EXCLUSIVE : கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர்; நியூஸ் 18 நடத்திய கள ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!

ரெம்டெசிவர்

மதுரையில் கள்ளச் சந்தையில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த புகாரின்படி, காவல்துறை உதவியுடன் நியூஸ் 18 நடத்திய கள ஆய்வில் பல அதிர்ச்சிகர தகவல் அம்பலமாகி உள்ளன.

  • Share this:
மதுரையில் ஒரு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. இறப்பு எண்ணிக்கையும் இரட்டை இலக்கத்தில் பதிவாகி வருகிறது.
கொரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் மருந்தாக கருதப்படும் ரெம்டெசிவர் மருந்து கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக தொடர் தகவல்கள் கசிந்து கொண்டே இருந்தன.

இந்நிலையில், கடந்த மே 8 முதல் மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் ரெம்டெசிவர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 500 குப்பிகள் மட்டுமே விநியோகிக்க படுவதால், ஏராளமான மக்கள் குவிந்து வந்தனர். ரெம்டெசிவர் விற்பனை மையமே மற்றுமொரு தொற்று மையமாக மாறிவிடுமோ என்ற அச்சம் எழுந்தது. அங்கு ஒரு குப்பி மருந்து 1568 ரூபாய்க்கு மக்களுக்காக அனுப்பப்படும் மருந்துகள் கூட பதுக்கப்படுவதாக சமீபத்தில் ஆதாரங்கள் வெளியாகின.

இந்த சூழலில் தான் கள்ள சந்தையில் ரெம்டெசிவர் மருந்து விற்கப்படுவதாக ஒரு மொபைல் நம்பர் மட்டும் நமது நியூஸ் 18 குழுவிற்கு கிடைத்தது. உடனே களத்தில் இறங்கியது நியூஸ் 18 செய்திக்குழு.

மே 12 காலை 10:30 மணி அளவில் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு சாமானியர் போல ரெம்டெசிவர் மருந்து கேட்டு பேசினோம்.எதிர் முனையில் பேசிய நபர், "உங்களுக்கு எப்படி என்னுடைய நம்பர் கிடைத்தது?" என்று விசாரித்தார்.ஏற்கனவே, உங்களிடம் ரெம்டெசிவர் மருந்து பெற்ற ஒரு நபர் மூலம் கிடைத்தது என்று சொன்னதும், நமக்கு என்ன வேண்டும் என கேட்டார்.

6 பாட்டில்கள் ரெம்டெசிவர் வேண்டும் என்றோம். அவர் உடனே மருந்து கையிருப்பு இல்லை என்றார். மிக அவசரம், உறவினர் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறியதும், சற்று நேரத்தில் அழைப்பதாக கூறிவிட்டு துண்டித்தார்.

பின்னர் சற்று நேரம் கழித்து பேசுகையில் 3 பாட்டில்கள் மட்டும் உள்ளதாகவும், ஒரு பாட்டில் விலை ரூபாய் 28,000 என்றும் கூறினார். ஏன் இவ்வளவு தொகை என்று கேட்டதற்கு, ரெம்டெசிவர் மருந்திற்கு அவ்வளவு கிராக்கி உள்ளது என்றார். அதன் உண்மையான விலை என்னவென்று கேட்டதற்கு, 4,500 ரூபாய் என்று அவரே சொன்னார்.மொத்தம் மூன்று பாட்டில்களுக்கு 84,000 ரொக்கமாக கொண்டு வர வேண்டும். பணம் தயாரானதும் சொல்லுங்கள், எந்த இடத்திற்கு வர வேண்டும் என்று கூறுகிறேன் என கூறிவிட்டு துண்டித்தார்.

பணம் தயாராகி விட்டது என்று கூறியதும், மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள ஒரு டிப்பார்மெண்டல் கடையின் பெயரை கூறி அதன் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வருமாறு கூறினார்.

உயிர்காக்கும் மருந்தை மனசாட்சி இல்லாமல் பல மடங்கு லாபம் வைத்து அநியாய விற்பனை செய்யும், அந்த நபர்கள் கையும் களவுமாக பிடிபட வேண்டியவர்கள் என்பதை உணர்ந்த நியூஸ் 18 செய்தி குழு, மதுரை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது.காவல் ஆணையர் உத்தரவின் பேரில் மாறுவேடத்தில் வந்த தனிப்படையினர் உதவியுடன், மர்ம நபர்கள் வர சொன்ன இடத்திற்கு மாலை 6 மணி அளவில் சென்றது செய்தி குழு.

சரியாக மாலை 6:20 மணி அளவில் வந்த அந்த மர்ம நபர்கள், மருந்தை நம்மிடம் கொடுத்த போது, மறைந்திருந்த தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கையும் களவுமாக கைது செய்தனர். அவர்களை விசாரிக்கையில், அவர்கள் பெயர் வெங்கடேஷ் (27) மற்றும் இம்ரான் (24) என்றும், இருவரும் செல்லூர் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் (என்.டி.சி மருத்துவமனை) லேப் உதவியாளர்களாக பணிபுரிவது தெரிய வந்தது.மேலும், தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், சென்னையில் இருந்து மருந்துகளை வாங்கி வருவதும், நோயாளிகளின் ஆவணங்களை திருடி அவர்களுக்கே தெரியாமல் அரசு விநியோக மையங்களில் மருந்தை பெறுவதும் என பல முறைகேடான வழிகளில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்று வந்துள்ளது தெரியவந்தது.

இதே போன்று இந்த இரண்டு நபர்களும் பல முறை, வெவ்வேறு நபர்களுக்கு இதே விலையில் மருந்தை விற்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.இந்த விற்பனையில் முக்கிய நபரான இம்ரான்கான் என்பவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து, ரெம்டெசிவர் மருந்து பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை விற்பனையில் தொடர்புடைய நபர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீசார் நடத்தும் அடுத்தடுத்த கட்ட விசாரணையில் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொடும் கொரோனா நோயில் சிக்கி உயிருக்கு போராடும் தம் உறவுகளை காக்க, அரசு விற்கும் குறைந்த விலை ரெம்டெசிவர் மருந்தை பெற இரவு பகலாக நோயாளிகளும், அப்பாவி மக்களும் ஒருபுறம் தவியாய் தவித்துக் கொண்டிருக்கின்றனர். மற்றொரு புறம் ஈவு இரக்கமற்று லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு ஒரு கும்பல் செயல்படுவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்த கும்பலில் தொடர்புடைய அனைத்து நபர்களும் கைது செய்யப்பட்டு, ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடு இன்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Published by:Vijay R
First published: