திருமங்கலம்: கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் கேட்டு மிரட்டல்: வாகனங்களை குறுக்கே நிறுத்தி போராட்டம்!

கப்பலூர் சுங்கச்சாவடி

திருமங்கலம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டையில் இருந்து திருமங்கலம் செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு திடீரென கட்டணம் கேட்டு  ஊழியர்கள்  மிரட்டியதாக கூறப்படுகிறது.

 • Share this:
  சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகள் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்களிடையே வாக்குவாதம், மோதல் என்பது அவ்வப்போது தொடர்கதையாகவே நடைபெற்று வருகிறது.

  மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு திடீரென சுங்கச்சாவடி நிர்வாகம் கட்டணம் கேட்டு மிரட்டியதால் வாகனங்களை சுங்கச்சாவடி குறுக்கே நிறுத்தி 2 மணிநேரம் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது

  திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.  இங்கு சர்வீஸ் சாலையை பயன்படுத்தி உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டிருந்தது மேலும் திருமங்கலம் நகர் பகுதியில் கப்பலூர் சுங்கச்சாவடியில் அடிக்கடி கட்டணம் கேட்டு வசூல் செய்ததால் வாகன ஓட்டிகள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

  இந்நிலையில் திருமங்கலம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டையில் இருந்து திருமங்கலம் செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு திடீரென கட்டணம் கேட்டு  ஊழியர்கள்  மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களின் வாகனங்கள் தங்களுடைய கனரக வாகனங்களை கப்பலூர் சுங்கச்சாவடியில் நடுவே நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் இச்சம்பவம் தொடர்ந்து 2 மணி நேரமாக நடந்தது. போராட்டத்தின்போது சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் கப்பலூர் தொழிற்பேட்டை நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

  கப்பலூர் சுங்கச்சாவடியில் வாகனங்களை குறுக்கே நிறுத்தி போராட்டம்! இதனைத் தொடர்ந்து இரண்டு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

  கடந்த 10 ஆண்டுகளாக முழு வாகனங்களுக்கு கட்டண விலக்கு இருக்கும் நிலையில் அவ்வப்போது கட்டணம் கேட்டு மிரட்டி வருவதால் திருமங்கலம் பகுதியை சேர்ந்த உள்ளூர் வாகன ஓட்டுநர்கள் கப்பலூர் சுங்கச்சாவடியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

  சிவக்குமார் தங்கையா - திருமங்கலம் செய்தியாளர்
  Published by:Arun
  First published: