Home /News /tamil-nadu /

“ஜல்லிக்கட்டு தான் வாழ்வின் ஒரே மகிழ்ச்சி” - தீவிர பயிற்சியில் காளைகள், காளையர்கள்!

“ஜல்லிக்கட்டு தான் வாழ்வின் ஒரே மகிழ்ச்சி” - தீவிர பயிற்சியில் காளைகள், காளையர்கள்!

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு களம் காண ஆவேசமகவும், உற்சாகமாகவும் தயாராகி கொண்டிருக்கும் மாடுகளும், வீரர்களும் ஜல்லிக்கட்டு தான் தங்களுக்கான வாழ்நாள் மகிழ்ச்சி என பெருமை பொங்க கூறுகின்றனர்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் களம் காண தயாராவதற்காக காளைகளும், காளையர்களும் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை உலகப்புகழ் பெறும் அளவிற்கு உயர்த்திய பெருமைக்கு சொந்தமானவை மதுரை அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தின் நிலங்களே.அந்த நிலங்களில் ஜனவரி மாதத்தின் 14,15,16 ஆகிய மூன்று நாட்களில் பல்லாயிரம் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டும் அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், ஜல்லிக்கட்டு கமிட்டியினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டி துவங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே மாடுகளும், மாடு பிடி வீரர்களும் தங்கள் உடலையும், மனதையும் தயாராக்கி வரும் நிலையில், போட்டிக்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், மாடுகளும், மாடுபிடி வீரர்களும் தங்களது பயிற்சிகளை தீவிரமாக்கி உள்ளனர்.

Also Read:  நியூஸ்18 செய்தி எதிரொலி.. 20 ஆண்டுகளாக இருளில் தவித்த மக்களுக்கு கிடைத்த வெளிச்சம்

மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியில் உள்ள பொதும்பு கிராமத்தில், வாடிவாசல் போன்ற அமைப்புள்ள இடத்தில் மாடுகளை அவிழ்த்து விட்டு அவற்றை பிடித்து வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், மாடுகளுக்கு சத்தான உணவுகள் அளித்து, நீச்சல் பயிற்சி, மண் குத்தும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் அளித்து வருகிறார்கள்.

ஜல்லிக்கட்டு பயிற்சி களம்


ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு ஊர்களில் தனது 12 மாடுகளை களமிறக்கும் முயற்சியில் உள்ள மாடு உரிமையாளர் வீரபாண்டி பேசுகையில், "மூன்றாவது தலைமுறையாக ஜல்லிக்கட்டு மாடு வளர்த்துக் கொண்டிருக்கிறோம். எங்களிடம் 30 மாடுகள் இருந்த நிலையில் பராமரிப்பு சுமை மற்றும் பொருளாதார சுமைகளின் காரணமாக தற்போது 13 காளைகள் மட்டுமே உள்ளன. 12 காளைகளையும் பராமரிக்க தினமும் சராசரியாக 3000 ரூபாய் தேவைப்படுகிறது. அவ்வளவு வருமானம் இல்லாவிட்டாலும் கூட கடன் வாங்கியாவது மாடுகளை வளர்த்து வருகிறோம்.

அவைகள் வெறும் மாடுகள் அல்ல; எனக்கு மகனாக, அப்பாவாக, தோழனாக இருப்பவைகள். எனவே, எவ்வளவு சிரமப்பட்டாலும் பரவாயில்லை என மனம் தளராமல் அவர்களை காப்பாற்றி வருகிறேன். காளைகளை விற்று காளைகளை வளர்க்கும் நிலையில் உள்ளோம். எங்கள் குடும்பத்தினர் உண்பதற்கு வழியில்லாமல் இருந்தால் கூட, காளைகளுக்கு உணவளிக்காமல் ஒருநாளும் உறங்கியதில்லை.

ஜல்லிக்கட்டு காளை


தற்போது ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகளை தயார் செய்து கொண்டிருக்கிறோம். அவைகளுக்கு சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும். ஆனால், என்னால் சாதாரண உணவுகளையே கொடுக்க முடிகிறது. இவ்வளவு சிரமப்பட்டு காளைகளை தயார்படுத்திக் களத்திற்கு கொண்டு சென்றாலும் டோக்கன் பெறுவதில் உள்ள சிக்கல்களால் மேலும் இழப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

எங்கள் மாடுகள் ஏற்கனவே அவனியாபுரம், பாலமேடு மட்டுமல்லாது பல வெளி ஊர்களில் நடைபெற்ற போட்டிகளிலும் பல்வேறு பரிசுகள் பெற்றுள்ளன, இன்னும் பல பரிசுகளையும் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

Also Read:  ஏலியன்கள் பூமிக்கு வருவார்கள்.. 2022ல் இந்தியாவில் என்னென்ன நடக்கும் - பாபா வாங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள்

மாடு பிடி வீரர் அர்ஜூன் பேசுகையில்,"நான்கு ஆண்டுகளாக பல்வேறு ஊர்களில் மாடு பிடித்து சிறந்த வீரர் என்கிற பெயரை பெற்றுள்ளோம். தற்போது, ஜல்லிக்கட்டு துவங்க ஒரு மாதம்  முன்னரே அசைவம், மது வகைகளை தவிர்த்து விடுவோம். மாலை அணிந்து விரதம் இருப்பது போல கடும் விரதமிருந்து களத்திற்கு செல்வோம்.மாடுகளை வாரம் தோறும் வாடிவாசல் போன்ற அமைப்புள்ள களத்தில் இறக்கி விளையாடுவோம். அது மாடுகளுக்கும் எங்களுக்கும் பயிற்சியாக இருக்கும்" என்றவர்,

"சிறந்த வீரர், காளைகளை தேர்வு செய்யும் போது சில இடங்களில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படுவதில்லை. தேர்வு குழுவினர் இனி வரும் காலங்களில் எந்த சார்பும் இல்லாமல் செயல்பட வேண்டும்.உயிரை பணயம் வைத்து விளையாடுகிறோம் எனவே சரியான நபர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும். தீர்ப்பு மாறும் போது நாங்கள் களத்தை விட்டே வெளியேறி விடும் விரக்தி மனநிலைக்கு உள்ளாவோம். இது மட்டுமல்லாது, போட்டி நடைபெறும் நாளன்று கமிட்டியினர் கட்டுப்பாட்டில் நாள் முழுவதும் இருக்கும் மாடுபிடி வீரர்களுக்கு சரியான உணவு வசதிகள் ஏற்பாடு செய்து தர வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார்.

ஜல்லிக்கட்டு


மற்றொரு மாட்டின் உரிமையாளர் திருப்பதி கூறுகையில்,
"30 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு களத்திற்கு மாடுகளை இறக்கிக் கொண்டிருக்கிறோம். ஒரு மாதமாக மாடுகளை காலையில் மருந்து கொடுத்து மாட்டின் வயிற்றை சுத்தம் செய்வோம்.பின்னர், வெள்ளை துவரை, மக்கா சோள மாவு, கோதுமை தவிடு, நாணல் ஆகியவை அளிப்போம். மண்ணு குத்த விடுதல், நீச்சல், நடை பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகிறோம்.

ஜல்லிக்கட்டு தான் வாழ்க்கையில் எங்களுக்கான ஒரே மகிழ்ச்சி.எனக்கு பணம் முக்கியமில்லை இந்த கலாச்சாரம் அழிய கூடாது, எங்கள் மாட்டு இனம் அழியக்கூடாது. வீட்டில் இருப்பவர்கள் குறைவாக உண்டாலும், மாட்டுக்கு ஒரு குறையும் வைக்க மாட்டோம்.மாடுகளை காக்க படும் சிரமங்கள் எதுவும் எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.மாடுகளை களத்தில் இறக்கியதும் எங்கள் கவலைகள் மொத்தமும் பறந்து போய்விடும் என தெரிவித்தவர்,
ஜல்லிக்கட்டு போட்டிகளில் போலி டோக்கன் கொடுக்கும் செயல்களை முழுமையாக கண்காணிக்க வேண்டும்.கடன் வாங்கி மாட்டை பராமரித்து களத்திற்கு கொண்டு செல்லும் எங்களுக்கு போலி டோக்கன் விவகாரங்கள் எங்கள் உழைப்பை மொத்தமாக வீணாக்கி விடும் என கவலை தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு களம் காண ஆவேசமகவும், உற்சாகமாகவும் தயாராகி கொண்டிருக்கும் மாடுகளும், வீரர்களும் ஜல்லிக்கட்டு தான் தங்களுக்கான வாழ்நாள் மகிழ்ச்சி என பெருமை பொங்க கூறுகின்றனர். அதேநேரம், ஜல்லிக்கட்டு போட்டிகளில் நடைபெறும் டோக்கன் வழங்கும் நடைமுறைகளில் அரசும், கமிட்டியினரும் தனி கவனம் செலுத்த வேண்டும் எனவும், வெற்றியாளர்களை தேர்வு செய்வதில் எந்தவித பாரபட்சமும் இன்றி செயல்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Published by:Ramprasath H
First published:

Tags: Jallikattu, Madurai, Palamedu, Pongal

அடுத்த செய்தி