கஞ்சா வியாபாரிகளின் ரூ.2.30 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்- தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் விளக்கம்
கஞ்சா வியாபாரிகளின் ரூ.2.30 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்- தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் விளக்கம்
தென்மண்டல ஐஜி
மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கஞ்சா விற்பனை செய்தவர்களிடமிருந்து 2.30 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என்று தென்மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அதை தடுக்க காவல்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க், ’மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் கஞ்சா விற்பனை செய்ததாக பதிவான வழக்குகளின் அடிப்படையில், 17 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கஞ்சா விற்பனை மூலம் கிடைக்கும் பணம் மற்றும் அதன் மூலம் வாங்கிய சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்யலாம் என்ற சட்டத்தின் அடிப்படையில், குற்றவாளிகள் மற்றும் அவருடைய உறவினர்களின் அசையா மற்றும் அசையும் சொத்துகள், வாகனங்கள், வங்கி இருப்பு தொகை, வரவு செலவு ஆகியவை சோதனை செய்யப்பட்டு பகுதி நீதித்துறை அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் ஆணையர் பொறுப்புப்பெற்ற அதிகாரி மூலம் சொத்துகளை முடக்க உறுதிபடுத்தும் ஆணையும் பெறப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரை மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட 7 குற்றவாளிகளின் வங்கி கணக்குகளிலிருந்து சுமார் ரூ.1.20 லட்சமும், 37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களும், 1.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்களும், அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட 6 குற்றவாளிகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ரூ.1,83,72,057 மற்றும் வங்கி இருப்பு தொகையான ரூ.10,10,000 பணத்தை ஆகியவை முடக்க நேற்றைய தினம் ஆணையர் பொறுப்புபெற்ற அதிகாரியிடம் உறுதிபடுத்தும் ஆணை பெறப்பட்டுள்ளது.
மேலும், கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர், பள்ளி, கல்லூரி அருகே கஞ்சா விற்பவர்கள், மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் என அனைவரின் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என எச்சரிக்கை விடுத்தார்.
தென்மாவட்டங்களில் தீண்டாமை கடைபிடிக்கும் கிராமங்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா? என்ற கேள்விக்கு காவல் கண்காணிப்பளர் தலைமையில் தீண்டாமை கடைபிடிக்கும் கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.
செய்தியாளர்: ஹரிகிருஷ்ணன், மதுரை.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.