மதுரை நாகமலை பகுதியில் உள்ள பிரபல அரசு உதவி பெறும் கல்லூரியான வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, 55 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில், மதுரை மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5000-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.
இங்கு இளநிலை கலைத்துறை பட்டப்படிப்பிற்கு ஒரு ஆண்டிற்கு 700 ரூபாயும், அறிவியல் துறை பட்டப்படிப்பிற்கு ஆண்டிற்கு 900 ரூபாயும் கட்டணமாக அரசு நிர்ணயித்து உள்ளது. ஆனால், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது செமஸ்டருக்கு 350 ரூபாய் வசூலிப்பதற்கு பதிலாக, 3,500 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை வசூலித்ததாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி வெளியிட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டார். பின், கூடுதலாக வசூலித்த கட்டணத்தை மாணவர்களிடம் திருப்பி கொடுக்க வேண்டுமென கல்லூரி நிர்வாகத்திற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
ஆனால், அந்த பணம் இதுநாள் வரை திருப்பி தரவில்லை என்றும், இது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் பலமுறை முறையிட்டும், கல்லூரி நிர்வாகம் மழுப்பி உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை முதல்வர் அறையின் முன்பு போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்ட நிலையில், ஆசிரியர் ஒருவர் மாணவரை தாக்கியுள்ளார்.
Also read... நரிக்குறவ பெண்ணுக்கு ஒரு மணி நேரத்தில் காப்பீடு அட்டை - மதுரை ஆட்சியரின் முன்னுதாரண செயல்!
இதனைக்கண்டித்து, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி வாசலின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். பின், காவல்துறையினரின் தொடர் பேச்சுவார்தைக்கு பின்பு மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால், மதுரை - தேனி செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து கல்லூரி மாணவர் பாலமுருகன் கூறுகையில், நாங்கள் கூடுதலாக கல்வி கட்டணம் செலுத்தி உள்ளோம், அதற்கான ரசீதை கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டால், பேங்க் Server Down ஆக உள்ளது என பலமுறை ஒரே காரணத்தை கூறுகிறார்கள், மேலும், அதிக பணம் வசூலிப்பதை கேட்டால், கல்லூரியின் பராமரிப்பு செலவுக்கு வாங்குகிறோம் என்கிறார்கள் என தெரிவித்தார்.
-செய்தியாளர்: ஹரிகிருஷ்ணன். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.