காந்தியின் அடையாளத்திற்கு வயது 100 - அரையாடை புரட்சியை கொண்டாட தயாராகிறது மதுரை!

காந்தி

மதுரையில் அரையாடைக்கு மாறி மகாத்மா காந்தி தனது தோற்றத்தில் மேற்கொண்ட புரட்சியின் நூற்றாண்டு நினைவை செப்டம்பர் 22ஆம் தேதி கொண்டாடுகிறது மதுரை காந்தி அருங்காட்சியகம். 

  • Share this:
இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தேசத்தந்தை மகாத்மா காந்தி இதுவரை 20 முறை தமிழகம் வந்துள்ளார். அதில், 5 முறை மதுரைக்கு வந்த போது பல்வேறு முக்கியமான புரட்சிகளுக்கு வித்திட்டுள்ளார். 1919 ல் ரவுலட் சட்டத்திற்கு எதிராக இளைஞர்களை திரட்டவும், 1921 ல் ஒத்துழையாமை இயக்கத்திற்கு பரப்புரை மேற்கொள்ளவும், 1927 ல் கதர் துணிகளுக்கு பரப்புரை செய்யவும், 1934 ல் அரிஜன நல யாத்திரைக்கும், 1946 ல் அரிஜன வழிபாட்டிற்கு மீனாட்சி அம்மன் கோவிலில் அனுமதித்த போதும் வருகை தந்துள்ளார்.மதுரைக்கு இரண்டாவது முறையாக 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி பிற்பகலில் வந்திறங்கினார் காந்தி. ஒத்துழையாமை இயக்கத்துடன், சுதேசி மற்றும் கதர் பரப்புரையை மேற்கொள்ள வந்தவர், மதுரை மேலமாசி வீதியில் இருந்த அவரது ஆதரவாளர் ராம் கல்யாண்ஜி என்பவருக்கு சொந்தமான 251 A என்ற எண் கொண்ட வீட்டில் தங்கினார். குஜராத் பாரம்பரிய உடையில் தலைப்பாகை, வேஷ்டி, சட்டை அணிந்து வந்திருந்த காந்தி,மறுநாள் செப்டம்பர் 22 ஆம் தேதி காலை தனது தலையை மொட்டை அடித்துக் கொண்டு, வேஷ்டி மற்றும் ஒரு துண்டு மட்டும் அணிந்த படி தோன்றினார்.கூலி தொழிலாளிகள், விவசாயிகளின் ஏழ்மையை உணர்த்தும் வகையில் தன்னுடைய உடையை மாற்றிக்கொள்ள நினைத்துக் கொண்டிருந்த காந்தி, மதுரையில் அந்த முடிவை செயல்படுத்தினார். "எனது வாழ்க்கை பயணத்தில் நான் மேற்கொண்ட மாற்றங்கள் குறித்து பின்னர் நான் வருந்தியது கிடையாது. நான் அவற்றை செய்தே ஆக வேண்டியிருந்தது. அத்தகைய பெரும் மாற்றம் ஒன்றினை எனது உடையில் நான் மதுரையில் செய்தேன்" என காந்தி தனது குறிப்புகளில் பதிவு செய்துள்ளார்.

இந்தியாவின் ஏழ்மையை உணர்த்துவதற்காக காந்தி அணிந்த அரையாடையே அவரது அடையாளமாகவும் மாறிப்போனது. மதுரை மேலமாசி வீதியில் அவர் தங்கியிருந்த வீடு 1954 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்த போது அதை தமிழ்நாடு கதர் கிராம கைத்தொழில் வாரியம் வாங்கி கதர் விற்பனையை நடத்தி வருகிறது.தற்போதும் மேலமாசி வீதியை கடக்கையில் அந்த வீட்டையும், அதில் "வறுமையில் வாடித்தவிக்கும் பாமர மக்களின் தானும் ஒருவன் என்பதை உணர்த்தும் வகையில் காந்தியடிகள் முழந்தாள் வரை ஆடை உடுத்தி விரதம் மேற்கொண்ட இடம்" என பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டினையும் காணலாம்.

