Home /News /tamil-nadu /

"ரோடுன்னா சிக்னல் இருக்கும்.. வாழ்க்கைன்னா சிக்கல் இருக்கும்.." : வைரலாகும் மதுரை போக்குவரத்து காவலரின் வீடியோ

"ரோடுன்னா சிக்னல் இருக்கும்.. வாழ்க்கைன்னா சிக்கல் இருக்கும்.." : வைரலாகும் மதுரை போக்குவரத்து காவலரின் வீடியோ

"ரோடுன்னா சிக்னல் இருக்கும்.. வாழ்க்கைன்னா சிக்கல் இருக்கும்.." : வைரலாகும் மதுரை போக்குவரத்து காவலரின் வீடியோ

"ரோடுன்னா சிக்னல் இருக்கும்.. வாழ்க்கைன்னா சிக்கல் இருக்கும்.." : வைரலாகும் மதுரை போக்குவரத்து காவலரின் வீடியோ

மதுரை தமிழில் அழகு அறிவுரைகள் வழங்கியபடியே வாகன ஓட்டிகளை வழிநடத்தும் போக்குவரத்து காவலரின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. யார் அந்த மக்கள் மனம் கவர்ந்த காவலர்?

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
"ரோடுன்னா சிக்னல் இருக்கும்; மனிதன் என்றால் சிக்கல் இருக்கும்... குடும்பம்னா சண்டை இருக்கும்... எல்லாத்தையும் அனுசரிச்சு விட்டுக்கொடுத்து போகனும்... அது தான் வாழ்க்கை..." என்று ஒரு போக்குவரத்து காவலர் மைக்கில் பேசிக் கொண்டிருப்பது போல அந்த வீடியோ ஆரம்பமாகிறது. அப்படி பேசிக் கொண்டிருந்தவர் சட்டென அவரை கடந்து செல்லும் வாகன ஒட்டிக்கு "குட் மார்னிங்" சொல்கிறார்.

தொடர்ந்து பேசியவர், "எதைப்பற்றியும் கவலைப்பட கூடாது. இன்னைக்கு விட நாளைக்கு நல்லாருப்போம். நம்பிக்கை தான் வாழ்க்கை" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே..."எடுத்து வாங்கயா.... வாங்க... ஒவ்வொரு வண்டியா வாங்க..." என சிக்னலை எதிர்பார்த்து நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு தனது பேச்சால் சிக்னல் கொடுத்து உற்சாகப்படுத்தி வழிநடத்துகிறார்.

தொடர்ந்து, "விட்டுக்கொடுக்கனும்... அம்மாட்ட விட்டுக் கொடுக்கணும், அப்பாட்ட விட்டுக் கொடுக்கணும்... சம்சாரத்துக் கிட்ட காலம் பூராவும் விட்டுக் கொடுக்கனும்... அடுத்தவங்க கிட்ட மனைவிய விட்டுக் கொடுக்கவே கூடாது..." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சிக்னல் மாறுகிறது.

"வாங்க... பொறுமையா வாங்க... பொறுமையா வந்தா, வாழ்க்கை அருமையா இருக்கும்... வாங்கயா... என்னய்யா கொண்டு போக போறோம்... இருக்கிறதை வச்சு வாழ்ந்தா போதும்" என்று சொல்லி முடிக்கையில் மீண்டும் சிக்னல் மாறுகிறது. மீண்டும் வாகன ஓட்டிகளுக்கு உரிய அவருடைய வழக்கமான வழிகாட்டுதல் மொழி அவர்களை வழியனுப்புகிறது."வாங்க... டிராக்டர் வாப்பா... ரைட்ல ஏறி வாப்பா... லாரி கொஞ்சம் நின்னு வாப்பா... கிராஸ் பண்ணி போற வாகனங்களை டிஸ்டர்ப் பண்ணாதீங்க..." என்று தன் வார்த்தைகளால் வாகன ஓட்டிகளை தட்டிக் கொடுக்கிறார்.

"எல்லாமே ஈசியா கிடைச்சுட்டா, அப்பறம் என்னய்யா வாழ்க்கை? போராடனும்; ஜெயிக்கணும்... உலகத்துக்கு வரும் போது வெறும் கையோட வரணும், போகும் போது வீடு, வாச, காசு, பணம் எல்லாம் சேத்துட்டு வணக்கம் சொல்லிட்டு போயிக்கிட்டே இருக்கணும்... அதுக்கு பேரு தான் திறமை...; வாங்க... ரைட்ல பாத்து வாங்க... வசதியா வாழனும்னா, அசதியா உழைக்கனும்...; ஐயா, மூவ் பண்ணுங்க ரிலாக்ஸா வாங்க...." என்று அவரிடம் இருந்து வழிந்தோடும் வார்த்தைகளில் எது வாழ்க்கைக்கு, எது போக்குவரத்துக்கு என பிரித்தறிய இயலாத அளவிற்கு இரண்டும் பின்னி பிணைந்து இழைந்தோடுகிறது. மொத்தத்தில் அது வெயிலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளின் இதயத்திற்கு இளநீர் வார்க்கிறது.

அவர் பேசும் கருத்தை விட, அவர் பேசும் அழகு மதுரை தமிழை கேட்டதும் அந்த வீடியோவை மாற்ற மனமில்லாமல் தொடர்ந்து மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது. அந்த வீடியோ சமூக வலை தளங்களை ஆக்கிரமித்து வந்த நிலையில், அவர் யாரென அறிந்து கொள்ளும் ஆர்வம் மேலோங்கியது.

மதுரை மேலமடை சாலை சந்திப்பில், போக்குவரத்து சார்பு ஆய்வாளராக பணியாற்றி கொண்டிருக்கும் 55 வயதான பழனியாண்டி தான் அந்த பாராட்டிற்கு உரிய மனிதர். இரண்டு நாட்களுக்கு முன்னர் பணியின் போது அவர் பேசிய வார்த்தைகளை அவ்வழியாக கடந்து சென்ற வாகன ஓட்டி ஒருவர் எடுத்து பகிர்ந்த வீடியோ தான் தற்போது வைரலாக பரவிய நிலையில், அது தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவையும் சென்றடைந்தது என்பதில் ஆச்சரியம் இல்லை.

அந்த வீடியோவை பார்த்த உடனேயே பழனியாண்டியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, "உங்களின் செயலுக்கு மக்களிடம், காவலர்கள் குறித்த நல்ல மதிப்பு உருவாகியுள்ளது. அதனை தொடர்ந்து செய்யுங்கள். மதுரைக்கு வருகையில் பதக்கம் அளித்து பாராட்டு தெரிவிப்பேன். இப்போது என்னுடைய அன்பார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றதும் பூரித்துப் போனார் பழனியாண்டி. அதனை தொடர்ந்து பல்வேறு காவல் உயர் அதிகாரிகளும் அவருக்கு பாராட்டுக்களை அள்ளி அள்ளி தந்து கொண்டிருக்கிறார்கள்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் வசிக்கும் பழனியாண்டிக்கு, பூர்வீக தொழில் விவசாயம். 29 ஆண்டுகளாக காவல்துறையில் பணியாற்றி வருகிறார்.  மதுரையில் சட்டம் ஒழுங்கு, மது விலக்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அவர், கடந்த 2 ஆண்டுகளாக போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வருகிறார். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், பழ மார்க்கெட், மேலமடை, ஆவின், சுகுணா ஸ்டோர் ஆகிய சந்திப்புகளில் பணிபுரியும் அவர், சந்திப்புகளில் பரபரப்புடன் காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு, தன்னுடைய வார்த்தைகளால் ஒரிரு நிமிடங்கள் இளைப்பாறுதல் தருகிறார்.

"வீட்டில் ஒரு லட்சம் புத்தகங்கள் வைத்திருக்கிறேன். அதில் பெரும்பாலும் தன்னம்பிக்கை புத்தகங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதனை எடுத்து படிப்பேன். நல்ல கருத்துக்களை தனியாக குறித்து வைத்துக் கொள்வேன். அவை அப்படியே வாகன ஓட்டிகளை வழிநடத்தும் வார்த்தைகளின் இடையே வந்து தானாக விழுந்தது. அது எனக்கும், வாகன ஓட்டிகளுக்கு சந்தோஷத்தை கொடுக்கவே, தொடர்ந்து பேசி வருகிறேன்.யாரையும் அதட்டி பேச மாட்டேன். அன்பாக மட்டுமே பேசுவேன். ஹெல்மெட், மாஸ்க் குறித்த விழிப்புணர்வுகளையும் அவ்வப்போது ஏற்படுத்துவேன். 'மனக்கவலையுடன் வந்தேன், உங்கள் வார்த்தைகளால் கொஞ்சம் ரிலாக்ஸாக செல்கிறேன்' என, தினமும் ஆயிரம் பேர் எனக்கு கை கொடுப்பார்கள், ஆயிரம் பேர் கும்பிடுவார்கள், இரண்டாயிரம் பேர் என்னை பார்த்து புன்னைகைப்பார்கள்" என உற்சாகமாக பகிர்ந்து கொண்டார் பழனியாண்டி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவ்வழியாக கடந்து செல்லும் நீதிபதிகள், அரசு அதிகாரிகள் பாராட்டியதாகவும், முன்னாள் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அவரது காரை விட்டு இறங்கி வந்து, சாலையில் வைத்து பொன்னாடை போர்த்தி அவரை கவுரவம் செய்ததாகவும் பெருமையுடன் தெரிவித்தார் பழனியாண்டி.

காவலர்களிடம் எப்போதும் கடுமை நிறைந்த வார்த்தைகளை கேட்டு பழகிய மக்களுக்கு, கனிவு நிறைந்த தன் வார்த்தைகளால் அவர்களின் மனம் கவர்ந்த காவலராக மாறியிருக்கும் பழனியாண்டியும், அவரின் இயல்பான தமிழும், மதுரைக்கு மற்றுமொரு சிறப்பாகவே பார்க்கப்படுகிறது.
Published by:Esakki Raja
First published:

Tags: Madurai, News On Instagram, Traffic Police

அடுத்த செய்தி