தமிழகத்தை ஆளுகிற பொறுப்பை திராவிட இயக்கங்களுக்கு மட்டுமே மக்கள் அளிப்பார்கள் என தெரிவித்துள்ள செல்லூர் ராஜூ, அண்ணாமலைக்கு நப்பாசை இருக்கிறது, இந்த தேர்தல் முடிவு பாஜகவிற்கு பாடம் கற்பிக்கும் எனவும் விமர்சித்துள்ளார்.
மதுரையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நாளை மாலை 5 மணிக்கு பழங்காநத்தம் பகுதியில் பிரச்சாரம் செய்கிறார். அதற்கான முன்னேற்பாடு பணிகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செல்லூர் ராஜு, குடும்ப பெண்களுக்கு 1000 ரூபாய் கொடுப்போம் என பரப்புரையில் முதலமைச்சர் சொல்கிறார். ஆனால், திமுக சொன்னதை செய்ததாக வரலாறு இல்லை. பொங்கலுக்கு வழக்கமாக வழங்கப்படும் வேஷ்டி சேலையையே கொடுக்கவில்லை. அதை முதலில் கொடுக்க சொல்லுங்கள். மக்களை ஏமாற்ற என்ன செய்ய முடியுமோ அதை முதல்வர் செய்து கொண்டிருக்கிறார்.
திமுக ஆட்சியின் மீது மக்கள் கொதிப்பாக உள்ளார்கள், சிறுபான்மை மக்களின் ஆதரவும் அதிமுகவிற்கு இப்போது அதிகமாக இருக்கிறது. திமுகவிற்கு வாக்களித்து செய்த தவறுக்கு பரிகாரம் செய்யும் வகையில் மக்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: கோவையின் முதல் பெண் மேயர் யார்.. கட்சிக்குள்ளும், வெளியிலும் நிலவும் போட்டி
இந்த தேர்தல் திமுக - பாஜக இடையே நடக்கிறது என அண்ணாமலை தெரிவித்த கருத்து தொடர்பாக பேசிய அவர், பாஜகவின் அளவுகோல் என்ன என்பது அண்ணாமலைக்கு நன்றாக தெரியும். உள்ளாட்சி தேர்தல் முடிவு பாஜகவிற்கு பாடம் கற்பிக்கும். தேவை இல்லாமல் அண்ணாமலை ஏதாவது பேசிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு நப்பாசை இருக்கிறது.
ஏற்கனவே, நயினார் நாகேந்திரன் பேசியதற்கு எப்படி வாங்கி கட்டி கொண்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். இது பெரியார், அண்ணா உருவாக்கிய திராவிட பூமி. தமிழக வளர்ச்சி உடன் இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநிலமும் போட்டியிட முடியாது.
அண்ணாமலை என்ன பேசினாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள். ஆளுகிற பொறுப்பை திராவிட இயக்கத்திற்கு தான் மக்கள் கொடுப்பார்கள், பாஜகவிற்கு அளிக்க மாட்டார்கள் என்று கூறினார்.
அதேவேளையில், கொள்கை என்பது வேஷ்டி மாதிரி, கூட்டணி என்பது துண்டு மாதிரி தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுபடும்.
அடுத்த தேர்தலில் மக்களின் மனநிலையை அறிந்து கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து முடிவு செய்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க: போராட்டம் நடத்த சென்ற தமிழக விவசாயிகள் டெல்லி ரயில் நிலையத்தில் தடுத்து நிறுத்தம்
தொடர்ந்து பேசிய அவர்,பாரத பிரதமர் நினைத்ததை சாதித்துக் கொண்டு இருக்கிறார். ஒரு நாடு ஒரே தேர்தல் நடைமுறை அமலுக்கு வரும் என தெரிகிறது. மேற்குவங்கம் போல தமிழகத்திலும் சட்டமன்றம் முடக்கப்படலாம். நான்கு ஆண்டுகள் காத்திருக்க தேவை இல்லை போல. சீக்கிரமே தேர்தல் வந்து விடும் என அதிமுகவினர் உற்சாகமாக உள்ளனர். சட்டமன்றத்தை முடக்கும் ஆசை அதிமுகவிற்கு இல்லை, ஆனால்,
சட்டம் ஒழுங்கு சரி இல்லாததால் அந்த நிலை வரலாம் என்று தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.