மதுரை: கடன் சுமையால் 3 குழந்தைகளைக் கொலை செய்து விட்டு பெற்றோர் விஷமருந்தி தற்கொலை...

Youtube Video

மதுரையில் கடன்பிரச்னைக் காரணமாக மூன்று குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு பெற்றோர்கள் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

 • Share this:
  மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் 35 வயதான சரவணன். 24 வயதான மனைவி விஜி, 10 வயது, 6 வயதிலான இரண்டு மகள்கள், 5 வயதான மகன் ஆகியோருடன் வசித்து வந்தார். செவ்வாய்க்கிழமை காலையில் ஒரு மகள் பால்பாக்கெட்டை வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் சென்றார். காலை 11 மணி வரையிலும் யாரும் வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது 5 பேரும் சடலங்களாகக் கிடந்தனர்.

  உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து 5 பேர் சடலங்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில் நகை பாலீஷ் போடும் ரசாயனத்தைக் குழந்தைகளுக்கு கொடுத்து கொலை செய்த பின் தம்பதி விஷமருந்தி தற்கொலை செய்தது தெரியவந்தது.

  சரவணனின் தந்தை அய்யாவுக்கு 10 குழந்தைகள். அய்யாவுக்கு கோடிக்கணக்கில் மதிப்புள்ள பல சொத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு சரவணன் நகைகளைத் திருடி வி்ட்டதாக அவரது தந்தை அய்யாவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரால் வீட்டை விட்டு வெளியேறிய சரவணன், தனி நகைப் பட்டறை வைத்து நடத்தி வந்தார்.

  மேலும், பட்டறையைக் காண்பித்து சில வங்கிகளில் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர, தன்னிடம் அடகுக்கு வரும் நகைகளை வங்கிகளில் அடகு வைத்து கூடுதலாக கடன் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

  இந்த வகையில், சரவணனுக்கு ஒன்றரைக் கோடி ரூபாய் வரை கடனாகியுள்ளதாக தெரியவருகிறது. இந்தக் கடன் சுமையை குறைக்க, சொத்தில் தனக்குரிய பங்கை விற்றுத் தரும்படி கேட்டுள்ளார். கடைசி மகனுக்கு 21 வயது ஆகும் வரையிலும் சொத்துக்களை விற்கக் கூடாது என தந்தை அய்யாவு எழுதிய உயிலைக் காட்டி குடும்பத்தினர் சொத்துக்களை விற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.  இதனால் மனம் உடைந்த சரவணன், குடும்பத்தோடு தற்கொலை முடிவை நாடியுள்ளார் என்கின்றனர் போலீசார். சரவணன் எழுதி வைத்துள்ள கடிதத்தில் தான் கடனாளியானதற்கு தனது தாய், ஒரு சகோதரன் மற்றும் ஒரு சகோதரி ஆகியோர் தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

  நகைகள் திருடியதாக தன் மீது பொய்யான புகார் அளித்ததோடு நிற்காமல் தன் மனைவியின் குடும்பத்தார் மீதும் புகார் அளித்தது மனவேதனை அளித்ததாகத் தெரிவித்துள்ளார். தன்னைப் போல் தந்தையை இழந்து தனது குழந்தைகளும் வேதனைப்படக் கூடாது என்பதால்தான் குழந்தைகளைக் கொன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

  மேலும் படிக்க... தாமரை மலர்ந்தது - ரஜினி படத்துடன் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

  குடும்பமே தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் குறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
  Published by:Vaijayanthi S
  First published: