பசியின் கேள்விக்கு பதிலாக மாறிய "திருநகர் பக்கம்" - எளியோரின் வயிறு நிறைக்கும் மதுரையின் மனிதநேயர்கள்

மதுரை

கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2020 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் 51 நாட்கள் நூற்றுக்கணக்கான ஆதரவற்ற மக்களுக்கு இரவு உணவு வழங்கியுள்ளனர்.

  • Share this:
மதுரையில் ஊரடங்கால் தவிக்கும் ஆதரவற்ற எளியோர், முதியோர், வீட்டு தனிமையில் உள்ளோர் என தினமும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு உணவளித்து காப்பாற்றி வருகின்றனர் "திருநகர் பக்கம்" குழுவினர்.

ஊரடங்கு காலம்... வாழ்க்கையின் மீது ஆதரவற்ற எளிய மக்கள் கொண்டிருக்கும், குறைந்தபட்ச நம்பிக்கையையும் சுக்கு நூறாக்கி விடும் ஆபத்து நிறைந்தது. அந்த நம்பிக்கைகள் உடைந்து விடாமல் காப்பதற்கு, மனிதநேயத்தின் தனல் சுமக்கும் இதயங்கள் தேவைப்படுகின்றன.அப்படியான சில இதயங்களின் கூட்டு உழைப்பு தான் மதுரையின் "திருநகர் பக்கம்" குழு.

2013 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தக்குழு மரம் வளர்ப்பதில் துவங்கி, விலங்கினங்கள் மீட்பு, முதியோர் காப்பகம், பேரிடர் கால களப்பணி என மனிதத்தின் அத்தனை சாத்தியங்களையும் சத்தமில்லாமல் நிறைவேற்றி சாதித்துக் கொண்டிருக்கிறது.

கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2020 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் 51 நாட்கள் நூற்றுக்கணக்கான ஆதரவற்ற மக்களுக்கு இரவு உணவு வழங்கியுள்ளனர்.அந்த அரும்பணியை இந்த ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.தினமும் நூறு பேருக்கு உணவளிக்க முயற்சித்த இந்த குழுவினர், இப்போது 400 பேர் வரைக்கும் கூட மிக சாதாரணமாக உணவளித்து அசத்திக் கொண்டிருக்கின்றனர்.

திருநகர் பக்கம் குழுவின் ஒருங்கிணைப்பாளர் விஷ்வா பேசுகையில்... "சென்னை வெள்ளம், கஜா புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களில்,  இருக்கின்ற மக்களிடம் இருந்து உதவிகளை பெற்று, இல்லாத மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளோம்.அதன் தொடர்ச்சியாக இப்போது கொரோனா ஊரடங்கு காலத்திலும் நாங்களே உணவு சமைத்து வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கும், ஆதரவற்று சாலையோரம் வசிப்பவர்கள், கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி வீட்டு தனிமையில் இருப்பவர்கள் ஆகியோருக்கு இரவு உணவு வழங்கி வருகிறோம்.

சாம்பார் சாதம், காய்கறி சாதம், இட்லி, பூரி, சீரக சாதம் என தினம் ஒரு சத்தான உணவை வீட்டிலேயே தூய்மையாக தயாரித்து கொடுக்கிறோம். இரவில் ஒருவர் பட்டினியாக இருந்தால் அவருடைய அன்றைய தூக்கமும் கெட்டு, அடுத்த நாள் பகலும் மிக கொடுமையாக இருக்கும்.எனவே தான், இரவு உணவை மட்டும் தவறாமல் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

நான் ஒரு கல்யாண வீடியோகிராபர், என் மனைவி பரதம் டீச்சர்... இப்படி, பல்வேறு தொழில், குடும்ப பின்புலங்களை கொண்ட அறுபதுக்கும் மேற்பட்ட நண்பர்கள் எங்கள் குழுவில் உள்ளனர். எந்த காலத்திலும் துணிச்சலாக செயல்படும் எங்கள் குழுவின் வல்லமையும்,தைரியமாக இருங்கள், இயன்றதை தருகிறோம் என்று சொல்லும் மக்களின் நம்பிக்கையும் எங்களை இயக்கிக் கொண்டிருக்கிறது" என்றார்.

குழுவில் உள்ள தன்னார்வலர் நாகலட்சுமி பேசுகையில்..."
எங்கள் வீட்டில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கொரோனா காலத்தில் வெளியே சென்று பலரை நேரில் சந்தித்து உதவுவதில் முதலில் எங்களுக்கும் பயமாக இருந்து.ஆனால், ஒவ்வொரு நாளும் உணவு கொடுக்கும் போது, "நாளையும் வந்து உணவு தருவீர்களா...?" என்று அந்த மக்கள் கேட்கும் ஏக்கம் நிறைந்த பசியின் கேள்விக்கு, பதிலாகவே ஒவ்வொரு நாளும் தவறாமல் சென்று கொண்டிருக்கிறோம்" என கண்கள் கலங்க கூறினார்.

மேலும்,"எங்கள் குழுவில் இருக்கும் யாருக்கும் எந்த ஒரு லாப நோக்கமும் கிடையாது. எல்லோரும் ஒரே குடும்பமாக மாறி செயல்பட்டு கொண்டிருக்கிறோம். இவர் இந்த வேலை தான் செய்ய வேண்டும் என்கிற பாகுபாடு இல்லாமல் உழைக்கிறோம். ஆண்களும் காய் நறுக்கி, சமையல் செய்து, பாத்திரம் கழுவி ஒத்துழைப்பு தருகின்றனர்" என்றார்.

காலையில் இருந்து மாலை வரை வீட்டிலேயே அனைவரும் சேர்ந்து சமைத்து பொட்டலம் கட்டிய உணவுகளை காரிலும், பைக்கிலும் எடுத்துக்கொண்டு ஆளுக்கொரு திசையில் பறக்கின்றனர் திருநகர் பக்கம் குழுவின் இளைஞர்கள். திருநகர், திருப்பரங்குன்றம், விளாச்சேரி, பசுமலை, பைகரா உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கும், வீட்டு தனிமையில் உள்ள நோயாளிகளுக்கும் நேரில் சென்று கைகளில் உணவை கொடுத்து விட்டு அவர்களின் கண்களின் தெரியும் நன்றியின் வாசனையை நுகர்ந்து நுகர்ந்து உயிர் நிறைந்து கொண்டிருக்கின்றனர்.

திருப்பரங்குன்றம் கோவில் அடிவாரத்தில் வசிக்கும் பாலமுருகன் பேசுகையில். "என் சொந்த ஊர் தேனி. குடும்பம் என்று சொல்லிக் கொள்ள யாருமில்லை. இங்குள்ள ஒரு இரும்பு கடையில் வேலை பார்த்தேன். அவ்வப்போது, உணவு பந்திகளில் தண்ணீர் ஊற்றி சம்பாதிப்பேன். இரண்டும் இல்லாவிடில், குப்பை பொறுக்கி அதன்மூலம் வயிறை சமாதானப்படுத்தி கொள்வேன்.இப்போது ஊரடங்கு போட்டுள்ளதால், எனக்கு ஒரு வேலை உணவிற்கு கூட பணமில்லை. வெளியில் சென்று யாரிடமாவது கேட்டு வாங்கிக் கொள்ளலாம் என்றால் போலீசார் அனுமதிப்பதில்லை.இந்த சூழலில், இவர்கள் அளிக்கும் உணவே என் பசியாற்றி காப்பாற்றிக் கொண்டிருக்கிறது" என்றார்.

திருநகர் பக்கம் என்கிற பெயரில் எளிய மக்களுக்கு உதவியும், ஊர்வனம் என்ற பெயரில் மரங்கள் நட்டும், நீர்வனம் என்ற பெயரில் ஏரி, குளங்கள் தூர்வாரியும், அடைக்கலம் என்ற பெயரில் ஆதரவற்ற பல முதியோர்களுக்கு வாழ்க்கையும் அளித்துக் கொண்டிருக்கும் இவர்கள் இந்த நூற்றாண்டிற்கான மானுட நம்பிக்கையின் மற்றுமொரு சாட்சி!...உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ramprasath H
First published: