ஒடிசாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஆக்சிஜன் டேங்கர்கள் தூத்துக்குடிக்கு அனுப்பி வைப்பு!

ஆக்சிஜன் டேங்கர்

5 டேங்கர்களுடன் மதுரை ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் ஆக்சிஜனை மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் ஆய்வுமேற்கொண்டனர்

  • Share this:
    ஒடிசாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் டேங்கர்கள் தூத்துக்குடிக்கு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    நாட்டில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    இதனை சரி செய்ய தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்தும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக பெறப்படுகின்றன.

    அந்த வகையில், ஒடிசா மாநிலத்தில் இருந்து அடுத்த இரண்டு வாரங்களுக்கு, நாள்தோறும் 110 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழகத்துக்கு கொண்டு வர இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அதன்படி, ஒடிசா மாநிலம் கலிங்கா நகர் மற்றும் ரூர்கெலா பகுதிகளில் இருந்து முதற்கட்டமாக நேற்று ரயில் மூலம் தமிழகத்திற்கு 110 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, இன்று கொண்டுவரப்பட்ட ஆக்சிஜன் டேங்கர்களில் தென் மாவட்டமான தூத்துக்குடிக்கு தேவையான 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் 5 டேங்கர்களில் மதுரை வழியாக ரயில்கள் மூலமாக கொண்டு செல்லப்பட்டது.

    5 டேங்கர்களுடன் மதுரை ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் ஆக்சிஜனை மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் ஆய்வுமேற்கொண்டனர் டேங்கர்களை எடுத்துசெல்வதில் உள்ள நடைமுறைகள் குறித்தும், ரயில்வே பாதை மின்தடம் குறித்தும் ரயில்வே பைலட்களிடம் கேட்டறிந்தனர்.

    மதுரையில் ரயில்வே நிலையத்தில் ஆய்வுக்கு பின்னர் புறப்பட்ட டேங்கர் லாரிகளானது நீளவெட்டான் ரயில் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

    செய்தியாளர் - வெங்கடேஷ்வரன்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: