Home /News /tamil-nadu /

ஸ்மார்ட் சிட்டி முறைகேடு.. செல்லூர் ராஜு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்: அமைச்சர் பிடிஆர் எச்சரிக்கை

ஸ்மார்ட் சிட்டி முறைகேடு.. செல்லூர் ராஜு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்: அமைச்சர் பிடிஆர் எச்சரிக்கை

ஸ்மார்ட் சிட்டி முறைகேடு.. செல்லூர் ராஜு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்: அமைச்சர் படிஆர் எச்சரிக்கை

ஸ்மார்ட் சிட்டி முறைகேடு.. செல்லூர் ராஜு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்: அமைச்சர் படிஆர் எச்சரிக்கை

மதுரை ஸ்மார்ட் சிட்டி முறைகேடு விவகாரத்தில் செல்லூர் ராஜு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் கட்டுவதற்கு பிளானிங் கமிஷன் அனுமதியே வாங்கவில்லை என்றும், வடிவேல் காமெடி போல ஒரு பேருந்து நிலையத்தையே தற்போது காணவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் அண்ணா மாளிகையில் நடைபெற்றது. இதில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியதாவது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 14 திட்டங்கள் 80% நிறைவடைந்து உள்ளன. இதில் மேலும் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிக்கபப்ட்டது.

சில திட்டங்கள் கடந்த ஆட்சியில் தவறுதலாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. மற்ற மாநகராட்சிகளில் 80 முதல் 90 திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மதுரையில் அந்த கவனமில்லாமல் மிக குறைவான திட்டங்களே தேர்வு செய்யப்பட்டுள்ளன.

பெரியார் பேருந்து நிலையம், வைகை நதிக்கரை சாலைகள், பூங்கா, நடைபாதை, பாதாள சாக்கடை, போக்குவரத்து நெரிசல் குறைப்பு, பாரம்பரிய சினங்களை பாதுகாப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பெரியார் பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்த தேவையான இடம் இல்லை. திட்டத்தை வேறு லாப நோக்கத்திற்காகவே செயல்படுத்தி உள்ளார்கள். அவர்கள் செய்த தவறுகளை சரி செய்ய யோசித்து கொண்டு இருக்கிறோம்.

பெரியார் பேருந்து நிலையம் கட்டுவதற்கு பிளானிங் கமிசன் அனுமதியே வாங்கவில்லை. நகரமைப்பு ஒப்புதல் இல்லாமல் ஒரு பேருந்து நிலையம் எப்படி கட்டப்பட்டது. ”வடிவேல் காமெடி போல இரண்டு பேருந்து நிலையங்கள் இருந்த இடத்தில் இப்போது பஸ்டாண்டயே காணோம்" என்றார்.

Also read: டிஎன்பிஎஸ்சி பணிகளில் பெண்கள் ஆதிக்கமா? இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் முறை...

தொடர்ந்து, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது, "கடந்த 5 வருடமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத காரணத்தால் ஒன்றிய அரசிடம் இருந்து 2,875 கோடி ரூபாய் நிதி வரவில்லை. அப்படி இருக்கும் போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு பணம் எப்படி வந்தது? மதுரை வரலாற்றில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தலைமை செயல் அலுவலர், கமிஷனர், மேயர் ஆகிய மூன்று நபரின் பொறுப்புகளையும் ஒரே நபராக கவனிக்க முன்னாள் மாநகராட்சி மேயருக்கு எப்படி அதிகாரம் கிடைத்தது?

ஜனவரி 2021ல் தான் முதன் முறையாக ஸ்மார்ட் சிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதற்கு முன்பு கூட்டம் ஏன் நடைபெறவில்லை. அப்போது யார் முடிவு எடுத்தார்கள்?

பெரியார் பேருந்து நிலையம் பழைய திட்டப்படி திறந்தால் இன்னும் வாகன நெரிசல் அதிகம் ஆகும். எனவே, காவல் துறை, ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி திட்டமிட உள்ளோம்" என்றார்.

ஸ்மார்ட் சிட்டி பணிகளில் முறைகேடு நடைபெற்று இருந்தால் நிரூபிக்கவும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சொன்ன கருத்துக்கு பதிலளித்தவர், "கொஞ்சம் அறிவு இருப்பவர்கள் இப்படி சவால் விட மாட்டார்கள். முறைகேடுகள் நடைபெற்று இருப்பதை கண்டறிவது வித்தை அல்ல. ஏற்கனவே பல முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடந்து கொண்டிருக்கிறது. எனவே செல்லூர் ராஜு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

அவருடைய விஞ்ஞான திறமை உலகம் அறிந்தது. அவர் செய்த தவறால், இழந்த பணத்தை கூட எடுத்து விடலாம். தவறான திட்டத்தை செயல் படுத்தினால் அது அதை விட 10 மடங்கு நஷ்டம்" என்றார்.

ஜி.எஸ். டி கூட்டத்தில் பங்கேற்காதது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "ஜி எஸ் டி கூட்டத்திற்கு அழைப்பு தாமதமாக 10 ஆம் தேதிக்கு மேல் தான் வந்தது. அதில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் எதுவும் இல்லை. கூட்டம் நேரில் நடக்கும் என்ற அறிவிப்பை முன்பே கொடுக்கவில்லை.

தொகுதியில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க திட்டம் இருந்தது. முதல்வரிடம் பேசி விட்டு நான் பங்கேற்கவில்லை. நிதி துறை செயலாளர் பங்கேற்று உள்ளார். என்னுடைய கோரிக்கை அறிக்கை அங்கு சமர்ப்பிக்கப்படும்" என தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Esakki Raja
First published:

Tags: Madurai, Su venkatesan

அடுத்த செய்தி