சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகா, கண்டனூர் கிராமத்தில் ஸ்ரீ கறிவேப்பிலை காளியம்மன் கோவில் விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிக்கு அனுமதி அளிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. கண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் உயர்நீதிமன்ற
மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகா, கண்டனூர் கிராமத்தில் ஸ்ரீ கறிவேப்பிலை காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் படைப்பு திருவிழா வருகிற மார்ச் 29, 30, 31 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோவில் முக்கிய நிகழ்வாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி மார்ச் 31-ஆம் தேதி நடத்த ஊர் மக்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்துவது குறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த ஒரு பதிலும் தெரிவிக்கப்படவில்லை. திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மஞ்சுவிரட்டு போட்டி நடத்தக் கூறினால் உடனடியாக அனுமதி அளிக்கப்படுகிறது. எனவே, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகா, கண்டனூர் கிராமத்தில் ஸ்ரீ கறிவேப்பிலை காளியம்மன் கோவில் படைப்பு விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிக்கு அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்துவது குறித்து பல்வேறு வழக்குகள் தினம்தோறும் பட்டியலிடப்படுகிறது. அரசிதழில் இல்லாத ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்துவது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
Must Read : கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த நகைகளை ஆங்காங்கே வெட்டி நூதன மோசடி - சேலத்தில் பரபரப்பு
அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கி அரசிதழில் சேர்க்கப்படாத, ஊர்களில் வடமாடு மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், வழக்கு குறித்து காரைக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஏப்ரல் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.