ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரிய பறவை இனங்கள் கொண்ட இயற்கை பொக்கிஷங்கள் நிறைந்த அரிட்டாபட்டி: பல்லுயிர் சூழல் மண்டல அரசாணை வெளியிட கோரிக்கை

அரிய பறவை இனங்கள் கொண்ட இயற்கை பொக்கிஷங்கள் நிறைந்த அரிட்டாபட்டி: பல்லுயிர் சூழல் மண்டல அரசாணை வெளியிட கோரிக்கை

அரிட்டாப்பட்டி

அரிட்டாப்பட்டி

மதுரையிலுள்ள அரிட்டாபட்டி கிராமப்பகுதியை பல்லுயிர் சூழல் மண்டலமாக அறிவிக்கும் அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மதுரையிலுள்ள அரிட்டாபட்டி கிராமத்தில் உள்ள 7 மலைகள், நீர் நிலைகள், அரிய பறவை இனங்கள் அடங்கிய இயற்கை பொக்கிஷங்களை காப்பாற்ற, பல்லுயிர் சூழல் மண்டலத்திற்கான அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகத்தில் உள்ள மதுரை அரிட்டாபட்டி, திருநெல்வேலி வாகைக்குளம், கோவை வேளாண் கல்லூரி ஆகிய 3 இடங்களை பல்லுயிர் சூழல் மண்டலமாக அடையாளம் கண்டு அறிவித்தது தமிழக அரசு. இதில் மதுரை அரிட்டாபட்டியை தேர்வு செய்ய காரணம், அங்கிருக்கும் பெரும் இயற்கை கொடைகளே.

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் உள்ளது அரிட்டாபட்டி எனும் சிறிய கிராமம். இங்கு ஏழு பாறை மலைகள் உள்ளன. அதில் கிபி 7-8 ஆம் நூற்றாண்டில் முற்கால பாண்டியர் வடிவமைத்த குடைவரை சிவன் கோவில், இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தைய சமணர் படுகைகள் உள்ளிட்டவை தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

மலைக்கோயில்

இந்த மலைகளை சுற்றி வற்றாத நீரூற்றுகளும், நூற்றுக்கும் மேற்பட்ட நீர் நிலைகளும், 1,200 வகையான மீன் இனங்களும், 600 வகையான பூச்சி இனங்களும், 300 க்கும் மேற்பட்ட அரிய பறவை மற்றும் விலங்கினங்களும் வாழ்ந்துள்ளன. இதில் பல அரிய உயிரினங்கள் காலப்போக்கில், சமூக விரோதிகளின் பல்வேறு நடவடிக்கைகளால் அழிந்து விட்டன. இதன் காரணமாகவே இந்த இடம் பல்லுயிர் சூழல் மண்டலமாக அடையாளம் காணப்பட்டு, அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அதற்கான அரசாணை வெளியிடப்படாமல் உள்ளது. இதனால் பல்லுயிர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.

அரிட்டாப்பட்டி பறவை

இந்த பல்லுயிர்களின் பாதுகாப்பு சார்ந்து தொடர்ந்து இயங்கி வரும் ஏழு மலைகள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் கூறுகையில், ’ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இது போன்ற இடங்கள் சூழலியல் மண்டலமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அரிய பறவை

ஆனால், தமிழகத்தில் அது சார்ந்த நடவடிக்கைகளில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. அரிட்டாபட்டியை பல்லுயிர் சூழல் மண்டலமாக அறிவிக்காவிட்டால் மனிதர்கள் வாழ இயலாத இடமாக மாறி விடும். ராஜஸ்தான் மற்றும் அரிட்டாபட்டி ஆகிய இரண்டு இடத்தில் மட்டுமே உள்ள லகுடு வல்லூறு என்ற பறவை இனம் முற்றிலும் அழிந்துவிட்டது. ஓரிரு பறவைகள் மட்டுமே உள்ள நிலையில் இன்னும் சில காலத்தில் அதுவும் அழியும் அபாயம் உள்ளது.

ரவிச்சந்திரன்

மனிதன் பேராசையின் விளைவாக இயற்கையை அழிக்கும் நோக்கில் செயல்படுகிறான். மேலும், உலக வெப்பமயமாதல் காரணமாக நிலத்தடி நீர் கீழே சென்று கொண்டிருக்கிறது.

இது தவிர மேலூரை சுற்றியுள்ள பல நூறு மலைகளை ஏற்கனவே வெட்டி எடுத்து விட்டார்கள். அது போன்ற அபாயம் இந்த மலைக்கு ஏற்பட்டு விடாமல் தடுக்க அரசு உடனே கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் கூறுகையில், ’அரிட்டாபட்டி மலைகளில் நம்முடைய கலாச்சாரம், பண்பாட்டின் தொன்மம் உள்ளது. மதுரையில் சமண படுகைகள் உள்ள மலைகளில் அரிட்டாபட்டி மிக முக்கியமான ஒன்று. அங்கிருக்கும் நீர் நிலைகளை நம்பியே பல்லுயிர் மண்டலம் இயங்குகிறது. இவ்வளவு சிறப்பு மிக்க அரிட்டாபட்டி மலைப்பகுதியை பல்லுயிர் சூழல் மண்டலமாக மாற்றுவதற்கான அறிவிப்பு வெறும் அறிவிப்பாகவே உள்ளது. தமிழக அரசு உடனே அதற்கான அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

உணவுச்சங்கிலி எனும் இயற்கை கட்டமைப்பின் அடிப்படையிலேயே உலகின் உயிர் இயக்கமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதன் சாட்சியாக நம் கண் முன் நிலைத்திருக்கும் அரிட்டாபட்டி மலைகளை காக்க மக்கள் தயாராக இருக்கும் போது, அரசு தாமதிக்கக் கூடாது என்று குரல்கள் எழுந்துள்ளன.

Published by:Karthick S
First published:

Tags: Madurai