Home /News /tamil-nadu /

மதுரை தன்னிறைவு பெற்ற மாவட்டமாக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

மதுரை தன்னிறைவு பெற்ற மாவட்டமாக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

Madurai : கொரோனா காலமாக இல்லாவிட்டால் மதுரையே குலுங்கும் அளவில் இந்த விழா நடந்து இருக்கும் என மு.க.ஸ்டாலின் கூறினார்.

மதுரை மாவட்டம் அனைத்து வகையிலும் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக உருவாக்கப்படும் என தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநகராட்சியின் அடிப்படை வசதிகளுக்கு 500 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும், 2 ஆண்டுகளில் மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் 320 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவற்றை காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர். வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவர் இந்தநிகழ்வில் பங்கேற்கவில்லை.

ரூ. 51 கோடியே 77 இலட்சம் மதிப்பில் மருத்துவக் கல்லூரி புதிய கல்வியியல் கூடம், ஊரக வளர்ச்சித்துறை புதிய அலுவலகம் உள்ளிட்ட 10 முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தும், 49 கோடி 74 இலட்சம் மதிப்பில் பொது நல ஆய்வகம், தோப்பூரில் தொற்று நோய் சிறப்பு மருத்துவமனை உள்ளிட்ட 11 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், கூட்டுறவுத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட 19 துறைகளின் கீழ் 67,831 பயனாளிகளுக்கு 219 கோடி ருபாய் அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பேசுகையில், "மதுரையின் கோரிக்கைகள் அனைத்தையும் ஆர்வத்துடன், தெளிவாக கேட்டறிந்தார் முதல்வர். கைவிடப்பட்ட பகுதியாக தென் மாவட்டம் இருந்த நிலை இனி மாறும். மதுரையின் வளர்ச்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். மதுரையின் புதிய அத்தியாயத்தின் துவக்கமாக முதல்வரின் செயல்பாடுகள் இருக்கும்" என தெரிவித்தார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளதால் அவரால் நிகழ்வில் பங்கேற்க இயலவில்லை. அவரிடம் தொலைபேசியில் உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். கூட்டத்திற்கு வர வேண்டாம் என அவரை அறிவுறுத்தி உள்ளேன். இந்த நிகழ்ச்சி சிறப்புற நடத்திட உழைத்த மூர்த்திக்கு நன்றி.

கொரோனா காலமாக இல்லாவிட்டால் மதுரையே குலுங்கும் அளவில் இந்த விழா நடந்து இருக்கும். ஜல்லிக்கட்டு விழாவை சிறப்பாக நடத்திய பெருமை மூர்த்தியையே சாரும்.
எல்லா விழாக்களையும் பிரம்மாண்டமாக நடத்திக் காட்டுபவர் மூர்த்தி. காளையை மூக்கனாங்கயிறு போட்டு கட்டுப்படுத்துவது போல அவரை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறோம், இல்லையெனில் மிக பிரம்மாண்டமாக நடத்தி விடுவார்" என புகழாரம் சூட்டினார்.

மேலும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறித்து பேசுகையில் "மூன்று தலைமுறைகளாக மாநில வளர்ச்சிக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர் பி.டி.ஆர். அமைச்சரவையில் மிக கடினமான துறை நிதி துறைதான். நிதி நிலைமை மோசமாக இருந்தாலும், தனது மொத்த திறமைகளையும் அளித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார் பிடிஆர்" என பாராட்டினார்.

Also Read : கிலோ கணக்கில் தங்கம், கோடிகளில் ரொக்கம்... கே.பி.அன்பழகன் வீட்டில் நடைபெற்ற ரெய்டில் சிக்கியது என்ன?

தொடர்ந்து பேசியவர், "எனக்கு அரசியல் களமாக அமைந்த மண் மதுரை. சங்க கால மதுரையை நவீன மதுரையாக உருவாக்கியது திமுக ஆட்சி. மதுரைக்கு அறிஞர் அண்ணா துவங்கி கலைஞர் வரை திமுக அரசு பல்வேறு திட்டங்களை அளித்துள்ளது. காலத்தால் அழிக்க முடியாத கரூவூலமாக கலைஞர் நூலகம் அமைய உள்ளது. மதுரை நகர வளர்ச்சி குழுமம் துவக்கி வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் பெருமை கொள்கிறேன். மதுரையை எல்லாவற்றிலும் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக மாற்றப்படும் என உறுதி அளிக்கிறேன்" என்றார்.

Read More : முதல்வர் மு.க. ஸ்டாலின் மீதான18 கிரிமினல் அவதூறு வழக்குகள் ரத்து

புதிய திட்டங்களை அறிவித்து முதலமைச்சர் பேசுகையில், “மதுரை மாநகராட்சியில் சாக்கடை மற்றும் குடிநீர் கட்டமைப்பு பணிகளுக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். வீர வசந்தரயார் பணிகள் முடிந்து 2 ஆண்டுகளில் மீனாட்சி கோவில் குடமுழுக்கு நடத்தப்படும். மொத்த விற்பனை சந்தைகளை புறநகர் பகுதிக்கு மாற்ற 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு. மத்திய சிறைச்சாலை புறநகர் பகுதிக்கு மாற்றப்பட்டு, அந்த சிறைச்சாலை இருந்த இடம் மக்கள் பயன்பாட்டிற்கான பசுமை பகுதியாக மாற்றம் செய்யப்படும்.

Must Read : அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடைபெறும் - அமைச்சர் பொன்முடி

மதுரை நகர் பகுதிகளில் அதிக போக்குவரத்து காணப்படும் சந்திப்புகளில் மேம்பாலம் அமைக்க திட்டப்பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. மதுரையில் புதிய சிப்காட் அமைக்கப்படும். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு மருத்துவ வசதிகள் மற்றும் அருங்காட்சியக பகுதி ஆகியவை உள்ளடக்கிய நவீன அரங்கம் அமைக்கப்படும்" என்றார்.
Published by:Suresh V
First published:

Tags: Madurai, MK Stalin

அடுத்த செய்தி