மேலூர் அருகே நிதி நிறுவன ஊழியர்களை தாக்கி 166 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பலை தனிப்படை அமைத்து காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் பெஸ்ட் மணி கோல்டு என்ற தனியார் நிதி நிறுவனம் இயங்கிவரும் நிலையில், இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மேலாளர் மைக்கேல்ராஜ், ஊழியர் செல்வம் மற்றும் ஓட்டுநர் சரவணன் ஆகியோர் ரூபாய் 50 லட்சத்துடன் காரில் விழுப்புரம் சென்று அங்கு தங்களது நிறுவனம் மற்றும் மற்ற நிதி நிறுவனங்களில் ஏலம் விடப்பட்ட, ரூபாய் நாற்பத்தி ஒன்பது லட்சம் மதிப்பிலான 166 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் ஒரு லட்சத்துடன் மதுரை நோக்கி திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் - கொட்டாம்பட்டி அருகே அய்யாபட்டி விலக்கு நான்கு வழிச்சாலையில் காரில் வந்து கொண்டிருக்கும் பொழுது, பின்னால் மற்றொரு காரில் பின் தொடர்ந்து வந்த ஐந்துக்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், நிதிநிறுவன ஊழியர்கள் வந்த காரின் மீது மோதி விபத்து ஏற்படுத்தி நிற்க வைத்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் காரை நிறுத்தி பார்க்கும் பொழுது, விபத்து ஏற்படுத்திய மற்றொரு காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளின் கைப்பிடியைக் கொண்டு மேலாளர் மைக்கேல்ராஜை தலையில் தாக்கியும், மற்றவர்களை அரிவாளால் மிரட்டி காரிலிருந்து இறக்கி விரட்டியடித்துள்ளனர்.
இதையடுத்து மர்ம நபர்கள் காரில் இருந்த 166 சவரன் தங்க நகை மற்றும் ரூபாய் ஒரு லட்சத்துடன் ஊழியர்கள் வந்த காருடன் தப்பித்து சென்ற நிலையில், கொள்ளையர்களிடமிருந்து தப்பித்த நிதி நிறுவன ஊழியர்கள், இதுகுறித்து நிதி நிறுவன அதிகாரிகளிடம் தகவல் அளித்துவிட்டு, இக்கொள்ளை சம்பவம் குறித்து கொட்டாம்பட்டி காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொட்டாம்பட்டி காவல்துறையினர், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு தப்பிச் சென்ற கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், நிதி நிறுவன ஊழியர்களிடம் இருந்து, கொள்ளையர்கள் பறித்து சென்ற கார் கொட்டாம்பட்டி அருகே ஆள் அரவமற்ற இடத்தில் நிற்பதை அறிந்த காவல்துறையினர் காரை மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
Also read... தாம்பரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் நகை, பணம் கொள்ளை!
மேலும், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மதுரை சரக டிஐஜி காமினி மற்றும் எஸ் பி பாஸ்கரன் தலைமையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, நிதி நிறுவன ஊழியர்களிடம் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள், காரில் துவரங்குறிச்சி சுங்கச்சாவடியை கடந்து செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை தீவிரமாக தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
நான்கு வழி சாலையில் தனியார் நிதி நிறுவன ஊழியர்களை தாக்கி அவர்களிடமிருந்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.