முதன் முறையாக அந்த அரையாடை தோற்றத்துடன் 1921 செப்டம்பர் 22 ஆம் தேதியே மதுரை மக்கள் முன்பு உரையாற்றினார்.அப்படி அவர் தோன்றிய இடத்தில் 1984 ஆம் ஆண்டு அவரது திருவுருவ சிலை அமைக்கப்பட்டு, தற்போது காந்தி பொட்டல் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

அதன்பின்னர், 1934 ஆம் ஆண்டு நான்காவது முறையாக காந்தி மதுரைக்கு வந்து மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்ய சென்ற போது, அப்போது விடுதலை போராட்ட வீரராக இருந்த கக்கனை கோவிலுக்குள் நுழைய அனுமதி அளிக்கவில்லை. "எப்போது அனைவரும் இந்த கோவிலுக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படுகிறதோ அப்போது நானும் நுழைந்து கொள்கிறேன்" என தெரிவித்து வழிபாடு செய்யாமல் திரும்பி சென்றார். பின், 1946 ஆம் ஆண்டு கடைசியாக மதுரை வந்த போது, அரிஜனர்கள் வழிபட மீனாட்சி அம்மன் கோவிலில் அனுமதி அளிக்கப்பட்ட செய்தியறிந்து சுவாமி தரிசனம் செய்தார்.

இப்படி மகாத்மா காந்திக்கும் மதுரைக்கும் உள்ள முக்கியத்துவத்தை சிறப்பிக்கும் வகையில், ராணி மங்கம்மாள் அரண்மனையில் 1959 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 அன்று இந்தியாவில் முதன்முறையாக காந்திக்கு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு நேரில் வந்து அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.இந்தியா முழுவதும் ஏழு இடங்களில் காந்திக்கு அருங்காட்சியகம் இருந்தாலும், தென்னிந்தியாவில் உள்ள ஒரே அருங்காட்சியகம் இது தான். இங்கு, காந்தி சுடப்பட்ட போது அணிந்திருந்த அவரது இரத்தக்கறை படிந்த வேஷ்டி பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது.இந்த அருங்காட்சியகம், தற்போது மகாத்மா காந்தியின் அரையாடை புரட்சியின் நூறாண்டு நினைவு தினத்தை வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி கொண்டாட தயாராகி கொண்டிருக்கிறது.அது குறித்து, அருங்காட்சியக இயக்குநர் நந்தா ராவ் கூறுகையில், "காந்தியின் 150 வது பிறந்தநாள் விழா அவ்வளவு சிறப்பாக நாடு முழுவதும் கொண்டாடப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. எனவே, அவரது அடையாளத்தின் நூற்றாண்டு தினத்தை சிறப்பாகவும் எளிமையாகவும் கொண்டாட திட்டமிட்டு உள்ளோம். இந்த விழாவில், காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா கலந்து கொள்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். அவர் வரும் பட்சத்தில் அன்றைய தினமே அருங்காட்சியகத்தை புனரமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்படும்" என்றார்.மேலும், "300 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் இயங்கி வரும் அருங்காட்சியகத்தை 6 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கும் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. விளக்குகளை நவீன படுத்தவும், புகைப்படங்களை டிஜிட்டல் மயமாக்கவும், காந்தி குறித்த தகவல் மையம் அமைக்கவும், அருங்காட்சியக மேல் தளத்திற்கு செல்ல லிப்ட் வசதியும் ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளோம்" என கூறினார்.

இந்தியா முழுவதும் பயணித்த மகாத்மா காந்தியடிகள் மதுரையில் செய்த மகத்தான புரட்சிகள் குறித்து இளைய தலைமுறையினருக்கு தெரியாது எனவும், அவர்களிடம் காந்தியையும், காந்தியின் மகத்துவத்தையும் கொண்டு சேர்க்க இது நல்ல தருணமாக அமையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: