இரவு முழுவதும் பிணங்கள் எரிகின்றன: கொரோனா மரணங்கள் ஏன் மறைக்கப்படுகின்றன - எம்.பி சு.வெங்கடேசன் ஆதங்கம்

சு.வெங்கடேசன்

மதுரையில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படுவதாகவும், இது உடனே நிறுத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் காட்டமாக பேசினார்.

  • Share this:
மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் & மக்கள் நல் வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையிலான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நிதி அமைச்சர், வணிக வரித்துறை அமைச்சர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ’சென்னைக்கும் மதுரைக்கும் உள்ள அடிப்படை மருத்துவ கட்டமைப்பு வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும். சென்னையில் 4 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. தனியார் மருத்துவமனைகளின் கட்டமைப்பும் அதிகம். மதுரையில் ஒரே ஒரு மருத்துவ கல்லூரி மட்டுமே உள்ளது. மதுரையை மையமாக கொண்டிருக்கும் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய தென் மாவட்டங்களிலும் அந்தளவு மருத்துவ வசதிகள் இல்லை. இந்த ஆறு மாவட்டங்களை சேர்த்து ஒப்பிடுகையில், கிட்டத்தட்ட சென்னையின் மக்கள் தொகை இருக்கும். ஆனால், சென்னையில் உள்ள கட்டமைப்பில் நான்கில் ஒரு பங்கு கூட மதுரையில் இல்லை. இதன் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக தென் மாவட்டம் மூச்சு திணறி கொண்டிருக்கிறது.

இப்போது மதுரையில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. எனவே, உடனடியாக மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கையை இப்போது இருப்பதை விட ஒரு மடங்கு அதிகரித்தே வேண்டும்.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கொள்ளளவு 6 ஆயிரம் டன்னாக இருந்ததை, 26 ஆயிரம் டன்னாக கடந்த ஆண்டே அதிகரித்து உள்ளோம். இது முதல் அலையில் பயன்படவில்லை இரண்டாம் அலையில் பயன்பட்டு கொண்டிருக்கிறது. இதை செய்திருக்காவிட்டால் மதுரையும், மற்றொரு டெல்லியாக மாறியிருக்கும்.

எனவே உடனே, மதுரையை சுற்றியுள்ள தென் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 6 ஆயிரம் டன் ஆக்சிஜன் கொள்ளவை ஏற்படுத்த வேண்டும். இந்த பணிகள் முடிய 6 மாதங்கள் ஆனால் கூட, அடுத்த அலை வரும்போது பயன்படும்.

மதுரையில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படுகிறது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இன்று (மே 14) காலையில் இருந்து அமைச்சர்கள் ஆய்வு, மற்றும் கூட்டங்கள் நடைபெறும் நிலையில், அரசு ராஜாஜி மருத்துவமனையில் இதுவரை ஒரு மரணம் கூட பதிவாகவில்லை. ஏன் இப்படி மரணங்களை மறைக்க வேண்டும்?

அரசு மருத்துவமனையில் இருந்து தினமும் இரவில் உடல்களை மயானத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள். இதனால் இரவு முழுவதும் 60, 70 பிணங்கள் எரிந்து கொண்டே இருக்கின்றன. இந்த செயல் மிக தவறானது. இது உடனே நிறுத்தப்பட வேண்டும்" என்று காட்டமாக பேசினார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: