முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர்
ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தது தொடர்பான வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரிய வழக்கை மார்ச் 17ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற
மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.
நாம் தமிழர் கட்சி அனுதாபியான சாட்டை துரைமுருகன் யூடியூபில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தும் அவதூறான கருத்துக்களை பேசியும் வீடியோ வெளியிட்டார். இதையடுத்து துரைமுருகன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தார்.
விசாரணை செய்த நீதிமன்றம் இனிமேல் இதுபோன்ற அவதூறுகளை பரப்ப மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் பெற்றுக்கொண்டு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தது. இந்நிலையில் சாட்டை துரைமுருகன்நீதிமன்றத்தில் அளித்த உறுதி மொழி உத்தரவாதத்தை மீறி தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியுள்ளார். இதன்பேரில் மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அரசு தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்தபோது யூடியூபில் தேவையற்ற பதிவுகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அரசிடம் என்ன திட்டம் உள்ளது? அதற்கான சாத்தியக்கூறுகள் என்ன? அரசுத்தரப்பில் பதில் அளிக்கவும், யூடியுப் சம்பந்தமான விபரங்களை சேகரித்து நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.
இதையும் படிக்க: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாகனம் மீது டம்ளரை வீசிய டீ மாஸ்டர் கைது
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இந்தியாவில் பல லட்சம் பேருக்கு யூடியூப் வேலை வழங்கி உள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. யூடியூப் மூலம் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதனை பலர் தவறாக உபயோகப்படுத்தி வருகின்றனர் என கருத்து தெரிவித்தார்.
இந்த வழக்கில் நீதிமன்றம் உதவுவதற்காக நியமனம் செய்த வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் யூடியூப் குறித்து விபரங்களைப் பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 17 ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.