்குழாய் கிணறு" ஆகியவை அமைக்கப்படும் என தெரிவித்தார்.

    மேலும், இனி வாரம் ஒரு முறை பாப்பாப்பட்டி கிராம வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டு அறிவதாகவும், இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு மாறும் காலம் விரைவில் வரும் எனவும் அதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் பேசினார்.

    கூட்டம் முடிந்து வரும் வழியில், நாட்டார்ப்பட்டி கிராமத்தில் இருந்த கூட்டுறவு வேளாண் சங்கத்தில் திடீர் ஆய்வு நடத்தி கோப்புகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அங்கு பயனாளிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் திட்டத்தையும் துவக்கி வைத்தார். வேளாண் சங்கத்தில் நேரில் வந்து முதலமைச்சர் பயிர்க்கடன் வழங்கியது இதுவே முதன்முறை.

    அதன்பின்னர், மகாத்மா காந்தி அரையாடைக்கு மாறி புரட்சி செய்த மதுரை மேலமாசி வீதியில் உள்ள கதர் விற்பனையகத்தில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர், 30 சதவிகித தள்ளுபடி விலையில் கதர் ஆடைகளை விற்பனை செய்யும் திட்டத்தையும் துவக்கி வைத்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: