முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திடீர் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆயுஷ் மருத்துவர்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை : அமைச்சர் மூர்த்தி விளக்கம்

திடீர் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆயுஷ் மருத்துவர்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை : அமைச்சர் மூர்த்தி விளக்கம்

ஆயுஷ் மருத்துவர்கள்

ஆயுஷ் மருத்துவர்கள்

மதுரையில் முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்ட ஆயுஷ் மருத்துவர்களை மீண்டும் பணியமர்த்துவது குறித்து பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

மதுரை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பணிகளில் ஈடுபடுவதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒப்பந்த அடிப்படையில் 29 ஆயுஷ் மருத்துவர்கள் பணி அமர்த்தப்பட்டனர். இவர்கள் கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலையில் 11 மாதங்களாக அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் தோப்பூர் நெஞ்சக நோய் மருத்துவமனையில் பணியாற்றி வந்தனர். கொரோனா வார்டு, ஐசியு வார்டு உள்ளிட்ட வார்டுகளில் கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கான சிகிச்சை பணிகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர்.

இந்நிலையில், கடந்த மே 29 அன்று புதிதாக 80 அலோபதி மருத்துவர்கள் ராஜாஜி மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்டனர். இதனை தொடர்ந்து, அந்த 29 ஆயுஷ் மருத்துவர்களும் நேற்று (ஜூன் 1) அன்று முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் ஆட்சியரை சந்தித்து தங்களை மீண்டும் பணியமர்த்த கோரி மனு கொடுத்தனர்.

அப்போது பேசிய ஆயுஷ் மருத்துவர்கள், ‘கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் பணிகளில் இரவு பகல் பாராது பணியாற்றி வந்தோம். கடந்த 4 மாதங்களாக எங்களுக்கு ஊதியம் வழங்கப்படாத நிலையிலும் எங்கள் பணியை நாங்கள் முழுமையாக செய்து வந்தோம். ஏற்கனவே, அரசின் கட்டுப்பாட்டின் கீழ் பணி தொடர நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், கடந்த ஆட்சியில் பணியமர்த்தப்பட்ட முன்கள பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட மாட்டார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தும் நாங்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளோம். அதிலும், எந்தவித முன்னறிவிப்பு இன்றி திடீரென நீக்கப்பட்டு உள்ளதால் நாங்கள் மன உளைச்சலுக்கும், பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளோம்’ என்றனர்.

பணி நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர்களை அழைத்து பேசிய வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, இவர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து சுகாதாரத்துறை அமைச்சரிடம் பேசி உள்ளதாகவும், விரைவில் இவர்கள் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு மீண்டும் பணியமர்த்த வேண்டிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல் தெரிவித்தார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published: