மதுரைக்கு இரண்டாவது முறையாக 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி பிற்பகலில் வந்திறங்கினார் காந்தி. ஒத்துழையாமை இயக்கத்துடன், சுதேசி மற்றும் கதர் பரப்புரையை மேற்கொள்ள வந்தவர், மதுரை மேலமாசி வீதியில் இருந்த அவரது ஆதரவாளர் ராம் கல்யாண்ஜி என்பவருக்கு சொந்தமான 251 A என்ற எண் கொண்ட வீட்டில் தங்கினார். குஜராத் பாரம்பரிய உடையில் தலைப்பாகை, வேஷ்டி, சட்டை அணிந்து வந்திருந்த காந்தி, மறுநாள் செப்டம்பர் 22 ஆம் தேதி காலை தனது தலையை மொட்டை அடித்துக் கொண்டு, வேஷ்டி மற்றும் ஒரு துண்டு மட்டும் அணிந்த படி தோன்றினார்.
கூலி தொழிலாளிகள், விவசாயிகளின் ஏழ்மையை உணர்த்தும் வகையில் தன்னுடைய உடையை மாற்றிக்கொள்ள நினைத்துக் கொண்டிருந்த காந்தி, மதுரையில் அந்த முடிவை செயல்படுத்தினார்.
அந்த நிகழ்வின் நூற்றாண்டு விழா நாளை மதுரை காந்தி அருங்காட்சியகம் சார்பில் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
அந்த விழாவில் பங்கேற்க டெல்லியில் இருந்து மதுரை காந்தி அருங்காட்சியகம் வந்த, அவரது பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,"மதுரை எனது தாய் நிலம். இங்கு வந்ததில் ஆசீர்வதிக்கப்பட்டவளாய் உணர்கிறேன். என் குடும்பத்துடன் இருப்பது போல இருக்கிறேன். என் தாயின் ஆசிகள் என்னை சுற்றி இருப்பதாக உணர்கிறேன். இந்த மகத்தான நிலத்திற்கு எனது மரியாதையை காணிக்கை ஆக்குகிறேன்.
ஏழை மக்களின் முகமாக வாழ்ந்த காந்தியின் நூற்றாண்டு விழா நாளை கொண்டாடப்படுகிறது. நாளை ஒரு மிக சிறந்த நாள். இங்கிருந்த விவசாயிகளின் தோற்றம் காந்தியின் ஆடை மாற்றத்திற்கு ஒரு காரணமாகியது. காந்தி ஆடையை மாற்றிக்கொண்டு இமாலயாவிற்கு சந்நியாசம் போகவில்லை, அவர் இங்கேயே இந்த ஏழை மக்களுடன் வாழ்ந்து அவர்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.
எளிமையின் உதாரணமாக வாழ்ந்தவர் காந்தி. காந்தி ஆன்மீகத்தை பற்றி பேசவில்லை, ஆனால் அவரது வாழ்க்கையே ஆன்மீக நெறியை கொண்டிருந்தது.அதே உடையுடன் தான் டெல்லி போன்ற குளிர் நிறைந்த நகரங்களிலும் காந்தி வாழ்ந்தார்.
காந்தியின் பேத்தியாகிய நீங்கள் அவரைப்போல அல்லாமல், அதிக உடை அணிகிறீர்களே என பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். நான் காந்தியை போல அல்ல, அவரிடம் இருந்து மாறுபட்டவள். ஆனால், காந்தி அணிந்திருந்த வெண்மை நிறத்தில் இருந்த பல நிறங்களை கண்டிருக்கிறேன். அவர் உடுத்தியிருந்த வெண்மை நிறம், உண்மை, தத்துவங்கள், வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட பல வண்ணங்களை உணர்த்தி இருக்கிறது. அவரது உடை மாற்றத்திற்கு காரணமாக இருந்த மதுரை மனிதர்களுக்கு என் மரியாதையை செலுத்துகிறேன்" என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.