பொங்கல் திருநாளையொட்டி, மதுரை மாவட்டம் பாலமேட்டில், நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலகப்புகழ்பெற்றது. அங்குள்ள மஞ்சமலை ஆற்றுத் திடலில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. பாலமேடு கிராம பொதுமக்கள் மற்றும் மகாலிங்கசாமி மடத்து கமிட்டி சார்பில் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது.
700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளில் ஆயிரத்து 500 போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு முதல் பரிசாக காரும், இரண்டாவது பரிசாக இருசக்கர வாகனமும் அளிக்கப்பட உள்ளது. சிறந்த ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்களுக்கு நாட்டுப்பசுவும் கன்றும் பரிசாக அளிக்கப்பட உள்ளது.
மதுரை அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிகட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. ஒவ்வொரு சுற்றிலும் தலா 50 வீரர்கள் அனுமதிக்கப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக போட்டி நடைபெற்றது. வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த காளைகளை, தீரத்துடன் எதிர்த்து நின்று வீரர்கள் அடக்கி மிக்சி, கிரைண்டர், தங்க காசுகள் உள்ளிட்ட பரிசுகளை அள்ளிச் சென்றனர்.
அனல்பறக்க நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது. 7 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 24 காளைகளை அடக்கிய அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்திக்குக்கு முதலமைச்சர் சார்பில் டேட்சன் கார் பரிசாக வழங்கப்பட்டது. 19 காளைகளை அடக்கிய வளையங்குளம் முருகனுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி சார்பில் இருசக்கர வாகனமும், 12 காளைகளை அடக்கிய விளாங்குடி பாரத்குமாருக்கு பசுங்கன்றும் பரிசாக வழங்கப்பட்டது.
தேவசகாயம் என்பவரின் காளை முதல் பரிசான மோட்டார் சைக்கிளை தட்டிச் சென்றது. அவனியாபுரம் ராமுவின் காளை 2-வது பரிசு வென்றது. வர்ணனையாளர்கள் செங்குட்டுவன், நத்தம் கர்ணனுக்கு தங்கக்காசு பரிசாக வழங்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jallikattu, Madurai