ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

'நான் செய்த ஒரே தவறு இதுதான்..'- குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான சிவக்குமார் வாக்குமூலம்

'நான் செய்த ஒரே தவறு இதுதான்..'- குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான சிவக்குமார் வாக்குமூலம்

சிவக்குமார்

சிவக்குமார்

குற்றவாளிகளின் வங்கிகணக்குகளை போலீஸார் ஆராய்ந்த போது அதில் தனிப்பட்ட நன் கொடையாளர்கள் கொடுத்த சில ஆயிரங்கள் மட்டுமே வரவு வைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மதுரை குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் போலி ஆவணங்கள் தயாரித்தது மட்டுமே தான் செய்த ஒரே தவறு என்றும், குழந்தைகளின் எதிர்காலத்தை கருதியே தத்து கொடுத்தோம் எனவும் குற்றவாளி சிவக்குமார் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

மதுரை இதயம் அறக்கட்டளை சட்ட விரோதமாக இரண்டு குழந்தைகளை விற்பனை செய்த வழக்கில் காப்பக நிர்வாகிகள் சிவக்குமார், மதர்ஷா உள்ளிட்ட 3 பேர், இடை தரகர்கள் 2 பேர், தம்பதிகள் 4 பேர் என மொத்தம் 9 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

இதில் முதன்மை குற்றவாளிகளான சிவக்குமார், மதர்ஷா ஆகிய இருவரும் தலைமறைவாக இருந்த நிலையில், நேற்று முன்தினம் (ஜூன் 3) மாலை தேனி போடிமெட்டு பகுதியில் கைது செய்யப்பட்டனர். பின்னர் மதுரையில் வைத்து அவர்களிடம் போலீசார் பல மணிநேரம் விசரானை நடத்தினர். அப்போது அறக்கட்டளை உரிமையாளர் சிவக்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிவக்குமார் அளித்த வாக்குமூலம் :"சமுதாயத்திற்காகவே நான் வாழ்கிறேன். என் சுய லாபத்திற்காக அல்ல. அறக்கட்டளைக்கு என நன்கொடையாக வரும் பணத்தை பொதுவான வங்கி கணக்கில் செலுத்தி விடுவோம். காப்பகத்தில் பணியாற்றும் நபர்களுக்கு சம்பளம் தேவைப்படும் போது அதிலிருந்து எடுத்துப் பிரித்துக் கொள்வோம்.இரண்டு குழந்தைகளின் தாயின் சூழலை அறிந்து, அவர்களின் நலன் கருதியே இப்படி ஒரு செயலை செய்தேன்.

ஐஸ்வர்யா மற்றும் ஶ்ரீ தேவியால் அவர்களையே சரியாக கவனித்துக் கொள்ளும் மன நிலையில் இருவரும் இல்லை. எனவே அவர்களிடம் அந்த குழந்தைகள் சரியாக வளர முடியாது என நினைத்தேன். குழந்தைகளின் நிலை அறிந்து அரசு காப்பகத்திற்கும் தகவல் தெரிவித்தேன். ஆனால், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.அதன் பின்னரே குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு கொடுக்க முடிவு செய்தேன்.

1 வயது ஆண் குழந்தையை கொடுத்ததன் மூலம் நகைக்கடை உரிமையாளரிடம் பெற்ற 1.5 லட்சம் ரூபாயில் 50 ஆயிரம் ரூபாயை இடை தரகர் எடுத்துக் கொண்டார். மீதமிருந்த 1 லட்சம் ரூபாயை ஐஸ்வர்யாவின் மற்ற இரு குழந்தைகளின் படிப்பு செலவிற்கு கொடுக்கலாம் என நினைத்தோம்.

2 வயது பெண் குழந்தையை கொடுத்த நபர்களிடம் அறக்கட்டளைக்கு உங்களால் முடிந்ததை செய்ய சொன்னோம். அதனால் அவர்கள் 50,000 ரூபாயை நன்கொடையாக கொடுத்தனர்.

ஐயவர்யாவின் ஒரு வயது ஆண் குழந்தையை கொடுக்கும் முடிவுக்கு அவர்கள் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று தெரியும். அவர்களிடம் இப்படி ஒரு முடிவை கூறியிருந்தாலும் அவர்கள் அனுமதித்திருக்க மாட்டார்கள். ஐஸ்வர்யாவுக்கும் அவர்களால் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. எனவே, தான் குழந்தை கொரோனா பாதித்து இறந்ததாக போலி ஆவணம் தயாரித்து கொடுத்தேன். அது இவ்வளவு பெரிய சிக்கலாக மாறும் என நான் நினைக்கவில்லை.

இந்த விவகாரம் ஆரம்பித்த உடனேயே நான் குழந்தைகளை மீண்டும் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தேன். ஆனால் அது அதற்குள் ஊடங்களில் வெளியாகி விட்டது.

போலியாக இறப்பு சான்றிதழ் உள்ளிட்டவைகளை தயாரித்தது மட்டுமே நான் செய்த பெரிய தவறு. அதை ஒத்துக்கொள்கிறேன்.என்னுடைய வளர்ச்சி பிடிக்காத மற்ற சில அறக்கட்டளை நபர்கள் தான் இதனை பெரிதாக்கி விட்டார்கள்" என கூறியுள்ளார்.

குற்றவாளிகளின் வங்கிகணக்குகளை ஆராய்ந்த போது அதில் தனிப்பட்ட நன் கொடையாளர்கள் கொடுத்த சில ஆயிரங்கள் மட்டுமே வரவு வைக்கப்பட்டுள்ளன. மற்றபடி பெரிய தொகைகளை எதுவும் அதில் இடம்பெறவில்லை என்றும், இதற்கு முன்னர் வேறெந்த குழந்தைகளையும் இவர்கள் விற்றதாக தெரியவில்லை எனவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Ramprasath H
First published:

Tags: Arrest, Crime | குற்றச் செய்திகள், Madurai, Police