ரெம்டெசிவர் மருந்து பதுக்கல்? அதிர்ச்சி வீடியோவால் பரபரப்பு

Youtube Video

மதுரை மருத்துவ கல்லுாரியில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக, கல்லுாரி ஊழியர்கள் குப்பைத் தொட்டியில் பதுக்கும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

  • Share this:
    மதுரை மருத்துவக் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் மூலம் இந்த விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரெம்டெசிவிர் மருந்தை வாங்க மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களில் இருந்தும் தினசரி நுாற்றுக்கணக்கானோர் மருத்துவ கல்லூரிக்கு வந்து இரவு பகலாக காத்துக் கிடக்கின்றனர்.

    ஒருநாளைக்கு 500 பேருக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து விற்க திட்டமிடப்பட்டிருந்தது. முதல் நாள் சனிக்கிழமையே அதிகளவில் கூட்டம் குவிந்ததால், திங்கட்கிழமை முதல் டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டது.

    விற்பனை தொடங்கி 3 நாட்களே ஆன நிலையில், ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பதற்காக கல்லுாரி ஊழியர்கள் குப்பைத் தொட்டிக்குள் வைத்து விற்பது போன்ற வீடியோ செவ்வாய்க்கிழமை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    மருந்து வாங்க வந்த நபர், காவலாளியை சரமாரியாக கேள்வி கேட்ட பின்னரே தனது உறவினர்களுக்காக 6 குப்பிகள் கொண்ட ஒரு பெட்டி வாங்கி வைத்துள்ளதாக காவலாளி கூறுகிறார். இந்த பெட்டி வெளியில், 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

    இதுகுறித்து விசாரிக்க வந்த காவல்துறை அதிகாரியோ, மருந்து வாங்க வந்த நபர் அத்துமீறி உள்ளே நுழைந்ததாக மிரட்டுகிறார்; மருந்து பதுக்கல் பற்றி விசாரிக்கலாம் என மழுப்புகிறார்.

    முறைகேடான இந்த விற்பனை குறித்து மருத்துவக் கல்லுாரி தலைவர் சங்குமணியிடம் கேட்டபோது இந்த விற்பனைக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று கூறி முடித்துக் கொண்டார்.

    மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் கேட்டபோது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மருந்து விற்பனையில் முறைகேடு நடக்கக் கூடாது என்பதற்காகத் தான் டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அத்திட்டம் அமலாகி ஒரு நாளிலேயே கள்ளச்சந்தையில் விற்பதற்காக நடக்கும் பதுக்கல் தொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளன.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: