மதுரை மக்களுக்கு தினம்தோறும் அருளாசி வழங்கி வந்த மாப்பாளையம் ஆண்ட்ரூஸ் சித்தர் இன்று அதிகாலை காலமானார். அவரது இறுதி ஊர்வலத்தில் கண்ணீர் மல்க பெருந்திரளான மக்கள் பங்கேற்று மலர்தூவி மரியாதை செய்தனர்.
மதுரை எல்லீஸ் நகர் - மாப்பாளையம் பகுதியில் சாலை ஓரத்தில் ஒரு சிறு குடிசையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தார் ஆண்ட்ரூஸ்.இவரை சாக்கடை சித்தர், அழுக்கு சித்தர், ஆண்ட்ரூஸ் பாபா என்றும்,அவரது குடிசைக்குள் நிறைய எலிகள் திரிந்ததால் எலியன் சுவாமிகள் என்றும் பல்வேறு பெயர்களில் மக்கள் இவரை அழைத்து வந்தனர்.
பிறப்பால் இவர் கிறிஸ்தவராக இருந்தாலும், சாதி, மத பாகுபாடுகள் இல்லாமல் தினமும் காலையும், மாலையும் நூற்றுக்கணக்கான மக்கள் இவரை சந்தித்து அருளாசி பெற்றுச் செல்வர். அவரை சந்திக்க வரும் மக்களுக்கு திருநீறு பூசி, வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் ஆண்ட்ரூஸ் சித்தர். மதுரை மட்டுமல்லாது வெளியூர் மக்களும் இவரை தேடி வந்து சந்தித்து ஆசி பெற்று வந்தனர்.
மக்கள் கொடுக்கும் எளிய உணவுகளை உண்டு வாழ்ந்து வந்த ஆண்ட்ரூஸ் சித்தர், வயது முதிர்வின் காரணமாக அவரது 90-வது வயதில், இன்று (மே 4) அதிகாலை 3 மணி அளவில் காலமானார். அவரது இறுதி ஊர்வலம் மாலை 4 மணி அளவில் நடைபெற்றது.

ஆண்ட்ரூஸ் சித்தர்
பழைய ஆட்டோ ஒன்றில் இருக்கை அமைத்து அதில் அவரை அமர வைத்து எல்லீஸ் நகர் - மாப்பாளையம் பகுதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்றனர். இந்த ஊர்வலத்தில் சிவ வாத்தியங்கள் இசைக்க, ஏராளமான மக்கள் பங்கேற்று கண்ணீர் மல்க, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் படிக்க: என் உயிருக்கு ஆபத்து... பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்திக்க உள்ளேன் - மதுரை ஆதீனம்
அவர் வாழ்ந்த குடிசையிலேயே அவரை அடக்கம் செய்ய இட வசதி இல்லாத காரணத்தால், மக்கள் தாமாக முன்வந்து அவரது குடிசை அமைந்திருந்த சாலையிலேயே 7 லட்சம் ரூபாய் பணம் சேகரித்து சிறு இடம் ஒன்றை வாங்கி அதில் ஆண்ட்ரூஸ் சித்திரை அடக்கம் செய்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.