மதுரையில் இ- பாஸ் இருந்தும் ரூ.500 அபராதம்; வைரலாகும் தண்ணீர் கேன் இளைஞரின் மன உளைச்சல் ஆடியோ

மதுரை தண்ணீர் கேன் போடும் நபர்

மதுரையில் கேன் தண்ணீர் சப்ளை செய்பவருக்கு போலீசார் 500 ரூபாய் அபராதம் விதித்த காரணத்தால், மனஉளைச்சல் அடைந்தவர் தனது இயலாமையை வாட்ஸ்அப்பில் தனது நண்பர்கள் குழுவில் பகிர்ந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

  • Share this:
மதுரை நேருநகர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தனது மினிவேன் மூலம் எல்லீஸ் நகர், ஆண்டாள்புரம், சுந்தர்ராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கேன் தண்ணீர் சப்ளை செய்து வருகிறார்.

இன்றும் தனது வாகனத்தில் ஆண்டாள்புரம் பகுதியில் தண்ணீர் சப்ளை செய்துவிட்டு வீடு திரும்பியவரை அந்தபகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர்களிடம் இ பாஸ் உள்ளிட்ட ஆவணங்களை முறையாக காட்டியுள்ளார்.

அவற்றை சோதனை செய்தபின்னர் அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். தன்னிடம் முறையாக ஆவணங்கள் இருந்தபோதிலும் அபராதம் விதித்தது குறித்து கேள்வி கேட்டுள்ளார். அதற்கு, எந்தவித பதிலும் அளிக்காமல் கார்த்திகேயனை அங்கிருந்து புறப்பட்டு செல்லுமாறு போலீசார் கூறியுள்ளனராம்.

இதுகுறித்து அந்த ஆடியோவில் பேசிய கார்த்திகேயன்,
’தற்போது கொரோனா ஊரடங்கால் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ள நிலையில், அவசர தேவைக்காக வீடுகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் குடிநீர் சப்ளை செய்து வருவதாகவும், இந்தநிலையில் கொரோனா பரவல் காலத்திலும் லாப நோக்கம் இன்றி சேவையாக பணியில் ஈடுபட்டு வருகிறேன்.

இந்நிலையில், போலீசார் திடீரென விதித்துள்ள 500 ரூபாய் அபராதம் என்பது தற்போது உள்ள சூழ்நிலையில் பெரும் இழப்பாகவே உள்ளது. இதனால் நாளை வாகனத்திற்கு டீசல் கூட போட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது எனவும், ஏற்கனவே வாகனத்திற்கான மாத தவணைக்கூட கட்டமுடியாமல் இருந்து வருவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு மனஉளைச்சல் அடைந்த கார்த்திகேயன் தனது இயலாமை குறித்து வாட்ஸ்அப்பில் தனது நண்பர்கள் குழுவில் பகிர்ந்த ஆடியோ தற்போது வருவது வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் குறித்து காவல் துறையினரும், மாவட்ட நிர்வாகமும் உரிய விளக்கம் அளித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: