ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த வடமாநில தொழிலாளர்கள்; கோதுமை மாவு கொடுத்து உதவும் மதுரைக்காரர்கள்!

வடமாநில தொழிலாளர்கள்

"ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஒரே ஒரு முறை தான் உணவு கொடுத்தனர். இப்போது, குழந்தைகளுக்கு மருந்து தேவைப்படுகிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை."

  • Share this:
ஊரடங்கு நடைமுறைகளால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் வடமாநில தொழிலாளர்களின் உணவிற்கான மளிகை பொருட்கள் வழங்கி உதவிக் கொண்டிருக்கிறார்கள் மதுரை மக்கள்.

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் பல வருடங்களாக மண் பொம்மைகள், சிலைகள் வியாபாரம் செய்து, அங்கேயே குடில் அமைத்து வசித்து வருகிறார்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த  எழுபதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நடைமுறைகள் காரணமாக இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, உணவுக்கும் வழியில்லாமல், சொந்த ஊர் செல்லவும் வாய்ப்பில்லாமல் தவித்து வந்துள்ளனர்.

இவர்களின் நிலை பற்றி அறிந்த, மதுரை மாப்பாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள், 100 கிலோ கோதுமை மாவு, 50 கிலோ உருளை கிழங்கு, 20 லிட்டர் சமையல் எண்ணெயும் வழங்கி உள்ளனர்.

இது குறித்து பேசிய அவர்கள், "கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி உதவலாம் எனும் நோக்கத்தில் துவங்கினோம்.  தினமும் 100 முதல் 150 நபர்களுக்கு உணவு வழங்கி கொண்டிருந்தோம். ராஜஸ்தானை சேர்ந்த 70 பேர் குடும்பத்துடன் உணவு கிடைக்காமல் தவித்து வருவதாக கேள்விப்பட்டு வந்து இவர்களிடம் விசாரித்தோம். அவர்கள், அரிசி உணவு சாப்பிடுவதில்லை எனவே கோதுமை மாவு, உருளை கிழங்கு, எண்ணெய் கொடுங்கள் என கேட்டனர். எனவே, அவைகளை வாங்கி வந்து அளித்துள்ளோம். முன்பு 50 - 100 பேருக்கு உணவு அளித்துக் கொண்டிருந்தோம். இப்போது மாப்பாளையம் பகுதியை சேர்ந்த மேலும் பல நண்பர்களும் இணைந்து கொண்டதால் நாங்கள் 200-300 பேருக்கு விநியோகம் செய்து வருகிறோம். இது எங்களுக்கு மன நிறைவை தருகிறது" என்றனர்.

Read More:   காங்கிரஸ் டூல் கிட் விவகாரம்: டெல்லியில் ட்விட்டர் நிறுவன அலுவலகங்களில் திடீர் சோதனை!

ராஜஸ்தான் மாநில பெண் தொழிலாளி கூறுகையில்,
"ஊரடங்கு காலம் என்பதால் வியாபாரம் இல்லாமல் மிகவும் சிரமமான சூழலில் உள்ளோம். இந்த நேரத்தில் இவர்கள் செய்துள்ள உதவிக்கு நன்றி சொல்கிறோம். ஆனால், ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஒரே ஒரு முறை தான் உணவு கொடுத்தனர். இப்போது, குழந்தைகளுக்கு மருந்து தேவைப்படுகிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை." என கவலையுடன் கூறினார்.

Read More:   அரசு கொடுத்த உதவி தொகையை அரசுக்கே நிவாரணமாக அளித்த மூளை வளர்ச்சி குன்றிய சிறுமி!

கடந்த ஊரடங்கு காலத்தில் அதிகம் பாதிப்புகளை சந்தித்த புலம்பெயர் தொழிலாளர்கள் இந்த ஊரடங்கிலும் அதை சந்தித்து விடக்கூடாது என்பதை அரசு நினைவில் கொள்ள வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Published by:Arun
First published: