ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் பில்; கொரோனா சிகிச்சையில் கட்டண கொள்ளையில் ஈடுபட்ட தனியார் மருத்துவமனை!

மதுரை தனியார் மருத்துவமனை

தீவிர சிகிச்சைக்காக அவசரமாக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிக்கு குளுகோஸ் ட்ரிப்ஸ் கூட அவர்கள் அளிக்கவில்லை என உறவினர்கள் தகவல் தெரிவித்தனர்.

  • Share this:
மதுரையில் கொரோனா சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வசூலித்து  தனியார் மருத்துவமனை ஒன்று கட்டண கொள்ளையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

மதுரையை சேர்ந்த 49 வயது பெண்மணி  ஒருவருக்கு கடந்த மே 8 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

மே 12 இரவில் அவருக்கு ஆக்சிஜன் அளவு குறைந்து சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மே 13 அன்று அதிகாலை 12:30 மணி அளவில் சின்ன சொக்கிகுளம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அப்போது முன் கட்டணமாக 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை மருத்துவமனை நிர்வாகம் செலுத்தும்படி நோயாளியின் உறவினர்களிடம் கூறியுள்ளது.

அப்போது கையிலிருந்த 1 லட்சம் ரூபாயை மட்டும் செலுத்தியுள்ளனர். மறுநாள் (மே 13) பகலில் நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து உறவினர்கள் கேட்டதற்கு சரியான பதிலை மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கவில்லை. தீவிர சிகிச்சைக்காக அவசரமாக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிக்கு குளுகோஸ் ட்ரிப்ஸ் கூட அவர்கள் அளிக்கவில்லை என உறவினர்கள் தகவல் தெரிவித்தனர்.

மேலும், சிகிச்சையில் திருப்தி இல்லாததால் மே 14 காலை 8 மணிக்கு அவரை டிஸ்சார்ஜ் செய்யுமாறு உறவினர்கள் கூறியுள்ளனர். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் உடனே பில் தராமல், மறுநாள் வருமாறு கூறியுள்ளனர்.

Read More:   தினமும் 5000 பேருக்கு இலவச பிரியாணி.. கோவை தன்னார்வலருக்கு குவியும் பாராட்டு!

மறுநாள் (மே 15) என்று பில் கேட்கையில் 1 லட்சத்து 356 ரூபாய்க்கு கணக்கு கொடுத்துள்ளனர். அதிலும், நோயாளி பாலினம் பெண் என்பதற்கு பதிலாக ஆண் என்று குறிப்பிட்டு உள்ளதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த புகார் குறித்து டிவிட்டரில் பகிர்ந்த ஒருவருக்கு, பதிலளித்த தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், " மதுரை ஆட்சியர் இதை கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியுள்ளதாக" குறிப்பிட்டிருந்தார்.



இந்த விவகாரம் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் விசாரிக்கையில், "மதுரை சின்ன சொக்கிகுளத்தில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனை  அதிக கட்டணம் வசூலித்ததாக வந்த புகார் குறித்து விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது.

அவர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்து இருந்தால் விதிகளின் படி உரிய  நடவடிக்கை எடுக்கப்படும்.

Read More:   உணவின்றி தவித்து வரும் குரங்குகளுக்கு சொந்த செலவில் பழங்கள் வழங்கும் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்!

மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை பிரிதிநிதிகள் அனைவரையும் அழைத்து, கட்டண வசூல் நடைமுறைகளில் அரசின் விதிகளை தவறாமல் பின்பற்றுவது குறித்து திங்கள் கிழமை  ஆலோசனை நடத்த உள்ளோம்.

மதுரையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் குறித்து 0452 - 2530104 /06 /07,  9597176061 என்ற எண்களில் புகார் அளிக்கலாம்" என்றும் விளக்கம் அளித்தார்.

இதே போன்று இன்னும் பல தனியார் மருத்துவமனைகளும், கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட பல மடங்கு கட்டணம் வசூலித்து வருவதாகவும், அரசு உடனே தலையிட்டு விதிகளை மீறும் மருத்துவமனைகள் மீது தக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, பெருந்தொற்று காலம் மேலும் துயரமாக மாறாமல் தவிர்க்க முடியும் என நோயாளிகளும், உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published by:Arun
First published: