முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அரசு கொடுத்த உதவி தொகையை அரசுக்கே நிவாரணமாக அளித்த மூளை வளர்ச்சி குன்றிய சிறுமி!

அரசு கொடுத்த உதவி தொகையை அரசுக்கே நிவாரணமாக அளித்த மூளை வளர்ச்சி குன்றிய சிறுமி!

சிறுமி தனோலா பிரீத்தி ஏஞ்சலின்

சிறுமி தனோலா பிரீத்தி ஏஞ்சலின்

"முதல்வர் ஸ்டாலின் ஐயாவுக்கு நான் கொடுத்துள்ள இந்த பணத்தில் மருந்து வாங்கி கொரோனா நோயால் பாதிக்கப்படும் மக்களை காப்பாற்றுங்கள்."

  • Last Updated :

மதுரையை சேர்ந்த மூளை வளர்ச்சி குன்றிய சிறுமி ஒருவர், தனக்கு அரசு அளிக்கும் உதவி தொகையை அரசுக்கே கொரோனா நிவாரணமாக வழங்கி நெகிழ்ச்சி அளிக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார்.

மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் - பேபியம்மாள் தம்பதிகளின் ஒரே மகள் - தனோலா பிரீத்தி ஏஞ்சலின். இச்சிறுமிக்கு மூளை வளர்ச்சி குறைபாடு காரணமாக, வயதிற்கு உரிய உடல் வளர்ச்சி இல்லை.

இவருடைய தந்தை ராஜ்குமார் கூட்டுறவு துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், இவருடைய ஓய்வூதிய தொகை 10,000 மற்றும் ஏஞ்சலினுக்கு அரசு வழங்கும் உதவித்தொகை 1,500 ரூபாயும் தான் இவர்களின் குடும்பத்தின் மொத்த வாழ்வாதாரம்.

இந்த சூழலில் உலகின் இயக்கத்தையே புரட்டிப்போட்ட கொரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏஞ்சலின் மனதிலும் ஆறாத தாக்கத்தை ஏற்படுத்தியது. கொரோனா பாதிப்பு குறித்த செய்திகளை தொலைக்காட்சி, நாளிதழ்கள் வழியாக, பெற்றோர்கள் உதவியுடன் தெரிந்து கொண்டு வந்துள்ளார்.

பெற்றோருடன் சிறுமி தனோலா பிரீத்தி ஏஞ்சலின்

முதலமைச்சருக்கு கொரோனா நிவாரண நிதி வழங்குவது குறித்து பெற்றோர்கள் பேசுவதை கேட்டு ஆர்வமடைந்த ஏஞ்சலின், தானும் உதவ விரும்புவதை அவர்களிடம் வெளிப்படுத்தி உள்ளார். அதனை தொடர்ந்து, மாதம் தோறும் அரசு வழங்கும் உதவித் தொகை 1,500 ரூபாய் மற்றும் அவருடைய சேமிப்பு பணம் 500 ரூபாயையும் சேர்த்து மொத்தம் 2000 ரூபாய் முதலமைச்சருக்கு கொரோனா நிவாரண நிதியாக அனுப்பியுள்ளார்.

தன் மழலை மொழியில் பேசிய ஏஞ்சலின், "முதல்வர் ஸ்டாலின் ஐயாவுக்கு நான் கொடுத்துள்ள இந்த பணத்தில் மருந்து வாங்கி கொரோனா நோயால் பாதிக்கப்படும் மக்களை காப்பாற்றுங்கள். மக்களே நீங்களும் தேவை இல்லாமல் வெளியே வராதீர்கள். முக கவசம் அணியுங்கள், கைகளை சுத்தமாக கழுவுங்கள் பாதுகாப்பாக இருங்கள்" என்று கூறினார்.

மூளை வளர்ச்சி தான் குறைவே தவிர மன வளர்ச்சி அல்ல என்பதை தன் செயலின் மூலம் நிரூபித்துள்ள ஏஞ்சலினுக்கு இப்போதைக்கு ஒரே ஒரு ஆசை தானாம். அது முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்திக்க வேண்டுமாம்.

Read More:   ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த வடமாநில தொழிலாளர்கள்; கோதுமை மாவு கொடுத்து உதவும் மதுரைக்காரர்கள்!

தாங்கள் கொடுத்துள்ள இந்த தொகை மிக சிறிய அளவே என்றாலும், தங்களைப்போல மற்றவர்களும் தங்களால் முடிந்த தொகையை அரசுக்கு வழங்குவது மக்களுக்கு பயனளிக்கும் என்கின்றனர் ஏஞ்சலின் குடும்பத்தினர்.

top videos

    ஏஞ்சலின் போல நிவாரண நிதி கொடுப்பதை விடவும், அவர் அதை கொடுத்த நோக்கம் நிறைவேற வேண்டும் என்று நினைத்து பாதுகாப்பாக இருப்பதே ஏஞ்சலின் முயற்சிக்கு நாம் செய்யும் பெருந்துணை!

    First published:

    Tags: COVID-19 Second Wave, Madurai