கூட்டணி என்பது தோளில் உள்ள துண்டு; தேவையில்லையென்றால் கழட்டிவைக்கலாம் - பா.ம.க குறித்து செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ

கூட்டணி என்பது தோளில் உள்ள துண்டு போன்றது. தேவையில்லையென்றால் கழட்டிவைத்துவிடலாம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தமிழ்நாட்டில் இதுவரை உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனையடுத்து, அரசியல் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகத் தொடங்கியுள்ளனர். இந்தநிலையில், சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருந்த பா.ம.க யாரும் எதிர்பாராத வகையில் உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பா.ம.க வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த தேர்தலில் பாமக வின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க கட்சியின் தலைமை நிலைய நிர்வாகிகள், 9 மாவட்டங்களின் துணை பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் எனது தலைமையில், இணைய வழியில் நடந்தது.

    இந்த கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி கருதி இந்த தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவது என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது என்பதை டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து செப்டம்பர் 15ஆம் தேதி (இன்று), 16ஆம் தேதி விருப்ப மனுக்கள் பெறப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது. பா.ம.க முடிவு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தவிவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு போல தான்; தேவையெனில் போட்டுக் கொள்வோம் இல்லையெனில் கழற்றி வைத்து விடுவோம். கூட்டணி என்பது சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் தான் எடுபடும். உள்ளாட்சித் தேர்தல் என்பது அந்தந்த உள்ளாட்சி அமைப்பில் உள்ள செல்வாக்கை பொறுத்து அமையும். எனவே, அவர்கள் வெளியேறியதில் வருத்தம் இல்லை. கூட்டணியை நம்பி அ.தி.மு.க இல்லை’என்று தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published: