• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மதுரையின் முதல் ஒலிம்பிக் வீரர் திருஞானதுரை - கனன்று கொண்டிருக்கும் கனவின் கதை!

மதுரையின் முதல் ஒலிம்பிக் வீரர் திருஞானதுரை - கனன்று கொண்டிருக்கும் கனவின் கதை!

திருஞானதுரை

திருஞானதுரை

21 ஆண்டுகளுக்கு பின்னர் மதுரையில் இருந்து பெண் தடகள வீரர் ரேவதி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது

  • Share this:
மதுரையில் இருந்து முதன் முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தேர்வான திருஞானதுரை, ஏன் இதுவரை இந்தியாவில் யாருமே தடகளத்தில் பதக்கம் வெல்லவே இல்லை எனும் கேள்வியை எழுப்பி உள்ளார்.

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தடகள விளையாட்டு போட்டிகளில் தமிழகம் சார்பில் பங்கேற்கும் 5 வீரர், வீராங்கனைகளில் மதுரையை சேர்ந்த 23 வயது ரேவதியும் ஒருவர். இவர் தான் மதுரையில் இருந்து ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் வீரர் என்று கருதி வந்த நிலையில், இதற்கு 21 ஆண்டுகளுக்கு முன்னரே மதுரையில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று உள்ளார் திருஞானதுரை.

திருஞானதுரை


உசிலம்பட்டி கிராமத்தில் ஒரு தமிழ் ஆசிரியரின் மூன்றாவது மகனாக பிறந்த திருஞானதுரைக்கு சிறுவயதில் இருந்தே விளையாட்டு துறையில் சாதிக்க வேண்டும் என்கிற கனவு. ஆனால், குடும்பத்தினர் அதற்கு அனுமதி அளிக்காததால், சிவகாசியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விளையாட்டு ஆசிரியர் பயிற்சிக்கான துறையில் சேர்கிறார். தடகளத்தில் சாதிப்பதற்கான தகுதிகள் திருஞானதுரையிடம் இருப்பதை கண்டறிந்த, அங்கிருந்த பயிற்சியாளர் முருகவேல், இவருக்கு தடகள பயிற்சி அளிக்க துவங்கினார்.பின்னர், 1995 ஆம் ஆண்டு சென்னையில் மேற்படிப்பும், பயிற்சியும் மேற்கொள்ளும் போதே இவருக்கு ரயில்வேயில் வேலை கிடைத்தது.

Also Read:  இப்போதும் நம்பிக்கையோடு இருக்கிறோம்... ஒலிம்பிக் வீராங்கனை சுபாவின் தாய் நெகிழ்ச்சி

100 மீட்டர் வேக ஓட்டப்பந்தய பிரிவில் தேர்ந்த திருஞானதுரை, ரயில்வே வீரர்களுக்கான சர்வதேச அளவிலான போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்று சாதித்துள்ளார்.வாழ்நாள் சாதனையாளருக்கான முதலமைச்சர் விருதையும் பெற்றுள்ளார்.ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் வானமாக இருக்கும் ஒலிம்பிக் போட்டி வாய்ப்பு திருஞானதுரைக்கும் 2000 ஆம் வருடம் கிடைத்தது. ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் நடைபெற்ற 100 மீட்டர் வேக ஓட்டப்பந்தய பிரிவில் பங்கேற்றார். ஆனால், வெற்றி வாய்ப்பை இழந்தார்.



திருஞானதுரையின் விளையாட்டு கனவுகளுக்கு சிறகு கொடுத்து பறக்க வைத்த காலம், 2002 ஆம் ஆண்டு அவருக்கு எலும்பு தேய்மான நோயை கொடுத்து அவரது சிறகுகளை வெட்டியும் விட்டது. இருந்தும் தொடர்ந்து ஓடினார் திருஞானதுரை.ஆனால், இடுப்பில் ஏற்பட்ட எலும்பு தேய்மானம் காரணமாக அவரால் தொடர்ந்து ஓட முடியாமல், 2005 ஆம் ஆண்டு கனத்த இதயத்துடன் தனது ஓட்டத்திற்கு ஓய்வு அளித்தார்.தற்போது, 47 வயதை கடந்து கொண்டிருக்கும் இவர், மதுரை ரயில்வே கோட்டத்தில் பயணச்சீட்டு பரிசோதகராக பணியாற்றி வருகிறார்.

Also Read: Mary Kom| போட்டிக்கு முன்னால் என்னை ஆடையை மாற்றச் சொன்னது ஏன்?- மேரி கோம் கேள்வி

உடல் ஒத்துழைக்க மறுத்தாலும், மனதில் இன்னமும் கனன்று கொண்டிருக்கும் தன் கனவுக்கு இரை போடும் விதமாக வாரத்தில் இரண்டு நாட்களேனும் மைதானத்தில் தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறார்.மதுரையில் பயிற்சியில் இருந்த திருஞானதுரையை நேரில் சந்திக்கையில்உற்சாகம் குறையாமல் நம்மிடம் பேசினார்.

"21 ஆண்டுகளுக்கு பின்னர் மதுரையில் இருந்து பெண் தடகள வீரர் ரேவதி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது. ஆனால், இடைப்பட்ட 16 ஆண்டு காலத்தில் யாருமே ஒலிம்பிக் தடகள போட்டியில் பங்கேற்கவே இல்லை என்பது மிகுந்த வருத்தம்.அதிலும், தடகளத்தில் இந்தியாவிலேயே இதுவரை யாருமே பதக்கம் வெல்லவே இல்லை என்பது வருத்தத்திலும் வருத்தம்.குறிப்பாக, மதுரை போன்ற மண்ணில் இருந்து வரும் வீரர்களுக்கு இயல்பாகவே மிக வேகமாக ஒடும் திறன் வாய்த்திருக்கும் என்பதும் நாம் கவனிக்க தவறிய அம்சங்கள்" என்றார்.

திருஞானதுரை


தொடர்ந்து பேசியவர், "தமிழகத்தில் இருந்து மிக குறைவாகவே ஒலிம்பிக் போட்டிகளில் வீரர்கள் பங்கேற்கின்றனர். அதற்கு காரணம், ஒலிம்பிக் பயிற்சிக்கு ஏற்ற சரியான மையம் இல்லாததே. பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி, பாட்டியாலா போன்று தமிழகத்திலும் தேசிய விளையாட்டு பயிற்சி மையம் உருவாக்க வேண்டும்.

மேலும், ஒலிம்பிக் போட்டிகளுக்கு தேர்வாகும் இந்திய வீரர்களுக்கு கடைசி ஒரு ஆண்டு வெளிநாட்டு பயிற்சியாளர்கள் வந்து பயிற்சி அளிப்பர். அது, ஏற்கனவே வீரர்கள் பெற்றிருந்த பயிற்சியில் இருந்து நிறைய மாறுபட்டிருக்கும். எனவே, அந்த வெளிநாட்டு பயிற்சியாளர்களின் பயிற்சிகளை ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகும் வீரர்களுக்கு 2-3 ஆண்டுகளுக்கு வழங்க வேண்டும் என்றார்.தேசிய அளவில் வென்று சாதனைகள் படைக்கும் வீரர்களுக்கு உடனே அரசுப்பணி உறுதி செய்வதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

திருஞானதுரை


தன்னுடைய ஒலிம்பிக் கனவின் சிறகுகளுக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து, தன்னைப்போலவே ஏழ்மையில் உள்ள ஏராளமான வீரர்களை ஒலிம்பிக் களத்திற்கு அனுப்புவதற்கு தயார் செய்யும் வகையில், சொந்தமாக ஒரு அகாதமி ஆரம்பிக்க வேண்டும் என்று, 2000 ஆம் ஆண்டு அவரிடம் இருந்த அதே நம்பிக்கையுடன் சொல்லிவிட்டு பயிற்சியை தொடர்ந்தார் திருஞானதுரை.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: